இலத்திரனியல் மோகத்தினால் இயந்திர மனிதனாகும் குழந்தைகள்-சிறப்புக் கட்டுரை இணைப்பு!

இலத்திரனியல் மோகத்தினால் இயந்திர மனிதனாகும் குழந்தைகள்-சிறப்புக் கட்டுரை இணைப்பு!

தாம் பெற்றெடுத்த குழந்தைகளை சான்றோராக்க வேண்டும் என்பது ஒவ்வொரு பெற்றோரின் நியாயமான ஆசையாகவும் கனவாகவும் இருக்கிறது. ஆனால் எத்தனை பெற்றோரின் கனவு நனவாகிறது? சில பெற்றோரின் குழந்தைகளே ஊர் மெச்சும் சான்றோராக உருவாகின்றனர்.

சான்றாண்மை என்பது பரீட்சையில் அதிக மதிப்பெண் பெறுவது மட்டுமன்று. நல்லறிவு, ஒழுக்கம் மற்றும் இயலாதவர்களுக்கு உதவுதல் போன்ற பல நற்குணங்களின் கலவையே சான்றாண்மையாகும்.

ஆனால் இன்றைய பெரும்பாலான பெற்றோர் தங்களது குழந்தைகள் சான்றோராக உருவாவதற்கு ஊரிலேயே அதிக கட்டணம் வசூல் செய்யும் ஒரு தனியார் பாடசாலை, குழந்தைகள் பொழுதுபோக்கி விளையாடி மகிழ ஒரு தொலைக்காட்சி, இணைய வசதியுடன் கூடிய ஒரு கணிப்பொறி மற்றும் ருசிப்பதற்கு கொழுப்புப் பண்டங்கள், புத்தம் புதிய ஆடை வகைகள் போன்றவையே போதுமென எண்ணுகின்றனர்.

இவைகளை ஏற்பாடு செய்து கொடுத்து விட்டாலே தங்களது குழந்தைப் பராமரிப்புப் பணி முடிந்து விட்டதாக நினைத்துக் கொள்கின்றனர். குழந்தைகளுடன் அமர்ந்து ஆக்கபூர்வமாக இன்றைய பெற்றோர்களில் பெரும்பாலானோர் உரையாடுவதில்லை.

நேரமின்மையைக் காரணமாக சொல்லும் இவர்கள் வீடுகளில் தொலைக்காட்சி, செல்லிடப்பேசி போன்றவற்றின் காலவரம்பற்ற பயன்பாட்டைக் குறைத்துக் கொண்டாலே அனைத்திற்கும் நேரம் கிடைக்குமே?

ஒரே அறையில் இருந்தாலும் அம்மா தொலைக்காட்சியிலும், அப்பாவும் பிள்ளைகளும் கணினியின் முன்பும் இருந்து பொழுதுபோக்குகின்றனர். மென்பொருள் உலகிலிருந்து இவர்கள் மீண்டு வருவது எப்போதோ?

இன்றைய சிறுவர்கள் செல்லிடப்பேசியையே விளையாட்டு மைதானமாக ஆக்கிக் கொண்டதன் விளைவாக இளமையிலேயே உடற்பருமன், கண்பார்வைக் குறைபாடு, சுறுசுறுப்பை இழத்தல் போன்ற பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

ரீடிங் ரூம் என்ற பெயரில் ஒரு தனி அறையில் மாணவர்களை அடைத்து விட்டு பக்கத்து அறையில் பெற்றோர் தொலைக்காட்சியை பலத்த ஒலியளவுடன் கண்டுகளிக்கும் வழக்கம் இன்று பெரும்பாலான குடும்பங்களில் உள்ளது. இது பிள்ளைகளுக்கு சலிப்பு உணர்வையும், கவனச் சிதறலையுமே ஏற்படுத்தும் என்பதைப் பெற்றோர் உணர்வதில்லை.

அன்றோ ஒரு குடும்பத்தில் குறைந்தபட்சம் ஐந்து பிள்ளைகள் இருந்தனர். ஆனால் இன்று ஒரு குடும்பத்தில் ஒன்றிரண்டு குழந்தைகளே இருப்பதால் குழந்தைகளின் தேவைகள் பெற்றோரால் எளிதில் பூர்த்தி செய்யப்பட்டு கூடுதல் செல்லத்துடன் வளர்க்கப்படுகின்றனர்.

இது ஒருபுறம் நல்லது போல தோன்றினாலும், மறுபுறம் அனைத்துமே எளிதில் கிடைப்பதால் பிள்ளைகளுக்குப் பொருள்களின் அருமை பெருமை தெரிவதில்லை. மேலும் அவர்களுக்கு பணத்தின் மதிப்பு, விலைவாசி ஏற்றம் பற்றியும் புரிவதில்லை.

மொத்தத்தில் பெற்றோரின் கஷ்டங்கள் பிள்ளைகளால் புரிந்து கொள்ளப்படவில்லை. ஒரு கிரிக்கெட் மட்டையை அப்பாவிடமிருந்து பெற மூன்று வருடம் காத்திருந்த காலம் முன்பிருந்தது. இன்றோ காலையில் கேட்கப்பட்ட பொருள் மாலையிலேயே பெற்றோரால் வாங்கித் தரப்படுகிறது. அதிகமாக செல்லம் கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டதன் விளைவாக பிள்ளைகள் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்த காலம் போய், பெற்றோர் பிள்ளைகளுக்குக் கீழ்ப்படியும் காலம் உருவாகிப் போனது.

இன்றைய மாணவர்கள் பலர் அவர்களது அப்பா -,அம்மா அழைத்தால் கூட திரும்பிப் பார்க்காமல் தொலைக்காட்சியிலோ, அல்லது செல்லிடப் பேசியிலோ மூழ்கிக் கிடப்பதைக் காண முடிகிறது.

இத்தகைய கீழ்ப்படியாத பிள்ளைகள், நாளை அவர் தம் சொந்த தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய இயலாமல் போவதுடன், தங்கள் பெற்றோருக்கும் பாரமாக இருக்க நேரிடும்.’ ஐந்தில் வளையாதது ஐம்பதிலும் வளையாது’ என்பது நம் முன்னோர் அவர்தம் வாழ்க்கை அனுபவத்தின் வாயிலாக வகுத்த பழமொழி.

பாடசாலைகளில் நியாயமான காரணங்களுக்குக் கூட தமது செல்லப்பிள்ளைகளை ஆசிரியர்கள் கண்டிப்பதை விரும்பாத பெற்றோர், வீட்டிலாவது அவர்களை கண்டிப்புடன் வளர்க்க வேண்டியது மிக அவசியம்.

பிள்ளைகளை சான்றோராக ஆக்க பெற்றோர் தங்களது வாழ்க்கை அனுபவம், கடந்து வந்த பாதையின் கஷ்ட, நஷ்டங்கள் போன்றவற்றை வாழ்க்கைப் பாடமாக அவர்களுக்கு உணவு போல ஊட்ட வேண்டும்.

நம் முன்னோர்கள் வகுத்த வாழ்வியல் நெறிகள், நமது பாரம்பரியம், வேற்றுமையில் ஒற்றுமை காணும் நமது நாட்டின் தனித்தன்மை, போன்ற பல பொதுவான விஷயங்களை சிறுவர்களுக்குப் புகட்ட வேண்டியது பெற்றோரின் கடமை.

இதனால் நாளைய சமுதாயத்தை பேதமற்ற சிறந்த மனிதாபிமானம் கொண்டதாக உருவாக்க முடியும்.

உலகின் சிறந்த நூல்களுள் ஒன்றாக கருதப்படும் திருக்குறள், ஏனைய பிற நீதி நூல்கள், செய்தித்தாளில் இடம்பெறும் அறிவியல், பொதுஅறிவு சார்ந்த உலகளாவிய நிகழ்வுகள் போன்றவற்றை வாசிக்கும் பழக்கத்தை சிறுவர்களுக்குப் பழக்கப்படுத்த வேண்டும். இலட்சோப லட்சம்பேரை அறிவு ஜீவிகளாக மாற்றிய ஒரு பெருங்கருவி நல்ல புத்தகங்களே அன்றி வேறென்ன?colindian-child-actor164351550_3996160_03022016_spp_gry

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux