கொழும்பு – தாண்டிக்குளம் புகையிரதம் தடம் புரண்டது:

கொழும்பு கோட்டையிலிருந்து தாண்டிக்குளம் வரை பயணித்துக் கொண்டிருந்த புகையிரதம் நேற்று முன்நாள் மாலை 6.00 மணியளவில் சாலியபுர பகுதியில் தடம் புரண்டதால் புகையிரதத் திணைக்களத்துக்கு கோடிக்கணக்கான ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சாலியபுர புகையிரத நிலையத்தைத் தாண்டி சுமார் ஒன்றரை கிலோ மீற்றர் தொலைவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின்போது ஐந்து ரயில் பெட்டிகளுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன் இரு நூறு மீற்றர் வரையிலான ரயில் பாதை முற்றாக சேதமடைந்துள்ளது.
இரண்டு பெட்டிகள் வயல் வெளியில் தடம் புரண்டுள்ளதுடன் ரயில் எஞ்சினும் தடம் புரண்டுள்ளது.
தடம் புரண்ட ரயில் பெட்டிகளில் ஒரு சிலரே பயணித்துள்ளதால் காயங்களோ உயிழப்புக்களோ ஏற்படவில்லை.
ரயில் தடம் புரண்டதால் அநுராதபுரம் தாண்டிக்குளத்துக்கிடையிலான ரயில் சேவைகள் நேற்று முன்நாள் மாலையிலிருந்து நடைபெறாததுடன், ரயில் பாதையைச் சீர்செய்ய கொழும்பிலிருந்து விசேட குழுவொன்று இப்பகுதிக்கு வந்துள்ளதாகவும், இன்று சீர் செய்தல் நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டு ரயில் சேவைகள் மீண்டும் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள ரயில் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux