அல்லையூர் அருள் தெய்வேந்திரம் அவர்களும்,தீபன் கதைநாயகன் அந்தோனிதாசன் அவர்களும்-சிறப்புப் பதிவு இணைப்பு!

அல்லையூர் அருள் தெய்வேந்திரம் அவர்களும்,தீபன் கதைநாயகன் அந்தோனிதாசன் அவர்களும்-சிறப்புப் பதிவு இணைப்பு!

கீழே படிப்பதற்கு முன்னர்…

அல்லைப்பிட்டி என்னும் சிற்றூரில் பிறந்து-சுவிஸில் வாழ்ந்து வரும் திரு அருளானந்தம் தெய்வேந்திரன் அவர்கள்-மண்பற்று மாறாத சமூகநல அக்கறையுள்ள பண்பான மனிதராக வலம் வருபவர். கவிஞர்-சோதிடர்-அரசியல்வாதி என பன்முகத்தன்மையோடு தொண்டாற்றி வருகின்றார்.இவ்வளவு சிறப்புக்கள் கொண்ட திரு அருள் தெய்வேந்திரம் அவர்கள் தமது 58 வது பிறந்த நாளை,07.01.2016 வியாழக்கிழமை அன்று கொண்டாடுகின்றார்.  திரு தெய்வேந்திரம் அவர்கள் ஆண்டவன் அருளால் எல்லாச் செல்வங்களும் பெற்றுச்-சீரும் சிறப்புடன் வாழ அருள் புரிய வேண்டி வாழ்த்துகின்றோம்.

திரு சிவா செல்லையா..

இயக்குநர்….

அல்லையூர் இணையம்…

இனித் தொடர்ந்து படியுங்கள்!

நான் ஏன் பிறந்தேன் நாட்டுக்கு நலமென்ன புரிந்தேன்….

15.10.2015ல் சுவிசர்லாந்து, ரிசீனோ மாநிலத்தில் லுகானோ மனித உரிமை சபையின் கிளையினரால் தீபன் என்ற தமிழ்ப்பட வெற்றி விழாவை கொண்டாடிய பின்னர். திரு. அந்தோனிதாசன் அவர்களைக் கௌரவித்த பின்னர், தீபன் படம் திரையிடப்பட்டது.

12

பல இடங்களில் கூட்டம், பல தொலைக்காட்சி பேட்டிகள் என அல்லைப்பிட்டியைச் சேர்ந்த அந்தோனிதாசன் யேசுதாசன் அவர்கள், மிகவும், மகிழ்ச்சியாகவும், துணிவுடனும், பெரிய கௌரவத்துடனும் செயல்பட்டுக் கொண்டிருந்தார். இந்த நிகழ்விற்கு லுகானே மேயர், மற்றும் அரசியல்வாதிகள், லுகானோ மக்கள், மற்றும் தமிழ் மக்கள் வந்திருந்தார்கள். இந்த விழா லுகானோ மனித உரிமை சபை அமைப்பினரால் நடாத்தப்பட்டது என்பதால் பல வெள்ளைக்காரர்கள் வந்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

11

அந்தோனிதாசன் யேசுதாசன் அவர்கள் 14ம்திகதி லுகானோ வந்திருந்தார். 16ம் திகதி லுகானோவிலிருந்து லண்டன் புறப்பட்டு சென்றார். இதன் விபரங்களை உடனே தெரிவிக்க எனக்கு நேரமில்லாது போய்விட்டது, இருப்பினும் அந்தோனிதாசன் அவர்கள் லண்டன் சென்றார். அங்கு பல எமது ஊரவர்கள் நிகழ்ச்சியைப் பார்த்திருப்பார்கள்,

அவர்கள் இதுவரை எதையும் எமது ஊர் புதினம், பெருமை பற்றி பேசவில்லை, அதைப்பற்றி பேச யாருமில்லை என்பதை உணர்ந்து உங்களுக்கு எமது கலைஞனின் பெருமையைத் தெரிவிக்க எழுதுகின்றேன்.

10 9 8

நான் ஏன் பிறந்தேன் நாட்டு நலமென்ன புரிந்தேன்…………. என்ற பாடல் வரிகளைக் கேட்டால், எமது கிராமத்தவர், எமது சகோதரன், ஏன் என் நண்பன் எனவும் கூறலாம், இவருடைய புகழ், பிரான்சில், சுவிசர்லாந்தில், பிரித்தானியாவில் மட்டுமல்ல, உலகிலே புகழப்பட்ட, பேசப்பட்ட ஒரு பெரிய கௌரவம், பாராட்டு கிடைத்திருக்கிறது. எமது நாட்டின் நிலமை, தமிழர் நிலமை தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது என கூறலாம், ஆனால், இது தமிழருக்கு, எமது நாட்டுக்கு, எமது கிராமத்திற்கு கிடைத்த பெரிய பெருமையாக நான் கருதுகின்றேன். இவரைப் பெற்ற அந்த அல்லையூர் மண்ணுக்கும், அந்த மண்ணில் வாழும் இவரைப் பெற்ற தாய்க்கும் எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா! நான் ஏன் பிறந்தேன் நாட்டுக்கு நலமென்ன புரிந்தேன் என்ற கேள்விக்கு, இவருக்கு பதில் கிடைத்து விட்டது.6

வாழ்ந்தால் இப்படி தான் வாழவேண்டும் என எடுத்துக்காட்டாக, உணர்வு பூர்வமாக, சவாலாக போராடி வெற்றி கொள்ளவேண்டும் என்பதை அந்தோனிதாசன் அவர்கள் எடுத்துக் காட்டிவிட்டார், கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு பிறகு எனது நண்பரை, அயல்வீட்டுக்காரனை, எனது கிராமத்து சகோதனைக் கண்டதில் பெரிய மகிழ்ச்சியடைந்தேன். இவரைக்கண்டதில் இவரின் தந்தையில் நான் கொண்ட அன்பையும், தந்தை என்னில் கொண்ட மதிப்பு, அன்பு போன்றவற்றை நினைத்து மகிழ்ந்தேன். அவ்வாறே மாறாது இவரும் இருந்தது இரட்டிப்பான மகிழ்ச்சியாக இருந்தது.7

இவர் எமது மாநிலத்திற்கு வருவது என்பதை எனது மகள் மூலமாக அறிந்தேன். காரணம், எனது மூத்த மகள் அருள்நிதிலா அவர்கள் தான் இவருக்கான மொழிபெயர்ப்பைச் செய்வதற்காக நியமிக்கப்பட்டிருந்தார். அல்லைப்பிட்டியில் பிறந்த ஒருவரின் பெருமையை, வெற்றியாக கொண்டாட அழைக்கப்பட்ட இவருக்கு அல்லைப்பிட்டியில் பிறந்த ஒரு அல்லையூர் மகள், இத்தாலி மொழி பெயர்ப்பைச் செய்வதையிட்டு பெருமையாக இருந்தது. இது எப்படிப்பட்ட ஒரு நல்ல வாய்ப்பு என நினைத்து மகிழ்ந்தேன். புதுமையாக இருந்தது,

திரு. அந்தோனிதாசன் அவர்களின் பேச்சை மொழி பெயர்க்க அல்லைப்பிட்டி அருளானந்தத்தின் பேத்திவந்திருந்தார் என்பது அந்த கிராமத்துக்கு இரட்டிப்பான பெருமையைத் தந்ததாகக் கருதப்பட்டது. அந்தோனிதாசன் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியாக அருள் நிதிலாவைப் பற்றி சொல்லிப் பெருமைப்பட்டார். அந்தோனிதாசன் அவர்களுக்கு முழு ஆதரவும், மொழிபெயர்ப்புமாக அருள் நிதிலா இருந்தது ஒரு சிறந்த நிகழ்வை வழங்கிய பெருமையை, திருப்தியை இருவரும் அடைந்தார்கள். இந்த விடயங்களை அறிவிப்பாளர் மேடையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அல்லைப்பிட்டியின் பெருமையை புலம்பெயர்ந்த மண்ணில் ஏற்படுத்திய அந்தோனிதாசனுக்கும், அதனோடு தனது திறமையை வெளிப்படுத்திய மொழி பெயர்ப்பாளர், சுவிசர்லாந்து தொலைக்காட்சிக்காக சில மாதங்களுக்கு முன்னர் இலங்கை சென்று, எமது மக்கள் நிலமையை தனது பயணத்தின் மூலம் ஒரு தகவலாக சுவிசர்லாந்து நாட்டுக்கு வழங்கியவர் என்ற இன உணர்வுமிக்க ஒரு பிள்ளை என்ற பெயரை அருள்நிதிலா பெற்றிருந்தார்.

தீபன் திரைப்படத்திற்கான விருதைப் பெற்ற திரு. அந்தோனிதாசனின் நிகழ்வில் மொழி பெயர்பாளராக மட்டுமல்லாது, ஒரே கிராமத்தவர்கள் என்ற பெருமையோடு இணைந்ததையிட்டு, இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும்.

நல்ல வாய்ப்புக்கள் தேடிவர நாம் உழைக்கவேண்டும், அது எமது உயர்விற்கும், எமது மண்ணின் பெருமைக்கும், எமது மக்களின் விடிவிற்கும் வழிவகுக்கும். உனக்காக வாழாது பிறருக்காக வாழ்வது தான் சிறந்தது. எனவே, இந்த அல்லையூர் செல்வங்களை வாழ்த்துவோம். அந்தோனிதாசனுக்கு எமது பாராட்டுக்கள். அவர் தனது இலட்சியப்பாதையில் வெற்றியை பிடித்துவிட்டார், அதே இடத்திலிருந்து தனது இலட்சியப் பாதையை தொடரவேண்டும் என வாழ்த்துகின்றோம்.

தீபன் திரைப்படத்தைப் பற்றிய எமது விமர்சனம்!

இந்தப்படத்தைப் பார்த்து முடித்தபின்னர் ஒரு ஈழத்து நபரிடம் படம் எப்படி இருக்கிறது எனக் கேட்டேன். அவர் பதில், நான் ஏதோ எதிர்பார்தேன். அது கிடைக்கவில்லை என்றார்.

இது தான் எமது மக்களுடைய அறிவற்றதிறன், தெரிந்து கொள்ளாத அரசியல், புரிந்து கொள்ளாத நிலமை, இடம், காலம், பொருள் என்ற நிலைகளை வைத்து சிந்திக்காதவர்கள்.

இவர்கள் போலவே பலர் இருக்கின்றார்கள், பல தமிழ் அரசியல்வாதிகளும் இப்படித்தான் சிந்திக்கிறார்கள், இதனால் தமிழரை தோல்வியில், சோகத்தில் வீழ்த்தக் காரணமாகி விட்டார்கள், ஒற்றுமை வேண்டும் என்பதை உணர்ந்தும் ஏன் புலம் பெயர்ந்த மக்கள் மத்தியில் ஒற்றுமையை வளர்க்கவில்லை, எமது மக்கள் ஊரில் படும் சிறைவாசம், பாலியல்துன்புறுத்தல், துன்பங்கள் அனைத்தையும் அறிந்தும், ஏன் உதவ முன் வராது, இப்போ அளவுக்கு மீறிய நாகரீகமாக, திருமண விழாவில் ஆண்களும் பெண்களும் சினிமா போல் ஆட்டம் போட ஆரம்பித்து விட்டார்கள்,

இதை ஈழத்தில் துன்பப்படும் ஒரு தாய், அல்லது சிறுமி, அல்லது சிறைப்பட்டுள்ளவரின் உறவுகள் பார்த்தால் என்ன சொல்வார்கள், புலம்பெயர்ந்த மக்கள் ஒரு சுயநலவாதிகள் என்று தானே சொல்லவேண்டும். அது தான் உண்மையாக இருக்கிறது.

தீபன் திரைப்படத்தை எடுத்தவர் ஒரு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு தயாரிப்பாளர், அவருடைய சிந்தனை இப்படத்தை எப்படி எடுக்கவேண்டும் என சிந்தித்து எடுத்திருக்கிறார். உலகத்தின் தரத்தில் இது வெற்றி பெற்றது, இலங்கையில் கூட திரையிடப்படக் கூடியதாக அமைந்திருக்கிறது என்றால், அதன் கதையின் திட்டமிடல், கதையின் அமைப்பு, சொல்லவேண்டிய உண்மை, எதிர்காலத்தில் செய்யவேண்டிய செயல் என்ன போன்ற சிறப்பான செய்தியை அங்கு கொண்டிருக்கிறது. சொல்லக்கூடியதைத் தான் சொல்லமுடியும், அது தான் விருதைப் பெற தெரிவுசெய்ய கூடியதாக இருந்தது, இது தான் இடம், காலம், பொருள் என்ற கருத்தில் ஒளிந்திருக்கும் திட்டமிடல். இது தமிழருக்கு புரியாது, பணம், பதவி, சுயநலம் போன்ற ஆசைகள் மட்டும் தான் இவர்களுக்குத் தெரியும்.

எமது துன்பம் சொல்லப்பட்டது, எமது தேசத்தில் தோல்வி, வாழ முடியவில்லை என்பதைக் காண்பிக்கப்பட்டது. இதை தானே புலம்பெயர்ந்த நாம், இங்கு முறைப்பாடுகளாக பதிவு செய்திருக்கின்றோம், வாழமுடியாது வெளிநாடுவந்தோம் என தீபன் படத்தில் சொல்லப்பட்டது போல் நாம் வெளிநாட்டில் படும் துன்பமும் வெளிப்படுத்தப்படுகிறது. இது இலங்கை வாழ் மக்களுக்கு தெரியாததை புரியவைத்திருக்கிறது. பிறந்த நாட்டில் வாழ முடியவில்லை, புலம் பெயர்ந்த நாட்டிலும் நின்மதியாக வாழ முடியவில்லை என வெறி கொண்டு ஒரு புலி வீரன் பாயும், இறுதி வெறிப்போராட்டமாக காண்பிக்கப்படுகிறது. தமிழன் மனோநிலையை மறைமுகமாக சித்தரிக்கப்படுகிறது. துணிந்த போராட்டக்காட்சி தான் இந்த சிறந்த பரிசுக்காக தெரிவு செய்யப்பட்ட உணர்வான காட்சிப் பதிவாக அமைந்திருக்கிறது. இதுவே, தான் சரியான வெளிப்பாடு, அதைவிட்டு, சிலர் கூறுவது போல் படமெடுத்தால், அதை பெட்டிக்குள் தான் போட்டு மூடவேண்டும். இப்படம், என்னை அழவைத்தது, கொதிக்கவைத்தது, சிந்திக்கவைத்தது, அந்த போராளிமேல் மதிப்பைக் கொடுத்தது, பணம் இனி எமது மக்கள் துயரை தீர்க்க மட்டும் சேருங்கள் என்று ஒரு காட்சியில் கூறிய கருத்து மிகச்சிறந்த கருத்தாகும்.

இப்போ நாம் செய்யவேண்டியது என்ன! போராடி, போராளி நோயாளியாக இருக்கின்றான், ஒரு விதவைத்தாய் பிள்ளைகள் வயிறு நிறைய வேண்டும் என்பதற்காக தன் வயிற்றை நிறைக்கின்றாளே, இதைப்போக்க என்னசெய்யவேண்டும், ஒரு வயோதிபர் தற்கொலை செய்ய பல முறை முயன்றும், மூன்றாவது தடவையாக முயன்று புகையிரதவண்டியில் மோதி தற்கொலையில் வெற்றி பெற்றதாக செய்தி வருகிறதே இதைத் தடுக்க என்ன செய்யவேண்டும். இதை சிந்தித்து செயலாற்ற முடியாத தமிழ் அரசியல்வாதிகள் எதைச் சாதிக்கப்போகிறார்கள். ஈழ மக்களை மீண்டும் சாகடிக்கப் போகிறார்களா!

இந்தப்படம், எமது துன்பத்தை உலகெங்கும் கொண்டு செல்ல வழி பெற்றுத்தந்துள்ளது. இது முதலாவது வெற்றி, பல சிறந்த படங்கள் வெளியாகியும், இந்தியாவிலும், இலங்கையிலும், ஏன் வேறு நாடுகளிலும் திரையிட முடியாத நிலையில், தீபன் படம் பல நாடுகளில், பல இன மக்கள் பார்க்கக் கூடியதாக அமைந்துள்ளதே, இது தான் சாதனை. திரைப்படமெடுத்து ஓடாது, எமது மக்கள் மட்டும் பார்ப்பதால் என்ன நடக்கப்போகிறது. இதைப்புரிந்து கொள்ளுங்கள். அகதிவாழ்க்கை என்றால் எப்படியிருக்கும், அதுவும், சுவிசர்லாந்து, இத்தாலி, பிரான்ஸ் இந்த நாடுகளில் அகதிகளின் துன்பங்கள் மாறுபட்டு இருக்கின்றது. பிரான்சில் உள்ள அகதிகள் நிலை இப்படத்தில் உள்ளது போல் இருக்குமா என நானே ஆட்சரியப்பட்டேன். காரணம், அகதிகளாக புலம்பெயர்ந்த நாம் படும் வேதனைகள், கஸ்ரங்கள், தடுமாற்றங்கள், மொழிப்பிரச்சனைகள், வேறு நாட்டவருடன் வேலை செய்யும் போது ஏற்படும் முரண்பாடுகள் போன்றவற்றை நினைத்துப் பார்த்தால், எமது அகதிவாழ்க்கை மோசமானதாக தெரியும், இதை விட ஊரில் வாழ்ந்து செத்துவிடலாம் என நினைக்கத்தோணும். இது தான் உண்மை.

இந்த விடயம், இப்படத்தில் தெளிவாக காட்டப்படுகிறது. அடுத்து, நாம் பொய் முகங்களோடு வருகின்றோம், பொய் வாக்குறிகளில் நாம் ஏமாந்து போகின்றோம். இலங்கையில் No fire Zone, என பொய் வாக்குறுதி கொடுக்கப்பட்டதை, இப்படத்தில் அதை எடுத்து காட்ட, ஞாபகப்படுத்த அதை புகுத்தியுள்ளார்கள், அடுத்து, எமது நாட்டில் வாழ முடியவில்லை, இங்கு அகதியாக வாழலாம் என்றால், இதுவும் போராட்டமா என்ற உண்மையான கேள்வியை எழுப்புகிறது இந்தப்படம். எனது பார்வை, எமது வேதனையோடு சேர்ந்து பார்த்தால் படம் கூறும் கதை சரியாகப் புரியும் என்பதே என் கருத்து, தமிழில் 90 வீதம் உரையாடப்படுகின்றது. தமிழருக்கு இது முழு விளக்கமான படமாகவே இருக்கும்.

ஜக்கிய நாடுகள் சபையை, மனித உரிமைச்சபையை தமிழர்கள், தனித் தனி குழுக்களாகப் பிரிந்து ஏதோ செய்கிறீர்களே, இது வெற்றி தருகிறதா, தரவே தராது. தமிழன் ஒன்றுபடவேண்டும். சிந்தித்து செயலாற்றவேண்டும். ஒன்றிணைந்து ஒரே நோக்கத்திற்காக செயல்படவேண்டும். இப்போ, எமது இனத்தை முதலில் துன்பத்தில் இருந்து காக்கவேண்டும்.

மக்கள் தாம் வாக்களிக்கவும், உரிமையை வென்றெடுக்கவும் உரிமையுடையவர்கள், அவர்களை முதலில் காப்பாற்றுங்கள். கனடாவில் பாராளுமன்ற உறுப்பினராக வந்தவர் இலங்கைப் பிரச்சனையைத் தீர்த்தாரா, சுவிசர்லாந்தில் அல்லது வேறு நாட்டில் பாராளுமன்ற உறுப்பினரோ, உள்ளூராட்சி மன்றத்திலேயோ, அல்லது மேயராகவோ வந்தால் தீர்ந்துவிடுமா தமிழர் பிரச்சனை. தீராது. ஈழத்தமிழ் மக்கள் கொதித்தால், போராடினால் தான் முடியும் என்பதைப் புரியாதவர்களாக புலம்பெயர் தமிழர்கள் இருக்கிறார்கள்.

எமது மக்களுக்காக கைகொடுக்காத புலம்பெயர்ந்த தமிழர்கள், எமது உறவுகளை, நாட்டை மறந்தவராக வாழுகின்றார்களே. இவர்கள் சுயநலமான மனிதர்களே, சாதனை மனிதர்கள் அல்ல, உணர்வுள்ள, இனப்பற்று உள்ள மக்களல்ல.

இந்த வகையில், தீபன் படம் வெற்றிப்படமாகும், அதை தயாரித்த பிரஞ்சு தயாரிப்பாளர் Mr. Jacques Audiard, and Team லண்டன் No Fire Zone CHANNEL 4 , தயாரிப்பாளர் Mr. Callum Macrae, போன்ற வெளிநாட்டு வெள்ளைக்கார்களுக்கு இருக்கும் புத்தி, யுக்தி, உணர்வு, சாணக்கியம், எமது தமிழருக்கு இல்லை, இருப்பினும், அந்தோனிதாசன் போல் சிந்தனையும், உணர்வும் மிக்க தமிழர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். இவர்கள் தான் உண்மையான உணர்வாளர்கள். இவருக்கு ஒரு நல்ல சந்தற்பம் கிடைத்து விட்டது. அது இறைவனால் கொடுக்கப்பட்டதாகவே நான் கருதுகின்றேன். அந்தோனிதாசனுக்கு எமது அல்லையூர் மக்கள் சார்பாக பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தீபன் சிறந்த படம், அதை உங்கள் சிந்தனையோடு பாருங்கள், கதை சினிமா போல் நீடிக்காது பறந்து போகிறது, காலச் சுருக்கமாகவும், விடயத்தின் சுருக்கமாகவும் இந்த கதை விரைவாகச் செல்கிறது. கண்ணீர் விடாத சோகமும், வெளிப்படுத்தாத துன்பமும், சகிப்பு தன்மையோடு, உணர்வு மறைந்திருக்கிறது, இறுதியில் இனியாவது வெற்றி பெறவேண்டும் வாழவேண்டும் என போராடுகிறார் கதாநாயகன், இந்தக்கட்டம், என் கண்களில் இன உணர்வால் கண்ணீர் வடிந்தது. என் உணர்வு உச்சக்கட்டத்தை அடைந்தது, எமது முயற்சிகள், படுதோல்வியில் விழுந்ததை நினைத்து மனம் நோக வைத்தது, உண்மையை உணரவேண்டும், அப்போ தான் மீண்டும் தோல்வி கிடைக்காது என இப்படம் எனக்கு சொல்கிறதாகவே நான் நினைத்தேன். தவறாது இப்படத்தைப் பாருங்கள். மற்றவர் விமர்சனத்தை கேட்காது உங்கள் சுயவிமர்சனத்தை சுதந்திரமாக வெளியிட முயலுங்கள். அது தான் சரி. தீபன் ஒரு சிறப்பான படம். அந்தோனிதாசன் கதாநாயகனாக நடித்தார் என்பதைவிட, இது அவருடைய சுயமான இயல்பான உண்மையான வார்த்தைகள், உண்மையான அசைவுகள், நடிப்பு நடிகர் என கூறமுடியாது. நிஜமாக இருந்தது, அது அவருடைய வாழ்க்கையாகவே காட்டி நிற்கிறது. நானும் அப்படியே தான் பார்க்கின்றேன். உண்மைத்தன்மையை உணர்கின்றேன்.

அல்லையூர் மக்கள் இப்படத்தை பாருங்கள், உங்கள் கடமைகளை நீங்கள் செய்யத் தவறாதீர்கள். வாழும்போது வாழ்த்துங்கள், வாழவையுங்கள். பேசுங்கள். மடிந்துவிட்டால், மண்கூட எம்மை அழித்துவிடும், எல்லோரும் உண்மையாக மறந்துவிடுவார்கள். இருக்குமட்டும் தான் வாழ்க்கை, அதுமட்டும் தான் உன் திறமையை, சேவையை நன்மையைச் செய்யவேண்டும்.

  1. வெளிநாட்டில் உள்ள நீங்கள் நல்ல விடயத்திற்கு பணம் தந்து உதவ முடியவில்லை என்றாலும், உங்களால் பாராட்ட கூடவா முடியாது ! சிந்தியுங்கள்.

நன்றி

அல்லையூர் அருள் தெய்வேந்திரன். arulswiss@gmail.com

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux