தமிழர்களின் உரிமைக்காக அமைதியான வாழ்வை நோக்கிய தாயக மண் மீட்புக்காகக் களமாடி மடிந்த வீரமறவர்களான மாவீரர்களுக்கு தமிழர் தாயகமான வடக்குக்- கிழக்கில் பல இடங்களிலும் பலராலும் வெளிப்படையாகவே சுடரேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழர்களால் என்றுமே மறக்க முடியாத (27.11.2015) மாவீரர் தினத்தில் யாழ்.பல்கலையில் மாவீரர்களை நினைவுகூரும் பாடலும் ஒலிபரப்பப்பட்டே சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
யாழ் தீவகம்,யாழ் பல்கலைக்கழகம், நல்லூர் கந்தசாமி கோவில், முல்லைத்தீவு கடற்கரை, முல்லைத்தீவு துயிலும் இல்லம் உள்ளிட்ட பல இடங்களிலும் நேற்றுப் பிற்பகல் 6.05 மணிக்கு ஈகச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி சாரா ஊழியர்கள் எனப் பலரும் நேற்று மதியம் 12 மணிக்கு யாழ். பல்கலைக்கழகப் பரமேஸ்வரன் கோயில் முன்பாக ஒன்றுகூடினர். அங்கு கோயில் மணி ஒலிக்கச் சுடரேற்றப்பட்டன. பின்னர் மாவீரர்களை நினைவு கூரும் பாடல் ஒலிபரப்பப்பட்டது. பாடல் முடியும் வரையிலும் அந்த இடத்தில் நின்று அனைவரும் அஞ்சலி செலுத்தினர். இதுவரை ஆகுதியான வீரமறவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம். என்று கூறி அங்கு அஞ்சலி இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்திலுள்ள மாவீரர் நினைவிடத்தில் மாவீரர் புகைப்படம் வைக்கப்பட்டு அந்த இடத்திலும் மாணவர்களால் சுடரேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதற்கு முன்னதாக யாழ்.நல்லூர் கந்தசுவாமி கோயில் முன் பாகவும் யாழ்.மரியன்னை போராலயம் முன்பாகவும் வடமாகாண சபை உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார். இவை தவிர மாவீரர்களின் குடும்பத்தினரும்இ நண்பர்களும் தத்தமது வீடுகள் மற்றும் பிரத்தியேக இடங்களில் ஈகச் சுடரேற்றி உணர்வுபூர்வமாகத் தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.
வன்னியின் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களில் அரசியல் தலைவர்கள், பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் மாலை 6.05 மணிக்கு தீபமேற்றி மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் செலுத்தப்பட்டன.