ஏழைகளுடன் இன்பங்களைப் பகிர்ந்து வாழ்வதே நத்தாரின் சிறப்பான பண்பு!

ஏழைகளுடன் இன்பங்களைப் பகிர்ந்து வாழ்வதே நத்தாரின் சிறப்பான பண்பு!

கிறிஸ்து பிறப்பின் விழாவினை கிறிஸ்மஸ் அல்லது நத்தார் என அழைக்கின்றோம்.

தாவீதின் ஊராகிய பெத்லகேமில் ஆண்டவர் அவதரித்தார் . தொடக்க கால கிறிஸ்தவர்கள் ஆண்டவர் பிறப்பு உட்பட விழாக்கள் கொண்டாடும் நிலையில் இருக்கவில்லை. அவர்கள் தங்களுக்கென வழிபாட்டுத் தலங்கள் கூட இல்லாதிருந்தார்கள்.

எனினும் பிற்காலத்தில் அவர்கள் டிசம்பர் 25ம் திகதியை ஆண்டவரின் பிறந்த நாள் விழாவாகக் கொண்டாட தகுந்த ஆதாரங்கள் இருக்கவே செய்தன. சில அடிப்படைவாதக் குழுக்கள் சொல்வதைப் போல் இந்த தினம் உரோமையின் சூரியக் கடவுளின் அவதார தினமாக இருந்து பின்னர் உருமாற்றப்பட்டது என்பதில் உண்மையில்லை.

யூதர்களின் நாட்காட்டியின்படி நிசான் மாதத்தின் 14ம் நாள் ஆண்டவர் உலகைப் படைத்தார் என நம்பப்பட்டது. அன்றுதான் யூதர்களின் விடுதலைப் பயணமும் (பாஸ்கா விழாவும்) ஏற்பட்டது. எனவே இயேசுவின் உற்பவமும் மரணமும் கூட அப்போதுதான் இடம்பெற்றது என ஆதிக்கிறிஸ்தவர் நம்பினர். இத்தினம் மார்ச் 25ம் நாளாக இருந்தது. எனவே அன்றே தேவதூதர் அன்னைமரிக்குக் காட்சி கொடுத்த நாள் என நம்பினர். இதையே 160 முதல் 240 ம்ஆண்டில் வாழ்ந்த Julius Africanus என்ற அறிஞர் தமது குறிப்பில் வலியுறுத்துகின்றார்.

இவரது காலம் உரோமையில் அரச மதமாக கிறிஸ்தவம் நிலைகொள்வதற்கு சுமார் 200 ஆண்டுகள் முன் என்பதால் அரச ஆதிக்கத்தின்கீழ் திருச்சபை சூரியக் கடவுளின் நாளை கிறிஸ்து பிறப்பின் விழாவாக அறிவித்தது என்ற கூற்று அர்த்தமற்றதாகி விடுகின்றது.

புனித ஜோன் கிறிசோஸ்தம் (பொன்வாய் அருளப்பர்) கூற்றின்படி எலிசபெத் கருவுற்றது யூதர்களின் Ethanim அல்லது Tishri 7ம் மாதம். இக்காலத்தில்தான் சக்கரியாஸ் பாவப்பரிகார வழிபாடு Day of Atonement செய்துகொண்டிருந்தார் (லேவி.16:29 மற்றும் 1 அரச 8:2) இது செப். இறுதி அல்லது அக்டோபர் ஆரம்பத்தில் வர இதற்கு 6 மாதங்கள் கழித்தே மரியாள் கருவுற்றார். இன்று கிறிஸ்தவர்கள் கொண்டாடும் விழா தினங்களுக்கு இந்தக் குறிப்பே ஆதாரமாக அமைந்துள்ளது.

எனினும் 17ம் நூற்றாண்டில் Puritans எனப்படும் தூய்மைவாதக் கிறிஸ்தவர்கள் பாப்பரசர் விரோதப் போக்கினால் இத்தினத்தை மறுதலிக்க ஆரம்பித்தனர். எனினும் அங்கிலிக்கன் இதனை ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்தும் டிசம்பர் 25ம் திகதியை கொண்டாடி வந்தனர். ஆனால் கிரேக்க மரபு வழுவா கிறிஸ்தவர்கள் தற்போது புழக்கத்தில் இருக்கும் கிரோகரியன் நாட்காட்டியை ஏற்றுக்கொள்ளாமல் இன்னமும் 2000 வருடங்களாகத் திருத்தப்படாதிருக்கும் ஜூலியன் கலண்டரை பின்பற்றுகின்றனர்.

இதனால் 12 நாட்கள் வித்தியாசத்தில் இவ்விழாவினைக் கொண்டாடுகின்றனர். இதனால் நமது பன்னாட்டு கலண்டரின்படி ஜனவரி 6ம் திகதியை அவர்கள் கொண்டாடுகின்றனர்.

எவ்வாறாயினும் மானிடர் தம் பாவத்திற்குப் பரிகாரப் பலியாக அவதரித்துள்ள இயேசுவையே நாம் கொண்டாடுகின்றோம். அவர் எந்தத் திகதியில் பிறந்தார் என்பதை விட அவர் ஏன் பிறந்தார் என்பதே முக்கியமான கேள்வியாகும்.

நமது பாவத்திலிருந்து நாம் விடுதலை பெற அவர் தம்மையே பலியாக்கினார். இதற்கு நாசரேத்தூர் கன்னி மரியாள் தன் முழு இசைவைத் தந்து இறைவனின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து சம்மதம் தெரிவித்தார். அதுபோல் தாவீதின் குலமரபில் உதித்த சூசை தன்னை அவர்களது சேவகனாகவே ஆக்கிக் கொண்டு பணி புரிந்தார்.

அன்றைய உலகில் இயேசு ஆரம்பம் முதலே ஏற்றுக்கொள்ளப்படாதவராகவே ஆட்சியாளர்களுக்கு காணப்பட்டார். அவரை முளையிலேயே கிள்ளிவிட ஏரோதன் அரசன் கங்கணம் கட்டி வந்தான். இறுதியில் சத்தியம் வென்றது.

தற்கால கிறிஸ்தவ பாரம்பரியங்கள் பலவுள்ளன. கிறிஸ்மசுக்கு பல வாரங்களுக்கு முன்னரே வாழ்த்து அட்டைகள் அனுப்புவர். முதன் முதலாக 1843ம் ஆண்டு கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளை சேர் ஹென்றி கோல்( Sir Henry Cole) என்பவரே ஆரம்பித்து வைத்தார். ஆனால் கிறிஸ்மஸ் மரம், சோடனைகளை விக்டோரியா அரசி ஊக்குவித்தார். 1885ம் ஆண்டு அமெரிக்காவில் இத்தினம் விடுமுறையாக்கப்பட்டது.

இருபதாம் நூற்றாண்டில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை மட்டுப்படுத்த சோவியத் யூனியன் படாத பாடுபட்டது. ஆனால் இன்றோ கொடுங்கோன்மை அழிந்து மக்கள் 70 ஆண்டுகளின் பின் சுதந்திரம் அனுபவிக்கின்றனர்.

இதுபோலவே இந்தியாவில் இப்போது கிறிஸ்மஸ் அன்று விடுமுறை இரத்து செய்யப்பட்டு பள்ளிகளில் வேறு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தி மாணவர் வரவைக் கட்டாயமாக்கியுள்ளனர்.

இயேசுவின் பிறப்புக் காட்சி குடிலாக அமைக்கப்படுவது 1223ம் ஆண்டு புனித பிரான்சிஸ் அசிசியாரினால் ஆரம்பிக்கப்பட்டது. இன்று இலங்கையில் சந்திக்குச் சந்தி, அலுவலகங்களில்கூட குடில் வைக்கப்படுகின்றது. இயேசு ஏழ்மைக் கோலத்தில் பிறந்திருக்கும் காட்சி ஏனைய மதத்தினரைக் கூட ஈர்க்கவே செய்கின்றது.

கிறிஸ்மசின் பாரம்பரிய நிறங்கள் சிவப்பு, பச்சை, பொன்னிறம் ஆகியவையாகும். அதாவது, சிலுவை மரணம், நித்திய வாழ்வு, இராஜரீகம் ஆகிவையாம்.

கிறிஸ்மஸ் மரம் புறமத அடையாளமா என்ற கேள்வி எழுவதுண்டு. உண்மையில் இது ஜெர்மனியில் ஆரம்பமாகியது.

தற்கால கரோல் பக்திப் பாடல்களை William Sandy ஆரம்பித்தனர். ஆனால் கரோல்கள் 4ம் நூற்றாண்டிலிருந்தே வட இத்தாலியில் மிலான் ஆயராக இருந்த புனித அம்புரோஸ் காலத்திலேயே பாடப்பட்டு வந்தன.அதன் வரிகள் 700 வருடங்களுக்கு முன் இயற்றப்பட்டவை. மார்ட்டின் லூதர் முதல் வெஸ்லி வரை புரட்டஸ்டாண்டு தாபகர்கள் கரோல் பாடல்களை ஊக்குவித்தனர். 1818ம் ஆண்டு “Silent Night பாடல் இயற்றப்பட்டது. 1857ம் ஆண்டு Jingle Bells எழுதப்பட்டது.

துருக்கியில் முன்பிருந்த ஒரு கருணைமிகு ஆயர் நீக்கிலஸ் என்பவர் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வதில் பேர் போனவர். பலருக்கு பெரும் உதவி செய்துள்ளார். அவரையே நத்தார் தாத்தாவாக நாம் நினைவு கூருகின்றோம். ஆனால் தற்காலத்தில் அவர் வணிகச் சின்னமாக உருப்பெற்று விட்டார்.

மேல் நாடுகளில் கிறிஸ்மஸ் அன்று சாப்பாடு பிரமாதமாக இருக்கும். ஆனால் வறியவரோடு பகிர்ந்துண்ணா மனிதர் கிறிஸ்மஸ் கொண்டாடுவதில் அர்த்தமே இல்லை. இதை உணர்ந்து செயற்படுவோம்?

DSC_0839

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux