13 ஆணிகள் 5 ஊசிகள் இன்னும் 6ஊசிகள் உடலில் உள்ளன கொடுமையிலும் கொடுமை—

சவூதி அரேபியாவில் தொழில் வழங்கியவரால் உடலில் ஆணி ஏற்றப்பட்ட இலங்கை பெண்ணுக்கு சத்திரசிகிச்சை மூலம் 13 ஆணிகளையும் 5 ஊசிகளையும் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை சவூதி அரேபியாவிலிருந்து கடுமையான வலியுடன் நாடு திரும்பிய எல்.ஜி.ஆரியவதி என்ற இந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


தான் பணியாற்றிய குடும்பத்தினர் தண்டனையாக ஆணிகளையும் ஊசிகளையும் சூடாக்கி தனது உடலில் ஏற்றியதாக அவர் கூறியிருந்தார். எக்ஸ்ரே மூலம் அவரின் உடலில் 24 ஆணிகளும் ஊசிகளும் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
ஒரு அங்குலம் தொடக்கம் இரண்டு அங்குலம் வரையிலான நீளமுடையவையாக ஆணிகள் காணப்பட்டன. ஊசிகள் ஒரு அங்குல நீளமுடையவை. அப்பெண்ணின் கால்கள், நெற்றியிலிருந்து ஆணிகள்அகற்றப்பட்டுள்ளன. சத்திரசிகிச்சை வெற்றிகரமாக அமைந்தது. இப்போது அவர் குணமடைந்து வருகிறார் என்று கம்புறுப்பிட்டிய மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் கீர்த்தி சத்தரசிங்க தெரிவித்தார்.
அதேவேளை, அப்பெண்ணின் இரு கரங்களிலும் 6 க்கும் அதிகமான ஊசிகள் இருப்பதாகவும் அவற்றை அகற்ற முடியவில்லையெனவும் ஏனெனில், இப்போது அவற்றை அகற்றுவதற்கு சிகிச்சை செய்வது அப்பெண்ணின் நரம்புகளைப் பாதிக்கும் எனவும் அதனால் அவற்றை அகற்றவில்லையென டாக்டர் கூறியுள்ளார்.
தன்னை வேலைக்கு அமர்த்தியவர்கள் ஓய்வெடுக்க அனுமதிக்கவில்லையெனவும் அந்த வீட்டில் உள்ள பெண் ஊசிகளையும் ஆணிகளையும் சூடாக்கிக் கொடுத்ததாகவும் ஆண் அவற்றை தனது உடலில் குத்தியதாகவும் அந்த 49 வயதுடைய ஆரியவதி தெரிவித்திருக்கிறார்.
கடந்த மார்ச்சில் சவூதி அரேபியாவுக்குச் சென்ற இப்பெண்ணுக்கு இரு மாதங்களுக்கு மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. மீதிப் பணத்தை விமானப் பயணச் சீட்டைப் பெறுவதற்காக ஆரியவதியைத் தொழிலுக்கு அமர்த்தியவர் பிடித்துவைத்திருந்தார்.
இதேவேளை, இந்த ஆரியவதியின் சம்பவம் தொடர்பாக கொழும்பிலுள்ள சவூதி அரேபியத் தூதுவருடன் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், இச்சம்பவம் தொடர்பான மருத்துவ அறிக்கையை வெளிவிவகார அமைச்சு சவூதி அரேபிய அரசாங்கத்திடம் கையளிக்கவுள்ளது என்று அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆரியவதிக்கு சத்திரசிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களை அவரின் மருத்துவ அறிக்கையை வெளிவிவகார அமைச்சிற்கு சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் வெளிவிவகார அமைச்சு அதனை சவூதி அரேபிய அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கும். ஆரியவதியைத் தொழிலுக்கு அமர்த்தியவருக்கு எதிராக சவூதி அரேபியா உரிய நடவடிக்கை எடுப்பதற்காக இந்த மருத்துவ அறிக்கை அனுப்பி வைக்கப்படும்.
இதேவேளை, தேவையேற்பட்டால் இந்த வீட்டுப் பணிப்பெண்ணை (ஆரியவதியை) சவூதி அரேபியாவிற்கு அழைத்துச் சென்று அவருக்குத் தொழில் வழங்கியவருக்கு எதிரான சாட்சியங்களை தெரிவிக்குமாறு கோரப்படுமென்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் மேலதிக பொது முகாமையாளர் எல்.கே.ரணதுங்க கூறியுள்ளார். நிலைமையை நாங்கள் உன்னிப்பாக அவதானித்து வருகிறோம். விசாரணை நடத்துவதற்காக சவூதி அரேபியாவிற்கு இப்பெண்ணை அழைத்துச் செல்ல வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் சகல ஏற்பாடுகளையும் மேற்கொள்ளும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
 இது இவ்வாறிருக்க சவூதி அரேபியாவிலுள்ள வீட்டுரிமையாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்காக ஆரியவதிக்கு சட்டரீதியான ஆலோசனை வழங்கப்படும் என நீதிஅமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் இச்சம்பவம் குறித்து சர்வதேச புலம்பெயர் அமைப்பின் அலுவலகத்திற்கும் ஐ.நா.விற்கும் முறையிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux