மண்டைதீவு ஒரு குறும் பார்வை!

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சப்த தீவுகளில் ஒரு தீவு ஆகும். யாழ் நகருக்கு அண்மையில் அமைந்துள்ள தீவு. யாழ் குடா நாட்டில் உள்ள 8 தீவுகளில் (எழு தீவு என்பது தவறானது) ஒன்றாகும். இங்கு முக்கிய தொழிலாக மீன்பிடித்தலும் விவசாயமும் காணப்படுகிறது. கிட்டத்தட்ட அங்குள்ள அனைவருமே வயல் நிலங்களுக்கு உரித்துடையவர்களாக காணப்படுகின்றனர்.

மண்டைதீவு புனித இராயப்பர் தேவாலயம் இங்குள்ள கத்தோலிக்கர்களின் வணக்கத்தலமாகும். மண்டைதீவின் மத்தியில் அமைந்துள்ள இந்த ஆலயம், போர்க்காலத்தில் இராணுவ முகாமாக மாற்றப்பட்டிருந்தது. இதனால் இங்கு வழிபாடும் தடைப்பட்டிருந்தது. வருடந்தோறும் ஆனி மாதம் இத் தேவாயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றது.
மண்டைதீவு சைவ மக்களுடைய ஆலயமாக திருவெண்காடு பிள்ளையார் கோயில் உள்ளது. இங்கு தேர் திருவிழா போன்ற சிறப்பு சைவ விழாக்கள் ஆண்டுதோறும் நடைபெறுகின்றன. கந்தசாமி கோவில் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது.
மிக அழகிய கடற்கரைகளும் செல்வச்செழிப்பான வயல் நிலங்களையும் கம நிலங்களையும் தங்களுடைய தேவைகளை தாங்களே நிறைவு செய்த மகக்களைக் கொண்டிருந்தது மண்டைதீவு கிராமமாகும். யாழ் நகருக்கும் கடலுக்கும் நடுவே அமைந்திருந்ததினால் போர்க்காலத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக மண்டைதீவு இருந்தது. கடும் வெய்யில் மற்றும் வரட்சியான காலநிலை இருந்தாலும் கல்வி செல்வம் நிறைந்த குடிமக்களை பெருமளவில் கொண்டிருந்தது. மண்டைதீவு மக்கள் ஆசிரியத்தொழிலிலும் குறிப்பிட்ட வியாபாரத்திலும் சிறந்து விளங்கினர். எனினும் பிற்காலத்தில் மக்கள் பல பகுதிகளுக்கும் பரவிச்சென்றபடியால் அங்குள்ள மக்களின் எண்ணிக்கை கனிசாமான அளவு குறைந்துள்ளது.
மண்டைதீவில் 3 பாடசாலைகள் இருக்கின்றன. மண்டைதீவு மகாவித்தியாயலம் பிள்ளையார் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள பெரிய பாடசாலையாகும். மண்டைதீவு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையும் கார்த்திகேய வித்தியாசாலையும் கிழக்குப் பகுதியில்; அமைந்துள்ளன.
மண்டைதீவில் நன்னீர் வளம் மிகக் குறைவாகவே உள்ளது. தீவின் சில பகுதிகளில் மட்டும் நன்னீர் கிணறுகள் உள்ளன. கடல் நீர் நிலத்தின் கீழாக நிலப்பரப்பிற்குள் ஊடுருவுவதே இதற்கான காரணமாகும்.
மண்டைதீவில் மூலிகைகள் அதிகமான காணப்படுகின்றன. இதனால் சமாதான சூழ்நிலை நிலவிய முன்னைய காலங்களில் யாழ் மாவட்ட கல்லூரிகளின் உயர்தர வகுப்பு மாணவர்கள் இங்கு வந்து தாவரவியல் தொடர்பான ஆராய்சசிகளை மேற்கொள்வதுண்டு.
போரினால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்த மண்டைதீவு கிராமமும்
அங்குள்ள மக்களும்,தற்போது மீண்டும் தம்மை வாழ்வியலோடு இணைத்துக் கொண்டு தமது கிராமத்தை-அபிவிருத்தி செய்ய முனைந்து
வருவது-மறுபடியும் மண்டைதீவுக்கிராமம் பொலிவோடு விளங்கும்
என்ற உண்மையை உணர்த்தி நிக்கின்றது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux