யாழ் மாவட்ட வட மாகாணசபை உறுப்பினர் திரு. என். கனகரட்ணம் விந்தன் மண்டைதீவில் மாணவர்களுக்கு ரூபா இரண்டு இலட்சத்து முப்பது எட்டு ஆயிரம் ரூபாவிற்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்தார்
மண்டைதீவில் இருந்து பல பாடசாலைகளுக்குச் சென்று கல்வி கற்கும் வறியநிலை மாணவர்களுக்கும், மண்டைதீவு றோ.க.வித்தியாலயத்தில் இருந்து சென்ற ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும் மற்றும் அவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர் திருமதி வசீகரன் கபிலராணி அவர்களுக்கும் ரூபா இரண்டு இலட்சத்து முப்பது எட்டு ஆயிரம் ரூபாவிற்கு 17 துவிச்சக்கர வண்டிகளை யாழ் மாவட்ட வட மாகாணசபை உறுப்பினர் திரு. என். கனகரட்ணம் விந்தன் வழங்கி வைத்தார்.
15.10.2017 அன்று யாழ். மண்டைதீவு றோ.க. வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் திரு. யோண் கொலின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக தீவக மறைக்கோட்ட குருமுதல்வரும் அல்லைப்பிட்டி – மண்டைதீவு பங்குத்தந்தையுமாகிய அருட்பணி மனுவேற்பிள்ளை டேவிட் அடிகளார் அவர்களும், சிறப்பு விருந்தினராக அகில இலங்கை சமாதான நீதவான் திருமதி அமிர்தநாதர் தங்கராணி அவர்களும், இன்னும் ஜே.7 மாதர் சங்கத் பிரதிநிதி திருமதி ஆன்சலா, ஜே.8 மாதர் சங்கத் செயலாளர் திருமதி யோகராணி, ஜே.9 மாதர் சங்கத் தலைவி திருமதி அல்போன்சம்மா, புனித பேருதுவானவர் ஆலய அருட்பணி சபைச் செயலாளர் திரு. இமர்சன், புனித பேதுருவானவர் கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் திரு. விஜயன், புனித பேதுருவானவர் கல்விக் குழுச் செயலாளர் திரு. ம.இயூயின், யாழ். மண்டைதீவு றோ.க.வித்தியாலய அபிவிருத்திக் குழு செயலாளர் திருமதி இரட்ணராணி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்
சிறப்பாக இவ்வாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ். மண்டைதீவு றோ.க. வித்தியாலயத்தில் இருந்து பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 98 வீதமான மாணவர்கள் 162 புள்ளிகளில் இருந்து 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுக்கொண்டதைப் பாராட்டி அவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர் திருமதி ஜெயராஜ் டயானா அவர்களுக்கான துவிச்சக்கரவண்டி கொள்வனவுக்காக, இந் நிகழ்வினைச் சிறப்பிக்க யாழ் மாவட்ட வட மாகாணசபை உறுப்பினர் திரு. என். கனகரட்ணம் விந்தன் அவர்களுடன் வருகை தந்திருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரமுகர் திரு. ஜீவன் (பிரித்தானியா), வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திரு. லவன் (பிரித்தானியா) ஆகியோர் இணைந்து ரூபா பதினான்காயிரத்தினை வழங்கி வைத்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் விருந்தினர்கள் மாலை அணிவித்து அழைத்து வரப்படுவதனையும், யாழ் மாவட்ட வட மாகாணசபை உறுப்பினர் திரு. என். கனகரட்ணம் விந்தன், தீவக மறைக்கோட்ட குருமுதல்வரும் அல்லைப்பிட்டி – மண்டைதீவு பங்குத்தந்தையுமாகிய அருட்பணி மனுவேற்பிள்ளை டேவிட் அடிகளார், அகில இலங்கை சமாதான நீதவான் திருமதி அமிர்தநாதர் தங்கராணி ஆகியோர் உரையாற்றுவதனையும், மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைப்பதனையும், ஆசிரியருக்கான துவிச்சக்கர வண்டிக்காண அன்பளிப்புப் பணத்தை அகில இலங்கை சமாதான நீதவான் திருமதி அமிர்தநாதர் தங்கராணி அவர்கள் பெற்றுக் கொள்வதனையும் ஏனைய நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.