கடல் சீற்றத்தால் முற்றாக சிதைந்து போன தனுஷ்கோடி நகரின் நினைவுகள்……

கடல் சீற்றத்தால் முற்றாக சிதைந்து போன தனுஷ்கோடி நகரின் நினைவுகள்……

தனுஷ்கோடி சிதைவுகள்
Image captionஅழிந்த தேவாலயம்.

கடல் சீற்றத்தால் 54 ஆண்டுகளுக்கு டிசம்பர் 23க்கும் 24-க்கும் இடைப்பட்ட நள்ளிரவில் ஏற்பட்ட மிகப்பெரிய கடல் சீற்றத்தில் ராமேஸ்வரத்தை அடுத்து தனுஷ்கோடி நகரமே அழிந்தது. அந்தப் பேரழிவின் நினைவு நாள் இது.

அந்த சிதைவுகளின் மிச்சம் மட்டுமே அந்த கண்ணீர் நினைவுகளின் சாட்சியாக இன்றும் உள்ளன. ராமேஸ்வரத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சிலர் தனுஷ்கோடியையும் பார்க்க வருகின்றனர்.

அவர்களுக்கு அந்த சோக வரலாற்றின் செய்தியை இந்த சிதிலங்களே எடுத்துச் சொல்கின்றன.

வரலாற்றுக் காலத்திலும், பிரிட்டிஷ் இந்தியாவிலும் வணிக மையமாக விளங்கிய துறைமுக நகரம் தனுஷ்கோடி. 1964 டிசம்பர் 23 ஆம் தேதி வங்கக்கடலில் உருவான புயல் நள்ளிரவு 12.30.க்கு ஆழ்ந்த உறக்கத்திலிருந்த ஆயிரக்கணக்கானோர் உயிரை பறித்தது. மறுநாள் அதிகாலை வரை நீடித்த 120 கி.மீ. வேகத்தில் வீசிய புயலால் கடல்நீர் ஊருக்குள் புகுந்து தனுஷ்கோடியை அழித்தது.

தனுஷ்கோடி சிதைவுகள்
Image captionஅஞ்சல் நிலையம்.

சென்னையில் இருந்து தனுஷ்கோடிக்கு ரயிலில் ஆடல்பாடலுடன் சுற்றுலா வந்த மருத்துவக்கல்லூரி மாணவிகள் உட்பட பயணிகள் அனைவரும் ரயில் பெட்டிகளில் சிக்கி உருத்தெரியாமல் அழிந்தனர். கடலோரத்தில் இருந்த ஆயிரக்கணக்கான மீனவர்களின் குடிசைகளும் அழிந்து போயின.

கோயில்களிலும், கட்டடங்களிலும், ரயில்நிலையத்திலும், எஞ்சியவர்கள் நாட்டுப் படகில் மண்டபம் முகாமுக்கு தப்பிச் சென்றனர். தற்போது இடிந்து போன, சேதமடைந்த சில கட்டிடங்கள் மட்டுமே புயலின் எச்சங்களாய் தற்போது இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சோகத்தை நினைவூட்டி வருகின்றன.

அழிந்த தேவாலயம்.
Image captionஅழிந்த தேவாலயம்.

1964 க்கு பிறகு இது ஆளரவமற்ற தீவாக காட்சியளித்தது. மனிதர்கள் வசிக்கத் தகுதியற்ற இடமாக இதனை அறிவித்தது அரசு. இருபது வருடங்களுக்குப் பிறகு அகதிகள் வருகை, பாதுகாப்புத் துறையின் கண்காணிப்பு என பதற்றமான பிரதேசமாக தனுஷ்கோடி மாறியது.

புயலின் அச்சுறுத்தல் இருப்பினும் பல நூற்றுக்கணக்கான மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் தற்போதும் தனுஷ்கோடியில்தான் உள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சிதைந்த கட்டடங்களையும், அடிப்படை வசதியின்றி அல்லல்படும் அப்பாவி மீனவர்களின் வாழ்க்கைத் துயரத்தையும் மனதில் சுமந்து கொண்டுதான் செல்கின்றனர்

தனுஷ்கோடிக்கு ரூ.55 கோடி செலவில் புதிதாக முகுந்தராயர் சத்திரம் முதல் அரிச்சல்முனை வரை மத்திய அரசு சாலை போட்டு அது, 2017-ம் ஆண்டு ஜுலை மாதம் 27 ந் தேதி இராமேஸ்வரம் வருகை தந்த பாரத பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. அதில் இருந்து அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் அரிச்சல் முனை வரை செல்கின்றன. இவற்றைப் பயன்படுத்தி சுற்றுலாப் பயணிகள் தற்போது புயலின் சிதைவுகளை பார்த்துச் செல்கின்றனர்.

இது ஒரு புறமிருக்க மத்திய அரசு தற்போது ஆசிய வங்கி உதவியுடன் ரூ 24,000 கோடியில் தனுஷ்கோடியிலிருந்து இலங்கைக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க முடிவெடித்துள்ளது. இந்த பணி தொடங்குமானால் மீண்டும் 1964-க்கு முன் போல் தனுஷ்கோடிக்கு குடியிருப்புகள் அரசு அலுவலகங்கள் ஆகியவை வரும்.

வாட்டர் டேங்க் பிரிட்ஜ்.

தனுஷ்கோடி வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்போது போதிய வசதி இல்லை. குடும்பத்துடன் வரும் பயணிகள் கடலில் விளையாடும்போது அசம்பாவிதம் ஏற்பட்டால் அவர்களைக் காப்பாற்ற போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லை. கழிவறை வசதிகள்கூட இங்கு இல்லை.

சிதிலமடைந்த கட்டடங்களை நினைவுச் சின்னங்களாக, உள்ளது உள்ளபடி பராமரிக்கவேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுகின்றன.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய நாகராஜ் “நான் சிறு வயதில் இருந்து தனுஷ்கோடி பகுதியை பார்த்து வருகிறேன். 1964 புயலில் சேதமடைந்த பல கட்டடங்கள், ஒவ்வோர் ஆண்டும் மேலும் மேலும் சிதிலமடைந்து வருகின்றன.

குறிப்பாக கடந்த ஆண்டு புயலால் பாதிப்படைந்த தேவலாயம் இந்த ஆண்டு மேலும் சேதமடைந்துள்ளது. இதனை அரசு கண்டு கொள்ளவே இல்லை இந்த நிலை தொடருமானால் வரும் எதிர்கால சந்ததியினருக்கு தனுஷ்கோடி குறித்த வரலாறு தெரியாமலே போய்விடும் என்று தெரிவித்தார்.

அஞ்சலக கட்டடம்.
Image captionஅஞ்சலக கட்டடம்.

1964 ஆம் ஆண்டு புயலை நேரில் பார்த்த செல்லதுரை பிபிசி தமிழிடம் பேசுகையில் “19964 டிசம்பர் மாதம் 23ல் வங்கடலில் புயல் வீசியது. பகல் நேரத்தில் சூறைகாற்றுடன் கன மழை பெய்யத் தொடங்கியது. அப்போது படப்பிடிப்புக்காக ஜெமினி கணேசனும் பத்மினியும் தனுஷ்கோடி வந்திருந்தனர். அவர்களிடம் நாங்கள் “கடல் சீற்றமாக உள்ளது. உடனே இராமேஸ்வரம் திரும்பி செல்லுங்கள்” என்று கூறியதையடுத்து அவர்கள் புறப்பட்டு சென்றனர். இல்லையெனில் அந்தப் புயலில் இருவரும் சிக்கியிருக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.

தனுஷ்கோடி சிதைவுகள்
Image captionதனுஷ்கோடி சிதைவுகள்

“அப்போது எனக்கு ஆறு வயது. புயல் வரும் என்றார்கள். ஆனால் இவ்வளவு பெரிய புயல் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. 24ம் தேதி அதிகாலை 3 மணியளவில் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பேய்க் காற்று அடித்ததில் எங்களது குடிசைகள் அனைத்தும் சேதமடைந்து கடல் நீர் வீடுகளில் புகுந்தது. பின்னர் அதே வேகத்தில் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி சூறாவளி வீசியதில், எங்கள் கண் முன்னே தனுஷ்கோடி முற்றிலும் அழிந்துபோனது” என தனது அனுபத்தை பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார் மஹாலிங்கம்.

தனுஷ்கோடி புயலில் இருந்து தப்பிய அம்பிகாபதி பிபிசி தமிழிடம் பேசுகையில் “சென்னையில் இருந்து தனுஷ்கோடிக்கு ரயிலில் ஆடல்பாடலுடன் சுற்றுலா வந்த மருத்துவக்கல்லூரி மாணவிகள் உள்ளிட்டப் பயணிகள் அனைவரும் புயலில் சிக்கி உருத்தெரியாமல் அழிந்தனர். ரயில் புயலில் சிக்கியது மக்களுக்குத் தெரியவில்லை. இரண்டு தினங்களுக்கு பின் ரயிலில் உயிரிழந்தவர்களின் பிணங்கள் கடற்கரையோரம் ஒதுங்கிய பிறகே இது பற்றித் தெரியவந்தது” என்றார்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux