தில்லைநாதி அக்கா(கண்ணீர்ப் பாட்டு)

                                     

அமரர் திருமதி சிரோன்மணி தில்லைநாதன்

(எங்கள் கிராமத்தில் வாழ்ந்து மறைந்த ஓர் அன்புத்தாய் டென்மார்க்,லண்டன்
கனடா,போன்ற நாடுகளில் பிள்ளைகளோடு சில காலம் வாழ்ந்தாலும் தான்
வாழ்ந்த அல்லைப்பிட்டி மண்ணில் இறுதியாய் இறக்க வேண்டும் என்று 
உறுதியுடன் வைராக்கியமாய் நின்று அல்லைப்பிட்டி மண்ணில் மடிந்து 
போனவர் இவரால் சின்ன வயதுமுதல் அன்போடும் ஆதரவோடும் பரிவு 
காட்டப்பட்ட கலாநிதி திரு செல்லையா திருநாவுக்கரசு அவர்கள் எழுதும் கண்ணீர்ப்பாட்டே இக்கவிதைத் தொகுப்பாகும்.)

சின்ன வயதில் என்னை அன்புச்
சிறையி லிட்ட ஒருத்தி
அன்னை போல ஆர்வத் தோடு
அணைத்து மகிழ்ந்த ஒருத்தி
என்னை யுலகில் ஏற்றி வைக்க
எண்ணங் கொண்ட ஒருத்தி
மண்ணில் நல்ல மாண்பு கொண்ட
மனிதம் படைத்த ஒருத்தி 

தில்லை நாதி அக்கா என்று
“திருநா” நானும் அழைப்பேன்.
எல்லை யில்லா இன்பத் தோடு
என்ன தம்பி என்பார்
சொல்லச் சொல்லச் சுவைக்கும் கதைகள்
சொல்லி நானும் மகிழ்வேன்.
வெல்லத் தமிழை மெல்லல் போல
வேண்டு மட்டும் கேட்பார்.

அம்மா வோடு அன்பு கொண்ட
அருமை அக்கா இவரே!
சும்மா எந்த வேளை தனிலும்
சொந்தம் பேணும் மனமே!
இம்மா நிலத்தில் இதயத் தாலே
இனிமை சேர்க்கும் அக்கா!
தம்மா லான உதவி புரிந்து
தாயாய் விளங்கும் அக்கா!

பள்ளிப் படிப்புக் காலந் தொட்டுப்
பழகி வந்த உறவு.
பயிலும் அவர்தம் பிள்ளைக ளோடு
பரிச்சய மான பிறகு
அள்ளக் குறையா அமுத மான
அன்னை காட்டும் பரிவு.
அப்பா தில்லை நாதர் கூட்டும்
அழகுக் கூத்தின் செறிவு.

முல்லைப் பூப்போல் முகம் மலர்ந்து
முறு வலிக்கும் தாயார்.
முற்றம் நாடி வருவோர்க் கெல்லாம்
முறைமை செய்து போவார்.
கள்ளத் தனமே யில்லா நெஞ்சம்
கடவுள் வாழும் வீடு.
காலம் முழுதும் அவர்தம் இல்லம்
கருணை கொஞ்சும் கூடு.

நாட்டுக் கூத்தில் சிறந்து விளங்கும்
நாடக ஆசான் வீட்டில்
பாட்டுத் திறத்தால் பலருங் கூடிப்
பாடி யாடும் சாட்டில்
கூட்டுக் கலையும் கும்மாள முந்தான்
குடி யிருக்கும் போதும்
நீட்டும் அன்புக் கரத்தால் அம்மா
நினைவு சங்கீத மாகும்.
                                           இன்னும் வரும்.….

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux