மரித்த ஆத்மாக்கள் தினத்தை முன்னிட்டு-அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள சேமக்காலையில் கடந்த சனிக்கிழமை மாலை அல்லைப்பிட்டி பங்குத்தந்தையினால் விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். மரித்த தமது உறவுகளை வணங்குவதற்காக-அதிகமான மக்கள் அல்லைப்பிட்டி சேமக்காலைக்கு வந்திருந்ததாகவும்-அவர்கள் கல்லறைகளில் மலர்கள் செலுத்தி தீபம் ஏற்றி தமது உறவுகளை நினைந்து உருகிய நின்றனர் என்றும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
உலகா, உயிரா, உறவா, வாழ்வா… எது நிரந்தரம்? கல்லறைகளைக் காணும் போது, கண்முன் வாழ்ந்தவர்கள் மடியும் போது, காரண காரியங்கள் அறியமுடியாமல் திக்குமுக்காடும்போது கேள்விமேல் கேள்விகள் நெஞ்சைக்கதறவைத் தட்டி சோர்வுறும்போது, நிலையற்ற வாழ்வின் ஒலிகள் கேட்பதில்லையா? எதுதான் நிரந்தரம்?
மனிதன் மண்ணில் மடிந்து காணாமர்போவதற்கென பிறப்பெடுத்தவன் அல்ல.
மண்ணுக்குள் மடியும் குப்பைகள் கூட உரமாய் உருப்பெறுவதில்லையா? மெழுகுதிரிகளும் கசிந்துருகி காணாமற்போய் தியாகச் சுடராய் நிலைப்பதில்லையா? மனிதன் மட்டும் என்ன விதிவிலக்கா?
இலையுதிர்காலமாய் கல்லறைகள் பரந்து விரிந்து கிடக்கின்றன.
மண்ணே ஒரு மௌனம், அதற்குள்ளேயே எத்தனை மௌனங்கல் முடங்கிப் போய் கிடக்கின்றன?
மன ரணங்கள் தந்த மரணங்களின் சாட்சிகள் அவை. கருங்கல் சமாதிகளைக் கண்ணீர் விட்டு கழுவுகிறோம்.
நம் காயங்கள், மனக் காயங்கள் என்ன சொல்கின்றன? கல்லறையில்லா உலகைக் கனவு காண்கின்றனவா?
மரணம் இல்லா மாற்று வாழ்வுக்குத் துடிக்கின்றனவா?
மரணம் மரித்தாலே உயிர்கள் சிறக்கும்.
ஆம் மரணம் குறித்த நம் தப்பெண்ணங்கள் மரித்தால் மட்டுமே வாழ்வு நிலைபெறும் நமக்குள்.
கொஞ்சம் எண்ணிப்பார்ப்போம்.
மனித இயல்பின் பகையா மரணம்?
இயல்புவாழ்வுக்குச் சாவென்பது வன்முறையா?
வெறுமையை, ஏகாந்தத்தை விட்டுச் செல்வது மரணமா?
தாமதப்படுத்தியும், தவிர்க்கமுடியாத ஓர் எதார்த்தத்தை என் ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறோம்?
இந்த உலகே சதம் என நாம் தொடரத்தான் முடியுமா?
நம் பெயரையும் புகழையும் எடுத்துக்கொண்டுதான் போக இயலுமா?
பொருளும், உறவும் நம் கூட துணை வருமா? இல்லையே.
நாம் விட்டுச் செல்ல ஒன்றிருக்கிறது. நாம் வாழ்ந்தோம் என்ற அடையாளம். பிறர் வாழ்வில் பொறிக்கப்படும் அடையாளம். பிறருக்காய் வாழ்வதில் நாம் விட்டுச்செல்லும் அடையாளம். அதுபோதும்.
அது சொல்லும் நாம் கல்லறைக்கே வாழவில்லை, கடவுளுக்கே வாழ்கிறோம் என்று.