போர் இடம்பெற்ற காலத்தில் காணப்பட்ட அச்சமான நிலையைவிட சமூகச் சீர்கேடுகள் நிகழ்கின்ற இன்றைய காலத்தில் அச்சமும் பீதியும் மக்களிடையே மிக உயர்வாகக் காணப்படுவதை அவதானிக்க கூடியதாகவுள்ளது. இச்சமுதாய அவலநிலை உடனடியாக நிறுத்தப்படவேண்டும். அதற்குச் சமூக அக்கறை கொண்ட புத்திஜீவிகள் முன்வர வேண்டும் என யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.
வடக்கில் அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கவலை தெரிவித்து அவர் நேற்று அறிக்கை ஒன்றினை விடுத்துள்ளார். அந்த அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடமாகாணத்தில் குறிப்பாக யாழ்.குடாநாட்டில் அண்மைக் காலமாக அதிகரித்துவரும் கொலை, களவு, வாள்வெட்டு, குழுச்சண்டைகள், போதைப்பொருள் பாவனை, கலாசார சீரழிவு போன்ற விடயங்களால் மக்களின் வாழ்வியல் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றதா என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் விரைந்து செயற்படவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். எனவே, இந்த விடயத்தில் புத்திஜீவிகள், விரிவுரையாளர்கள், ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள், கல்வியாளர்கள், தொழில்சார் வல்லுநர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உரிய தரப்பினர்களுக்கு அழுத்தங்களைக் கொடுக்க முன்வருதல் அவசியமாகும்.
மேலும் குற்றச்செயல்களைத் தடுப்பது என்பது ஒட்டுமொத்த சமூகத்தின் விழிப்புணர்விலேயே தங்கியுள்ளது. அக்கம் பக்கத்தில் இடம்பெறும் போது வெறுமனே பார்த்துக் கொண்டிராது, இது தொடர்பில் தமது எதிர்ப்பினை வெளிக்காட்ட வேண்டிய பொறுப்பு சமூகத்துக்கு உள்ளது. சட்டம், ஒழுங்கை பாதுகாப்பவர்கள்,அரசியல்வாதிகள் போன்றோர் இது விடயத்தில் அக்கறையுடன் செயற்படுவதற்குத் தேவையான அழுத்தங்களை பிரயோகிக்க முன்வருதல் வேண்டும்.
ஒரு காலத்தில் கல்வியே எமது சொத்து எனவும் கல்வியால் மிகச் சிறந்த பிரதேசமாகவும் திகழ்ந்த யாழ்ப்பாணம் இன்று கல்வியில் கீழ்நிலைக்குச் சென்றமைக்கு இச் சமூகச் சீர்கேடுகளும் போதைப்பொருள் பாவனையுமே காரணமாய் அமைந்திருக்கும் என்பதனை எவரும் மறுப்பதற்கில்லை என்றார்.