தீவகம் நெடுந்தீவைச் சேர்ந்த,சிறுவன் இயலவனின் உயிர் காத்த செந்தில்குமரன்-படித்துப் பாருங்கள்!

தீவகம் நெடுந்தீவைச் சேர்ந்த,சிறுவன் இயலவனின் உயிர் காத்த செந்தில்குமரன்-படித்துப் பாருங்கள்!

இசைக் கலைஞரும் புகழ்பெற்ற கனேடியப் பாடகருமான மின்னல் செந்தில் குமரனின் இதய அறுவைச் சிகிச்சை உதவி திட்டம் மூலம் ஏழு வயதுப் பாலகனான இயலறிவனின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. மின்னல் செந்தில் குமரன் அவர்களைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது.  இனப்பற்றும்  சமூக சிந்தனையும் படைத்த  செந்தில் குமரன் ஏழை எளிய மக்களுக்குப்  பல ஆண்டுகளாக மருத்துவ உதவிகள்  வழங்கி வருகிறார்.   

குறித்த இச்சிறுவனுக்கு இதய நோய் உள்ளதெனச் சில ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்டது.   இச்சிறுவனின் பெற்றோர்கள்  அறுவை மருத்துவத்துக்காக  பொறுமையுடன் காத்திருந்தனர். ஆனால் சிக்கல் நிறைந்த இந்த இதய நோய்க்கான அறுவை மருத்துவம்  உடனடியாகச் செய்யப்படாவிடின்  உயிர் ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்த நெடுந்தீவைச் சேர்ந்த அவனது பெற்றோரான தர்ஷினியும்  விக்னேஸ்வரனும் செந்தில் குமரனிடம் நிதியுதவியை வேண்டினர்.

 இந்த அறுவைச் சிகிச்சை மருத்துவத்துக்கு மொத்தம் 6 இலச்சம் ரூபாய் தேவைப்பட்டது. இத்தொகையில் 2 இலச்சத்தை அரச உதவியாகப்  பெற்றோர்கள் பெற்றுக்கொண்டனர்.  மிகுதித் தொகையான 4 இலச்சத்தை செந்தில் குமரன் வழங்கி அறுவை மருத்துவம் நடைபெற  உதவியுள்ளார்.

இந்த அறுவைச்சிகிச்சை கொழும்பிலுள்ள இலங்கா மருத்துவமனையில் நவம்பர் முதலாம் திகதி, 2015  காலை செய்யப்பட்டது. செல்வன் இயலறிவனின் அறுவை மருத்துவம்   நன்கு நடைபெற்றுள்ளது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். சென்ற ஆனி மாதம் செந்தில் குமரனின் திருமண நினைவு நாள் நிகழ்வின் போது சிறுவர்களின் இதயச் சிகிச்சைத் திட்டத்திற்கு தனது சொந்தப் பணமாகக் கனேடிய டொலர்கள் 10,000 வழங்குவாதாக அவர் அறிவித்திருந்தார்.  

இந்நிதியில் இருந்தே செல்வன் இயலறிவனின் அறுவை மருத்துவத்துக்கு  தற்போது பயன் படுத்தப்பட்டுள்ளது. செந்தில் குமரன் முன்னரும் 16 பேரின் அறுவை மருத்துவத்துக்கு  உதவி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விலைமதிப்பற்ற மனித உயிர்களைக் காப்பதே அறங்களில் சிறந்த அறமாகும்.   செந்தில் குமரனின் இவ்வாறான  மருத்துவப் பணிகளுக்கு மற்றவர்களும்  தம்மாலான உதவிகளை வழங்கலாம்.1446449447_senthil-kumaran-helped-011115-seithy-001 1446449461_senthil-kumaran-helped-011115-seithy-002

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux