அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார் : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளின் போது அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஐக்கிய இலங்கைக்குள் யதார்த்தபூர்மான அதிகாரப் பகிர்வு தீர்வுத்திட்டமொன்றின் மூலம் அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அர்த்தபூர்வமான அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பது குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தி வருவதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதே நிலைப்பாட்டில் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய அரசாங்கமும் இவ்வாறான ஓர் கருத்தினையே வெளியிட்டுள்ளதாகவும் அனைத்து தரப்பினரும் நியாயமான ஓர் அதிகாரப் பகிர்வுத் திட்டத்தின் மூலம் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதனையே வலியுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தச் சட்ட மூலத்தின் அடிப்படையில் வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். சமஷ்டி முறைமையிலான ஓர் அதிகாரப் பகிர்வுத் திட்டம் இலங்கைக்கு பொருத்தமானதாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கு புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்பு அவசியமானதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், புலம்பெயர் தமிழர்கள் வடக்கு கிழக்கில் காத்திரமான பங்களிப்பினை வழங்குவதற்கு ஒர் சரியான பொறிமுறை உருவாக்கப்பட வேண்டியது அவசியமானதென அவர் தெரிவித்துள்ளார். இடம்பெயர் மக்களும், மீள் குடியேற்றப்பட்ட மக்களும் இன்னமும் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux