ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்தாலும் மகிழ்ச்சியாக எப்படி வாழ்வது என்பதை ஈழத்தமிழர்கள் கற்றுக்கொள்ளவே இல்லை.இரா துரைரட்ணம்!

ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்தாலும் மகிழ்ச்சியாக எப்படி வாழ்வது என்பதை ஈழத்தமிழர்கள் கற்றுக்கொள்ளவே இல்லை.இரா துரைரட்ணம்!

யூலை ஓகஸ்ட் மாதங்கள் ஐரோப்பிய மக்களுக்கு முக்கியமானவையான காலங்களாகும். இந்த மாதங்களில் வரும் கோடைகால விடுமுறையை மகிழ்ச்சியாக கழிப்பதற்காக உல்லாசத்துறைக்கு பிரசித்தி பெற்ற இடங்களையும் நாடுகளையும் நாடி செல்வதை மேற்குலக நாடுகளில் உள்ள மக்கள் வழமையாக கொண்டுள்ளனர்.

இலங்கையை போன்ற ஆசிய நாடுகளை போலன்றி ஐரோப்பிய நாடுகளில் வழமையான விடுமுறை நாட்களை தவிர நான்கு முதல் 6 கிழமைகள் வரை விடுமுறைகள் வழங்கப்படுகிறது. சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் வருடத்தில் மேலதிகமாக ஒரு மாத சம்பளமும் வழங்கப்படுகிறது.

இலங்கையர்களை போல சொத்து வீடு நகை நட்டு வாங்கி சேர்க்கும் பழக்கம் ஐரோப்பியர்களிடம் கிடையாது. அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அல்லது அடுத்த சந்ததிக்கு என சொத்து சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவதும் இல்லை. உழைப்பு, விடுமுறைகாலத்தில் உல்லாசமாக பொழுதை கழிப்பது, என வாழும் காலத்தில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என கொள்கையை கொண்டவர்கள்.

கோடைகால விடுமுறை அல்லது தமக்கு கிடைக்கும் விடுமுறைகளின் போது வேறு நாடுகளுக்கு சென்று உல்லாசமாக பொழுதை கழிப்பதை வழங்கமாக கொண்டுள்ளனர். இதனால் தான் சுவிட்சர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகள் மகிழ்;ச்சியாக வாழும் நாடுகள் என்ற பட்டியலில் இணைந்து கொள்கின்றன.
உலகில் உள்ள 155 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. சுதந்திரம், பெருந்தன்மை, சுகாதாரம், சமூக ஆதரவு, வருமானம், நம்பகமான ஆட்சி என்பனவற்றை அடிப்படையாக வைத்து மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது.

இதில் உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதலாம் இடத்தில் நோர்வையும், இரண்டாம் இடத்தில் டென்மார்க்கும், மூன்றாம் இடத்தில் ஐஸ்லாந்தும், நான்காம் இடத்தில் சுவிட்சர்லாந்தும், ஐந்தாம் இடத்தில் பின்லாந்தும் உள்ளன.

மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் வந்திருக்கும் நாடுகள் அனைத்தும் ஐரோப்பிய நாடுகள் தான்.

இந்த நாடுகளில் உள்ள மக்கள் தாங்கள் வாழும் நாடுகளில் மட்டுமல்ல விடுமுறைக்கு செல்லும் நாடுகளிலும் மகிழ்ச்சியாக பொழுதை கழித்து திரும்புகிறார்கள்.

மகிழ்ச்சியான நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா? விடுமுறைக்கென சென்று சந்தோசமாக திரும்புகிறார்களா என்பதை ஆராய்வதே இப்பத்தியின் நோக்கமாகும்.

மேற்குலக நாடுகளில் இருவகையான ஈழத்தமிழர்கள் வாழ்கிறார்கள்.

1. உயர்கல்வி மற்றும் தொழிற்தகமையுடன் மேற்குலக நாடுகளில் குடியேறியவர்கள். உதாரணமாக வைத்தியர்கள், பொறியியலாளர்கள், கணக்காளர்கள், தொழில்சார் நிபுணர்கள். இவர்கள் ஆங்கில மொழி பேசும் பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, ஒஸ்ரேலியா, நியுசிலாந்து ஆகிய நாடுகளிலேயே இவர்கள் பெரும்பாலும் குடியேறினர்.

2. இரண்டாவது வகையினர் 1983ஆம் காலப்பகுதியின் பின் ஐரோப்பிய நாடுகள் எங்கும் குடியேறியவர்கள். இவர்கள் தொழில்தகமையோ மொழி அறிவோ கொண்டவர்கள் அல்ல. அந்தந்த நாடுகளில் குடியேறி அந்நாட்டு மொழியை ஓரளவு புரிந்து கொண்டு தொழில்பயிற்சி அற்ற தொழில்களை செய்து வாழ்பவர்கள்.

இலண்டன் போன்ற நாடுகளில் முதலாவது தரப்பினர் இரண்டாவது தரப்பினருடன் சேர்வது கிடையாது. இரண்டாவது தரப்பினரை அகதிகள் என்ற அடைமொழி கொண்டே அழைப்பார்கள்.

முதலாவது தரப்பினரின் இரண்டாவது மூன்றாவது தலைமுறையினர் தாங்கள் தமிழர்கள் என்றோ அல்லது தமது தாய்நாடு இலங்கை என்றோ இப்போது வெளிக்காட்டி கொள்வதில்லை. ஐரோப்பிய வாழ்க்கை மற்றும் கலாசாரத்துடன் சங்கமமாகி விட்டார்கள். லண்டன் போன்ற நாடுகளில் முதலாவது தரப்பினர் இரண்டாம் தரப்பினரின் திருமணம், பிறந்தநாள், பூப்புனித நீராட்டு விழா போன்ற வைபவங்களில் கலந்து கொள்வது கிடையாது. அவர்கள் இப்போது இலங்கைக்கு வருவதும் கிடையாது.

இரண்டாம் தரப்பில் உள்ளவர்கள் தான் மிகவும் பரிதாபத்திற்கு உரியவர்கள். அவர்களால் மேற்குலக நாடுகளின் கலாசாரங்களுடன் ஒட்டிக்கொள்ளவும் முடியாமல் இரண்டும் கெட்டான் நிலையில் வாழ்கின்றனர். தாங்கள் மகிழ்ச்சியாக வாழ்வதாக பிறருக்கு காட்டிக் கொண்டாலும் திரைக்கு பின்னால் இருக்கும் சோகங்களும் கவலைகளும் சொல்ல முடியாதவை.

பூப்புனித நீராட்டு விழாக்கள், பிறந்தநாள் விழாக்கள்.

இலங்கையில் பெண்பிள்ளை ஒன்று பருவமடைந்து விட்டால் 31ஆம் நாள் அல்லது 41ஆம் நாள் சமத்திய சடங்கு செய்வார்கள். அதனை தண்ணீர்வார்ப்பு என்றும் அழைப்பர். 6மாதம் கழித்து அல்லது ஒரு வருடம் கழித்து அச்சடங்கை செய்வது கிடையாது.

ஆனால் ஐரோப்பிய நாட்டவர்கள் தங்கள் பெண்பிள்ளை ஒன்று பருவம் அடைவது பற்றி வெளியில் யாருக்கும் காட்டிக்கொள்வதில்லை. சிலவேளையில் அப்பிள்ளையின் தாய்க்கு மட்டும் தெரியலாம்.

ஆனால் ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் தமிழர்கள் தங்கள் பிள்ளை பருவமடைந்து விட்டால் முதலாம் தண்ணி வார்ப்பு என வீட்டில் செய்வார்கள். அதன் பின் 6மாதம் ஒரு வருடம் இரண்டு வருடம் கழித்து பிரமாண்டமான விழாவாக செய்வார்கள். வட்டிக்கு கடன் எடுத்து மண்டபம் எடுத்து விழா எடுக்கும் ஆரவாரத்தை கண்டு ஐரோப்பிய மக்கள் திகைத்து கொள்வார்கள்.

பருவமடைந்த பிள்ளையை ஹெலி கொப்டரில், குதிரை வண்டியில், ஆடம்பர காரில் ஏற்றிச்செல்லும் விநோத காட்சிகளும் இடம்பெறும். ஏன் தனக்கு விழா நடந்தது என தன் பள்ளித்தோழிகளுக்கு விளக்க முடியாமல் திணறும் பரிதாபங்களும் இடம்பெறும்.

இந்த விழாக்களை சில நோக்கங்களுக்காக தமிழர்கள் செய்கின்றனர். தாங்கள் இப்படிபட்ட வைபவங்களுக்கு சென்று கொடுத்த பணத்தை மீள அறவிட்டு கொள்வதற்காகவும், தங்கள் பகட்டை காட்டிக்கொள்வதற்காகவும், இதனை செய்கின்றனர். பெரும்பாலானவர்கள் கடன்பட்டே இத்தகைய வைபவங்களை நடத்துகின்றனர்.

சிலர் தாம் வாழும் ஐரோப்பிய நாடுகளில் தமது பிள்ளைகளுக்கு பூப்புனித நீராட்டு விழா செய்து விட்டு இரண்டு மூன்று வருடங்கள் கழித்து இலங்கைக்கு விடுமுறையில் செல்லும் போது அங்கும் பூப்புனித நீராட்டு விழாவை நடத்தி வருகின்றனர். பிள்ளை நவம்பர், டிசம்பர் மாதங்களில் பருவத்திற்கு வந்தாலும் அடுத்த கோடை விடுமுறையில் தான் பூப்புனித நீராட்டு விழாவை நடத்துவார்கள்.

பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இப்போது இலங்கையிலும் பிரபல்யமாகி வருகிறது. எனினும் ஐரோப்பாவில் உள்ள தமிழர்களை போல விசித்திரமான கொண்டாட்டங்கள் நடைபெறுவதில்லை.

உதாரணமாக யூன் 21ஆம் திகதி பிறந்த தினமாக இருந்தால் அன்றைய தினம் அதை செய்வதை விட சனி, ஞாயிறு, அல்லது ஒரு மாதம் கழித்து அல்லது 6 மாதம் கழித்து பிறந்த நாள் விழாவை நடத்துவார்கள். ஒருவரின் பிறந்த திகதியில் தான் பிறந்தநாள் வரும். யூன் 21 பிறந்தவருக்கு எப்படி ஓகஸ்ட் மாதத்தில் பிறந்த நாள் விழாவை கொண்டாட முடியும்? இதற்கான சூத்திரம் ஐரோப்பாவில் உள்ள தமிழர்களுக்கு தான் தெரியும்.

எனக்கு தெரிந்த ஒருவர் தனது மகளின் 18ஆவது பிறந்த நாளை கொண்டாடுவதற்கு திட்டமிட்டார். இரண்டு வருடம் கழித்து 18ஆவது பிறந்தநாளை மண்டபம் எடுத்து பிரமாண்டமாக கொண்டாடினார். 20வயது எப்படி 18வயதாகும்?

தாங்கள் வாழும் நாடுகளில் மகிழ்ச்சியாக வாழ்வதாக கட்டிக்கொள்வதற்காக கடன்பட்டு பல காரியங்களை செய்வார்கள். அவற்றில் ஒரு சிலதான் நான் மேலே சொன்ன விடயங்கள்.

ஐரோப்பிய நாடுகளில் உள்ள மக்கள் தங்கள் கோடைகால விடுமுறையை கழிப்பதற்காக தாய்லாந்து இலங்கை மாலைதீவு போன்ற நாடுகளுக்கு சென்று மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பார்கள்.

கோடைகால விடுமுறை என்றதும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழர்களும் அந்த விடுமுறை காலத்தில் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தமது தாய் நாடான இலங்கைக்கு செல்வார்கள்.
ஐரோப்பியர்கள் ஆசிய நாடுகளில் விடுமுறைகளை கழித்து விட்டு மகிழ்ச்சியாக திரும்புவார்கள்.

ஆனால் இலங்கையர்கள் தங்கள் தாய்நாட்டிற்கு விடுமுறையை கழிப்பதற்காக சென்று மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தொலைத்து விட்டே திரும்புவார்கள்.

கோடைகால விடுமுறைக்கு தமது ஊருக்கு செல்லும் இலங்கையர்களில் பெரும்பாலானவர்கள் கடன்பட்டே செல்வார்கள். சிலர் தனிநபர்களிடம் அறாவட்டிக்கு பணத்தை பெற்று செல்வார்கள்.

இங்கிருந்து புறப்படுவதற்கு முதல் உடுப்பு சொக்லட் மற்றும் தங்கள் உற்றார் உறவினர்களுக்கு அன்பளிப்பு பொருட்களை வாங்கி கட்டி அதை கொண்டு போய் சேர்ப்பதற்கு அல்லோலப்படுவார்கள்.

ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழ் பெண்கள் கல்யாணம், பூப்புனித நீராட்டுவிழா பிறந்த நாள், கோயில் திருவிழா போன்ற வைபவங்களுக்கு ஒரு முறை உடுத்த சேலைகள் பஞ்சாபிகளை மீண்டும் போட மாட்டார்கள். அதனை ஐரோப்பாவில் உள்ள ஏனைய நாடுகளில் உள்ள தங்களின் உறவினர்களுக்கு அனுப்புவார்கள். உதாரணமாக ஒரு சேலை சுவிட்சர்லாந்திலிருந்து ஜேர்மனி, பிரான்ஸ் என போய் இறுதியாக இலங்கைக்கு கோடைகால விடுமுறைக்கு செல்லும் போது கொண்டு செல்வார்கள். அங்கு அவர்கள் இது பழைய சேலை என கண்டறிந்தால் பழுசுகளையா எங்களுக்கு தருகிறீர்கள் என தூக்கி எறியும் சம்பவங்களும் உண்டு.

இலங்கையில் இறங்கியதும் தாங்கள் வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறோம் என காட்டுவதற்காக சில காரியங்கள் செய்வார்கள். கழுத்திலும் கையிலும் இரண்டு மூன்று சங்கிலியை போட்டுக்கொள்வார்கள். இங்கிருந்து மூன்று கறுப்பு கண்ணாடிகளை வாங்கி செல்வார்கள். ஒன்றை தலையில் போடுவார்கள். மற்றதை கண்ணுக்கு போடுவார்கள். இன்னொன்றை ரி சேட்டில் கொழுவி விடுவார்கள். சிலர் நான்காவது கண்ணாடியை பின்பக்க இடுப்பிலும் கொழுவிக்கொள்வார்கள். பின்னால் நிற்பவர்களும் தங்களை வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என அடையாளம் காண்பதற்காக.

ஊரிலிருந்து இரண்டு மூன்று பேர் இவர்களை அழைத்து செல்ல வானில் வருவார்கள். கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து இவர்களின் அலப்பறைகள் ஆரம்பமாகும்.

ஊருக்கு சென்றதும் உறவினர்கள் அயலவர்கள் நண்பர்களின் வீடுகளுக்கு செல்லும் இவர்கள் தாங்கள் மிக வசதியாக வாழ்கிறோம் என்பதை காட்டுவதற்காக பணமும் அன்பளிப்பு பொருட்களையும் வழங்குவார்கள். இவர்கள் போனதும் பிச்சைக்காசு தந்து விட்டு போகிறார்கள் என நையாட்டி பண்ணிய சம்பவங்களும் உண்டு.

தாங்கள் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறோம் என காட்டிக்கொள்வதற்காக இவர்கள் ஆட்டங்களை கண்டு அயலவர்கள் தங்களுக்குள் நையாண்டி செய்து சிரித்து கொள்வார்கள்.
லண்டன் கனடா போன்ற இடங்களில் இருந்து வருபவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாது என பெருமையாக சொல்லிக்கொள்வார்கள்.

ஆடு வெட்டி சாப்பாடு போட்டு வான் பிடித்து கசோனா, பாசிக்குடா, சீனங்குடா என அயலவர்களையும் கூட்டிக்கொண்டு சுத்திய பின் வட்டிக்கு எடுத்து போன பணமும் இரண்டொரு வாரங்களில் முடிந்து விடும். இவர்களின் கை காய்ந்து விட்டது என அறிந்து கொண்டதும் இவர்களிடம் ஒட்டிக்கொண்டு திரிந்தவர்களும் மெல்ல மெல்ல கழண்டு விடுவார்கள். கந்தசாமி அண்ணை வெளிநாட்டில இருந்து வந்திருக்கிறாராம், ஆளுக்கு 10ஆயிரம் கொடுக்கிறாராம் என கேள்விப்பட்டு வீட்டில் குவியும் சனத்தை கண்டு ஓடி ஒளியும் நிலையில் மூன்றாவது வாரம் கழியும். திரும்பவும் இங்கு தொடர்பு கொண்டு வட்டிக்கு பணம் பெற்றே பிந்தி வருபவர்களுக்கு 5ஆயிரம் 6ஆயிரம் பணத்தை கொடுக்க இந்த பிச்சைக்காசு எங்களுக்கு எதுக்கு என தூக்கி எறிந்து விட்டு போக அவமானப்பட்ட நிலையில் கொழும்பு திரும்புவார்கள்.

கடந்த கோடை விடுமுறைக்கு இலங்கைக்கு சென்ற ஒருவர் திரும்பி வந்ததும் 10ஆயிரத்திற்கு குறைய அங்கு யாரும் வாங்க மாட்டார்கள் என சொன்னார். ஏன் பணத்தை கொடுக்க வேண்டும் என கேட்ட போது வெளிநாட்டில் இருந்து சென்றால் அங்கு உற்றார் உறவினர்கள் நண்பர்கள் தெரியந்தவர்கள் அயலவர்கள், வீட்டிற்கு வருபவர்கள் என அனைவருக்கும் குறைந்தது 10ஆயிரம் வீதம் பணம் கொடுக்க வேண்டும். வெளிநாட்டிலிருந்து செல்பவர்கள் இப்படி பணத்தை கொடுத்து பழக்கி விட்டார்கள். நாங்கள் கொடுக்கவில்லை என்றால் எங்களை மதிக்க மாட்டார்கள் என சொன்னார். தாங்கள் வெளிநாடுகளில் வசதியாக வாழ்கிறோம் என பகட்டு காட்டுவதற்காக இப்படி செய்கிறார்கள்.

விடுமுறையை உல்லாசமாக கழித்த மகிழ்ச்சியில் ஐரோப்பியர்கள் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் விமானம் ஏறுவார்கள்.

ஆனால் விடுமுறையை கழிப்பதற்காக தமது தாய் நாட்டிற்கு சென்ற தமிழர்கள் வேதனைகளையும் கவலைகளையும் சுமந்து கொண்டு பட்ட கடனை எப்படி தீர்ப்பது என்ற மனச்சுமையுடன் விமானம் ஏறுவார்கள்.

ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்தாலும் மகிழ்ச்சியாக எப்படி வாழ்வது என்பதை ஐரோப்பிய மக்களிடமிருந்து ஈழத்தமிழர்கள் கற்றுக்கொள்ளவே இல்லை.

இரா.துரைரத்தினம்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux