யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடைமழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 14 ஆயிரத்து 334 குடும்பங்களைச் சேர்ந்த 52 ஆயிரத்து 270 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 57 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 486 பேர் 42 நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கான சமைத்த உணவுகளும் வழங்கப்பட்டு வருகின்றது. இடம்பெயர்ந்த மக்களுக்கு தேவையான ஏனைய அத்தியாவசிப் பொருட்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்ச்சியான மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக மாவட்டத்தின் கரையோரப் பகுதிகள் மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளது. இவ்வாறான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள்ளும் வெள்ளநீர் உட்சென்றுள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
குறிப்பாக சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 2 ஆயிரத்து 252 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 254 பேரும், உடுவில் பிரதேச செயலக பிரிவில் 2 ஆயிரத்து 275 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 705 பேரும், யாழ்ப்பாணம் பிரதேச செயலக பிரிவில் 2 ஆயிரத்து 141 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 226 பேரும், பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவில் 320 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 183 பேரும், சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவில் ஆயிரத்து 196 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 337 பேரும், கரவெட்டி பிரதேச செயலக பிரிவில் 333 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 169 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் நல்லூர் பிரதேச செயலக பிரிவில் 891 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 275 பேரும், கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் 703 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 714 பேரும், வேலணை பிரதேச செயலக பிரிவில் 689 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 660 பேரும், தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவில் 667 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 425 பேரும், ஊர்காவற்றுறை பிரதேச செயலக பிரிவில் 231 குடும்பங்களைச் சேர்ந்த 830 பேரும், காரைநகர் பிரதேச செயலக பிரிவில் 419 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 400 பேரும், சங்கானை பிரதேச செயலக பிரிவில் 790 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 371 பேரும்,மருதங்கேணி பிரதேச செயலக பிரிவில் 708 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 414 பேரும், நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் 719 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 307 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பாதிக்கப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 57 குடம்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 486 பேர் 42 நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும் ஏனைய பாதிக்கப்பட்ட இடங்களிலுள்ள மக்களுக்கான உலர் உணவுகள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. வெள்ளம் தேங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்ட இடங்களிலுள்ள கால்வாய்களின் அடைப்பினை நீக்கி வெள்ள நீரை வடியச்செய்வதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட வெள்ள நிவாரண பணிகளுக்காக 4.2 மில்லியன் ரூபா நிதி!
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள யாழ். மாவட்டத்திற்கு 4.2 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக நாட்டின் யாழ்ப்பாணம், மன்னார், கம்பஹா ஆகிய பிரதேசங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
அந்தவகையில், யாழ் மாவட்டத்திற்கு 4.2 மில்லியன் ரூபாவும் மன்னார் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கு ஒரு மில்லியன் ரூபாவும் நிவாரணத்திற்காக வழங்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மேலதிக நிவாரண உதவிகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரித்துள்ளார்.
அடை மழைக்கு பின்னர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான மேலதிக உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.