அங்கவீனம் என்பது இயலாமையல்ல-இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்-03.11.2015

அங்கவீனம் என்பது இயலாமையல்ல-இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்-03.11.2015

இறைவன் இவ்வுலகிற்கு அள விட முடியாத பொக்கிசங்களை இங்கிதமாய் அருளியுள்ளான். இவற்றிலெல்லாம் மிக உயர்வானது மானிட வர்க்கமாகும். இவ்வாறு மானிடனாகப் பிறப்பதும் ஒரு பாக்கியம் என்றே கூறலாம்.

இப்படிப்பட்ட மனிதன் முழுமையாகப் பிறந்தால் அதுவும் ஒருவகை அதிர்ஷ்டம் என்றே கூறலாம். ஆனால் அவன் அங்கீனமாகப் பிறந்தால் அதனை துரதிர்ஷ்டம் என்று சொல்வதா? இல்லை அதுவும் ஒரு வகையில் அதிர்ஷ்டமே. ஏனெனில் அவன் அங்கவீனம் என்றாலும் கடவுளின் கருணைக் கோட்டில் மிக உயர் அந்தஸ்தைப் பெற்றவனாகவே காணப்படுகின்றான்.

முதலில் அங்கவீனம் என்றால் என்ன என்பதை நோக்குவோம். பிறப்பினாலோ விபத்தினாலோ, பார்வையை இழந்தவர்கள், செவிப்புலனற்றவர்கள், மனவிருத்தி குறைந்தோர், உடல் ஊனமுற்றோர் போன்றவர்களை சமூகம் அங்கவீனர்கள் எனக் குறிப்பிடுகின்றது. அங்கவீனர்களாலும் எதையும் செய்ய முடியுமா என்ற கேள்வியைப் பலர் வினவுகின்றனர். இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்ற வாசகம் வேரூன்றிக் காணப்படுகின்றது. இவை ஏற்றுக்கொள்ள முடியாத கூற்றுக்களேயாகும். அங்கவீனம் ஓர் இயலாமை அல்ல என்பதே உண்மை. இவர்களை மாற்றுத் திறனாளிகள் என கூறுவது பொருத்தமானதும், சிறப்பானதுமாகும்.

இன்று முழுமையாக உள்ளவர்கள் சிலர் கூட ஏனையோரில் தங்கி கோழைத்தனமாக வாழ்ந்து கொண்டிருப்பதை நாம் கண்கூடாகக் கண்டு கொண்டிருக்கின்றோம். ஆனால் அங்கவீனர்கள் உள்ளத்தில் உறுதியுடையவர்களாகவே காணப்படுகிறார்கள்.

இன்று அங்கவீனர்களில் பலர் சாதாரண மனிதர்களையும் மீறி சாதனைகள் பல புரிந்து வெற்றிக் கம்பத்தைத் தொட்டு விட்டார்கள், தொட்டுக் கொண்டும் இருக்கின்றனர். உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் முழு உலகிலுமே பிரசித்தி பெற்றவர்களாகவே உள்ளனர்.

பார்வை குறைந்தவர்கள் கல்வியிலும் ஏனைய துறைகளிலும் முன்னேறிக் கொண்டிருக்கும் அதேவேளை செவிப்புலனற்றோர் சைகை மொழியைப் பயன்படுத்துவதன் மூலம் கல்வியிலும் ஏனைய நடவடிக்கைகளிலும் முன்னேறி விட்டார்கள். இவர்களின் கல்வி நடவடிக்கைகளில் பரீட்சைகளுக்குத் தோற்றும் போது சாதாரண பிள்ளைகளுக்குரிய வினாப் பத்திரங்களுக்கே இவர்களும் விடையளித்து சித்திபெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஏனைய துறைகளிலும் சாதாரண மாணவர்களுடன் போட்டிகளில் பங்குகொண்டு எம்மாலும் முடியும் என்றவாறு வெற்றிகலை ஈட்டிக் கொள்கின்றனர்.

அத்துடன் அங்கங்களை இழந்தவர்கள் ஏங்கிக் கொண்டுள்ளனரா? இல்லவே இல்லை. கைகளைப் கொண்டே மனிதன் தனது வேலைகளை அதிகமாக செய்கின்றான் என்பது யாவரும் அறிந்ததே, ஆனால் இந்தக் கைகளை இழந்தவர்கள் கைகள் செய்யும் அனைத்து வேலைகளையும் கால்களாலேயே செய்து சாதிக்கின்றனர். இதற்கு உதாரணமாக இவ்வருடம் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் கைகளை இழந்த ஓர் மாணவன் கால்களாலேயே பரீட்சை எழுதி சித்தியடைந்ததைக் குறிப்பிடலாம்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜெகா கொக்ஸ் இரு கைகளையும் இழந்தவர். இவர் தனது கால்களால் விமானம் ஓட்டி கின்னஸ் புத்தகத்தில் பெயர் பதித்துள்ளார். அங்கவீனமுற்ற தாய் தனது கால்களாலேயே பிள்ளையின் உடை மாற்றுதல், உணவளித்தல் ஏனைய வேலைகளையும் செய்வது, கைகளை இழந்தவர் தனது புயங்களால் வண்டியைத் தள்ளுகிறார். கால்களை இழந்தவர் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளராக இருப்பது, பார்வைற்றவர்கள் பல ஆயிரம் மீற்றர்கள் ஓடுதல் இவ்வாறாக அங்கவீனர்களின் சாதனைகளை இணையத் தளங்களினூடாகவும் சமூக வலைத் தளங்களினூடாகவும் தினம் தினம் நாம் கண்டு கொண்டிருக்கின்றோம். அங்கவீனம் ஓர் இயலாமையல்ல என்பதற்கு இவ்வாறான நிகழ்வுகள் சான்று பகிர்கின்றன.

இவ்வாறானவர்களின் இயலுமையையும் திறமைகளையும் வெளிக்கொண்டு வருவதில் பெற்றோரின் பங்களிப்பை கூறும் போது சில பெற்றோர் இவர்கள் விடயத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். என்றாலும் சில பெற்றோர் இவ்வாறான பிள்ளைகளை ஒரு சுமையாக நினைக்கின்றனர். சிலர் இவர்களுக்கு எவ்வாறு வழிகாட்டுவதென அறியாது தவிக்கின்றனர். இன்னும் சிலர் இவர்களை ஏனையவர்கள் காண்பதால் தமது கும்பத்திற்கு வெட்கமான ஒரு நிலை என மறைத்து வைத்து கொண்டுள்ளனர். ஆனால் இவர்களைப் படைத்த இறைவன் வாழ்வதற்குரிய வழியையும் அமைத்தே உள்ளான். எனவே இவர்களுக்குரிய உரிமைகளைப் பெற்றுக் கொடுத்து தேவைகளை அறிந்து நிறைவேற்றிக் கொடுப்பது பெற்றோரின் கடமையாகும்.

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி மாற்றுத் திறனாளிகள் தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அங்கவீனர்களை இயலாதவர்கள் எனப் புறக்கணிக்காது சமூகத்தில் அவர்களும் சம உரிமையுடையவர்கள் என்பதைக் கருத்திற் கொண்டு இவர்களிடம் காணப்படும் ஆற்றல்களை இனங்கண்டு வழிப்படுத்தி அங்கவீனர்கள் வாழ்வு வளம் பெற வழிகாட்டுவோம்.03col-pn-03153526967_3824341_02122015_spp_gry

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux