யாழில் பிள்ளைகளால் கைவிடப்படும் முதியோரின் தொகை அதிகரிப்பு-செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் அவர்கள் கவலை தெரிவிப்பு!

யாழில் பிள்ளைகளால் கைவிடப்படும் முதியோரின் தொகை அதிகரிப்பு-செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் அவர்கள் கவலை தெரிவிப்பு!

யாழ்ப்பாணத்தில் தற்போது மிகக் கொடுமையான விடயமாக முதியோர்களை முதியோரில்லங்களில் சேர்க்கும் அவலம் அதிகரித்துவிட்டதாக சிவபூமி அறக் கட்டளையின் தலைவரும், தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கை அம்பாள் ஆலயத் தலைவருமான செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் கவலை தெரிவி த்துள்ளார். 
பலாலி ஆசிரிய கலாசாலையின் முன்னாள் விரிவுரையாளரும், இந்துசமய கலாசார அலுவல்கள் திணை க்களத்தின் முன்னாள் உதவிப் பணிப்பாளருமான சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம் எழுதிய ‘சமய வாழ்வியல்’ நூலின் வெளியீட்டு விழா யாழ். கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மண்டபத்தில் ஆசிரியர் கலாசாலையின் பிரதி அதிபர் ச.லலீசன் தலைமையில் இடம்பெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
யாழ்ப்பாணத்து வாழ்வியல் முதியோர்கள் விடயத்தில் தோற்றுப் போய்விட்டது 
யாழ்ப்பாணத்தில் நூறு வயதான பேரறிஞர் ஒருவரது பிள்ளைகள் அனைவரும் யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த போதும் அந்த முதியவரை முதியோரில்லத்தில் கொண்டு சென்று சேர்த்தார்கள்.
முதியோரில்லத்திலிருந்த முதியவர் இன்னொருவரை அழைத்து நான் ஒரு தடவை ஆறு. திருமுருகனைப் பார்க்க வேண்டும் எனக் கூறினார். அந்தச் சமயத்தில் நான் வெளிநாடொன்றில் இருந்தேன்.
மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு நான் வருகை தந்தபோது அவர் எனது இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு “உற்றாரை நான் வேண்டேன்…. ஊர் வேண்டேன்….எனச் சொல்லிச் சொல்லி அழுதார்.
அவரது கண்களிலிருந்து கண்ணீர் ஆறாகப் பெருகியது. எனக்கு இது பெரும் துன்பத்தை விளைவித்தது. நான் அவருக்குத் தடவித் தடவி ஆறுதல் தெரிவித்தேன்.
தம்பி எனக்காக இந்தச் சீவன் வேளைக்குப் போக வேண்டுமெனக் கும்பிடுங்கோ. பிள்ளைகள் இருந்து கொண்டும் என்னைப் பிடிச்சு இழுத்துக் கொண்டு வந்து முதியோரில்லத்தில் சேர்த்தார்கள் எனக் கூறி ஆதங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் கல்வி கற்றவர்கள் குறைவாகவிருந்த காலப் பகுதியில் மிக உயர்ந்த பண்பாடிருந்தது. தற்போது கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்த பின்னர் பண்பாடு கீழ் நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
எல்லோரும் கல்வியைத் தங்கள் பொருளாதார முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்துகிறார்களே தவிர கல்வி எனும் செல்வத்தைத் தத்துவார்த்த ரீதியாக உணர்ந்து அதன்படி ஒழுகுவதில்லை.
தொல்புரம் சிவபூமி முதியோரில்லத்தில் வாழும் சில முதியவர்கள் அழுவார்கள். முதியோரில்லத்தில் வாழ்ந்து வரும் முதியவர்களை வெளிநாட்டில் வசித்து வரும் அவர்களின் பிள்ளைகளுடன் சிரமத்தின் மத்தியில் கதைப்பதற்குத் தொலைபேசி அழைப்பு ஏற்படுத்திக் கொடுத்தால் ஒரு தடவை ஒரு பிள்ளை என்னுடன் கோபத்துடன் கதைக்கிறது.
இந்த நேரமோ ரெலிபோன் எடுக்கிறது? நான் வேலைக்குப் போய் வந்து இப்போது தான் படுத்திருக்கிறேன். நீங்க அவை வயது போனவர்கள் சொன்னதற்காக நீங்கள் எடுக்கிறதா? என என்னை நோக்கிக் கேள்வி கேட்டார்.
நான் நள்ளிரவு 12 மணி வரையும் நித்திரை விழித்து மகள் கல்வி கற்பதற்காக அவளுடைய அருகிலே இருப்பேன். கோப்பித் தேநீர் ஊற்றிக் கொடுப்பேன் என அந்தத் தாயார் எனக்குத் தெரிவித்து மிகவும் வருத்தப்பட்டார்.
இவ்வாறான கண்ணீர்க் கதைகள் பலவுண்டு. சமயமும், வாழ்வும் இணையாததொரு புலுடா உலகத்தி லிருக்கிறோம். இவ்வாறான சம்பவங்களைக் கேள்விப்படும் போது வெட்கமாகவிருக்கிறது. துக்கமாகவிரு க்கிறது.
ஆசிரியர்மணி பஞ்சாட்சரம் ஒரு பேரறிஞர். தினம் தோறும் பண்டிதமணி கணபதிப்பிள்ளை ஐயாவிடம் செல்வார். பண்டிதமணி ஐயாவிற்குக் கண் தெரியாது. காதும் கேளாத நிலை.
கலாசாலை வீதியிலேயுள்ள பண்டிதமணி ஐயாவின் வீட்டிற்குத் தினமும் மாலை வேளைகளில் சென்று உரத்துப் பத்திரிகைகள் படிப்பார். இரவு 11 மணி வரை பத்திரிகைகள் படித்து விட்டு வீடு திரும்புவார்.
ஒரு தடவை அவர் பண்டிதமணி ஐயாவின் வீட்டில் பத்திரிகையை உரத்து வாசித்துக் கொண்டிருந்த போது நான் அவ்வீதியால் வருகை தந்து கொண்டிருந்தேன்.
எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம். பண்டிதமணி ஐயா ஒரு கதிரையிலிருக்கிறார். அவருக்கு உடல் இயலாததொரு நிலை. அவரது காது கேட்கும் படியாக காதுக்கு அருகே சென்று பத்திரிகையை உரத்துப் படிக்கிறார்.
1985ஆம் ஆண்டு பண்டிதமணி ஐயாவின் உயிர் பிரியும் வரை அவரது மாணவரான பஞ்சாட்சரம் மாலை வேளைகளில் ஒரு பிரம்மச்சாரியாகச் சென்று அவருக்கு வாசித்துக் காட்டுவது, அவர் சொல்லச் சொல்ல எழுதுவதுவதுடன் அவரது முதுமைக் காலத்தில் பல தேவைகளையும் நிறைவேற்றி வந்தார்.
இவ்வாறான ஆசிரிய மாணவர் உறவை தற்காலத்தில் காண்பது அரிது. யாழ்ப்பாணத்தில் எத்தனையோ கோவில் திருவிழாக்கள், கொண்டாட்டங்கள் என்பன சிறப்பாக நடைபெற்றாலும் மூத்தோர்களை முதியோரில்லங்களில் கொண்டு சென்று சேர்ப்பது எங்களுடைய எதிர்காலத்திற்குத் தீமை.
எங்கள் கல்விச் சமூகம் திருந்த வேண்டும்.கற்றதன் படி ஒழுக வேண்டும். கல்வியின் பயனை உணர்ந்து செயற்பட வேண்டும். மூத்தோர்களைப் போற்றி வாழ வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.dsc07655 dsc07731 dsc07734 _mg_0056-copy-copy _mg_0045-copy-copy _mg_0046-copy-copy _mg_0049-copy-copy _mg_0058-copy-copy

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux