யாழில் அதிகாலை வீடுபுகுந்து பெண்களை தாக்கி கொள்ளை; 3 பெண்கள் உள்ளிட்ட நால்வர் காயம்…

யாழில் அதிகாலை வீடுபுகுந்து பெண்களை தாக்கி கொள்ளை; 3 பெண்கள் உள்ளிட்ட நால்வர் காயம்…

நாடாளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள நிலையில் , யாழில் வீடு புகுந்த கொள்ளை கும்பல் ஒன்று வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளது.
குறித்த கொள்ளை சம்பவத்தில் மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாக பொலிஸார் மோப்ப நாயின் உதவியுடன் மூவரை கைது செய்து தீவிர விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

யாழ்ப்பாணம், சுன்னாகம் கந்தரோடை பகுதியில் வியாழக்கிழமை( 03.06.2021) அதிகாலை 3.00 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கந்தரோடை சங்காவத்தை வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் முகங்களை மறைத்தவாறு முகமூடிகள் அணிந்த வண்ணம் கோடரி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீட்டின் முன் கதவை உடைத்துக்கொண்டு கொள்ளையர்கள் வீட்டினுள்
புகுந்துள்ளனர்.

வீட்டில் அறை ஒன்றில் தூங்கிக்கொண்டிருந்த கணவன், மனைவியை அச்சுறுத்தி மனையின் நகைகளை கொள்ளையிட முயன்ற போது அதற்கு கணவன் எதிர்ப்பு தெரிவித்த வேளை கணவன் மீது கோடாரி உள்ளிட்டவற்றால் தாக்குதல் நடத்தியதுடன் மனைவி மீதும் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

அதனால் அவர்கள் அபாய குரல் எழுப்பிய போது , குறித்த பெண்ணின் தயாரான வயோதிப பெண் “என்னாச்சு?” என கேட்ட போது , வயோதிப பெண்ணின் குரல் வந்த திசையை நோக்கி சென்று சத்தம் போடாதே என அவர் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

அதேவேளை குறித்த பெண்ணின் கழுத்தை நெரித்து அவர் அணிந்திருந்த மூன்று பவுண் பெறுமதியான தங்க சங்கிலி , ஒன்றரை பவுண் கை சங்கிலி , இரண்டு மோதிரம், காப்புக்கள் என்பவற்றை கொள்ளையிட்டனர்.

அதேவேளை வீட்டின் மற்றுமொரு அறையில் தூங்கிக்கொண்டிருந்த குறித்த பெண்ணின் சகோதரி சத்தம் கேட்டு வெளியே வந்த போது அவரை மிரட்டி, தாக்கியும் அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி , மோதிரம், காப்பு என்பவற்றையும் கொள்ளையிட்டு தப்பி சென்றனர்.

தப்பி செல்லும் போது வீட்டாரின் தொலைபேசிகளை பறித்து சென்று வீட்டிலிருந்து சற்று தொலைவில் உள்ள ஆட்களற்ற காணிக்குள் வீசி விட்டு சென்றுள்ளனர்.

கொள்ளையர்கள் தப்பி சென்றதும் , அயலவர்கள் உதவியுடன் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்ததுடன் , பொலிஸ் மோப்ப நாய் பிரிவுக்கு அறிவித்து விசாரணைகளை துரிதப்படுத்தினர்.

மோப்ப நாயின் உதவியுடன் , வீட்டுக்கு அருகில் இருந்த காணிக்குள் இருந்து வீட்டாரின் கைத்தொலைபேசிகள் மீட்கப்பட்டன.

அதனை தொடர்ந்து மோப்ப நாயின் உதவியுடன் வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் வசிக்கும் மூவரை மோப்ப நாய் அடையாளப்படுத்தியதன் அடிப்படையில் அம்மூவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களையும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux