அறப்பணியை முன்னெடுத்து வரும்,  என் தோழனுக்கு  அகவை 50- எழுத்தாளர் ஷோபாசக்தி அன்ரனிதாசன்

அறப்பணியை முன்னெடுத்து வரும், என் தோழனுக்கு அகவை 50- எழுத்தாளர் ஷோபாசக்தி அன்ரனிதாசன்

அல்லையூர் இணையத்தின் இயக்குனர்  திரு செல்லையா சிவா அவர்களின் 50வது பிறந்த நாளை (02.07.2017) முன்னிட்டு-அவரது பள்ளித் தோழரும், பிரபல எழுத்தாளரும்,பிரான்ஸில் தங்கப்பனை விருது பெற்ற-தீபன்  பிரஞ்சுத் திரைப்படத்தின் கதை நாயகனுமாகிய,திரு ஷோபாசக்தி அன்ரனிதாசன் அவர்கள் எழுதிய  வாழ்த்து செய்தி கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இனி…
அல்லையூர் இணையத்தைச் சிறப்புற இயக்கிவரும் சிவா என்ற, என் நண்பன் ஆனந்தக்கரசுவிற்கு இன்று அகவை அய்ம்பதெனில் எனக்கும் அதே வயதுதான்.
நான் அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில் ஏழு வயது மழலையாக முதலாம் வகுப்பில் சேரும்போது, என் வகுப்புத் தோழனாக எனக்கு வாய்த்தவன் சிவா. அன்றிலிருந்து இன்றுவரை எங்களது நட்பு ஒரு சிறு மனக் கசப்புக்கூட இல்லாமல் வளர்ந்தே வருகிறது.
நாங்கள் சிறுவர்களாக வளர்ந்துவந்த நாட்களைச் சற்று நினைத்துப் பார்க்கிறேன். நான் விளையாடப் போன நாட்களைவிட நாடகம் நடிக்கப் போன நாட்கள்தான் அதிகம். எங்கள் கிராமத்தில் வயது வேறுபாடின்றி அநேகருக்கு ‘நாடகப் பைத்தியம்’ பிடித்திருந்த நாட்களவை. சிவாவுக்கும் அது இருந்தது. எங்களது முன்னைய தலைமுறைக்கும் அது இருந்தது. சிவாவின் சகோதரர் அண்ணன் திருநாவுக்கரசு அப்போது ஒரு தேர்ந்த நாடகக் கலைஞராயிருந்தார். என் அப்பா, சகோதர்களிற்கும் அது இருந்தது. அது பாக்கியம். நானும் சிவாவும்  பண்டிதர் – கவிஞர் ஆறுமுகம் அவர்களின் சீடர்களாயுமிருந்தோம். அதுவும் பெரும் பாக்கியம்.
இனிமையான நாட்களைக் கலைத்துப்போட்டு யுத்தம் வந்தது. அந்த நாட்களிலும் நானும் சிவாவும் இணைந்து சில வேலைகள் செய்தோம். எங்களது உரிமைப் போராட்டத்தில் நாங்களும் உற்சாகத்துடன் இணைந்திருந்த காலங்களவை. அல்லைப்பிட்டியின் சங்கக்கடைச் சுவரையும் பள்ளிக்கூடச் சுவரையும் சிவாவும் நானும் போட்டி போட்டுக்கொண்டு எழுத்துகளாலும் முழக்கங்களாலும் நிறைத்த நாட்களவை. நாட்டு நடப்புகளை பாடல்களாக இட்டுக்கட்டிப் பாடுவதில் சிவா வல்லவன். அவனின் சில பாடல்கள் எனக்கு இப்போதும் ஞாபகத்திலுள்ளன.
 
ஊரான ஊரிழந்து ஒற்றைப்பனைத் தோப்புமிழந்து நாங்களும் புலம்பெயர வேண்டியாயிற்று. நல்வாய்ப்பாக நானும் சிவாவும் ஒரே நாட்டிற்கே வந்து சேர்ந்தோம். அதன்பின்னாக நமக்கிடையே பாதைகள் மாறிப்போயின. ஆயினும் அந்தப் பாதைகள் இடையிடேயே சந்திக்காமலுமில்லை.
அல்லையூர் இணையத்தை சிவா ஆரம்பித்த நாள்முதல் நான் அவனுக்கு உற்சாகத்தை அளித்து வந்திருக்கிறேன். அல்லையூர் இணையத்தின் சமூகப் பணிகளை நான் கூர்ந்து கவனிக்கிறேன். அந்த இணையத்தை முன்னிறுத்தித் தனியொருவனாகச் சிவா ஆற்றிவரும் சமூகப் பணிகள் மதிப்புமிக்கவை. நாம் எல்லோரும் அவனுடன் சேர்ந்து, அவனுக்கு ஒருகை கொடுக்கவேண்டிய நேரமிது.
வெறுமனே தனது சுற்றத்தாருடன் அல்லது ஊருடன் எல்லையிட்டு நிற்காத எல்லைகளற்ற பணியை சிவா செய்துவருகிறான். ஊறாத்துறையிலிருந்து அம்பாறைவரை அவனது பணிக் கரங்கள் நீண்டிருக்கின்றன. கல்விப் பணியும் ஆதரவற்றோரைப் பராமரிப்பதும் அவனது முதன்மைப் பணிகளாயிருக்கின்றன.
எந்தவொரு நிறுவனத்தினதும் ஆதரவில்லாமல் புலம் பெயர்ந்த நம்மவர்கள் அளிக்கும் நிதிக் கொடையின் ஆதாரத்திலேயே சிவாவின் அறப்பணி தங்கியிருக்கிறது. பணி செய்வது அவன் கடனெனில் அவனது பணிக் கரங்களை வலுவாக்குவது நம் கடனே. ‘ஈகை திறன்’ என்கிறான் மகாகவி பாரதி.
தோழன் சிவாவுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.
-அன்ரனிதாசன்.
02.07.2017.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux