சுவிஸில் வெளிநாட்டவர்களின் நடத்தைகளே பூர்வீககுடிகளுக்கு வெறுப்பு ஏற்பட முதற்காரணமாகும்-சிறப்புக்கட்டுரை இணைப்பு!

சுவிஸில் வெளிநாட்டவர்களின் நடத்தைகளே பூர்வீககுடிகளுக்கு வெறுப்பு ஏற்பட முதற்காரணமாகும்-சிறப்புக்கட்டுரை இணைப்பு!

இலங்கையில் பொதுத்தேர்தல் என்றால் எத்தனை பரபரப்பு, மேடைபோட்டு பிரசாரம், அடிதடி சண்டை, கொலை கைது நூற்றுக்கணக்கான தேர்தல் வன்முறைகள், என எத்தனை ஆரவாரங்கள், தேர்தலை கண்காணிப்பதற்கு உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளிலிருந்தும் பிரதிநிதிகளை வரவழைத்து கண்காணிக்க வேண்டிய அவலம்.

இவை எதுவுமே இன்றி சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் நடைபெறும் பொதுத்தேர்தல்களை பார்த்த போது இப்படி ஒரு தேர்தல், அதற்கான சூழல் எமது நாட்டிலும் நடக்காதா என எண்ணியதுண்டு.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பொதுத்தேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 200 ஆசனங்களை கொண்ட கீழ்சபைக்கும் 46 ஆசனங்களை கொண்ட மேல் சபைக்குமான தேர்தல் 26 மாநிலங்களிலும் நடைபெற்றது.

சுவிட்சர்லாந்து நாடு முழுமையான சமஷ்டி ஆட்சியை கொண்ட நாடு. மாநிலங்களுக்கே அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்ற போதிலும் தேசிய மட்ட பிரச்சினைகளையும் மற்றும் வெளிநாட்டு கொள்கை, குடிவரவு கொள்கைகளை மத்திய அரசே கையாள்வதால் இத்தேர்தலும் முக்கியம் பெறுகிறது.

மேல் சபை , கீழ்சபை என்பவற்றுடன் 7 அமைச்சர்களை கொண்டதாக சுவிஸ் மத்திய அரசாங்க கட்டமைப்பு உள்ளது. இந்த 7 அமைச்சர்கள் வருடத்திற்கு ஒருவர் என்ற ரீதியில் ஜனாதிபதி பதவியையும் வகிக்கின்றனர். உலகில் ஜனாதிபதியின் பதவிக்காலம் குறைந்த நாடாக சுவிட்சர்லாந்து விளங்குகிறது. அமைச்சரவையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார். அதிகாரங்கள் ஒருவரின் கைகளுக்கு சென்று விடக்கூடாது என்பதே இதன் நோக்கமாகும்.

கடந்த ஞாயிறு நடைபெற்ற சுவிட்சர்லாந்து பாராளுமன்ற தேர்தலில் பழமைவாத கட்சியான சுவிஸ் மக்கள் கட்சி எதிர்பார்த்ததை விட அதிக ஆசனங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது.

200 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்ற கீழ் சபையில் சுவிஸ் மக்கள் கட்சி 65 ஆசனங்களையும் சமஷ்டி ஜனநாயக கட்சி 43 ஆசனங்களையும் சோசலிசக் கட்சி 33ஆசனங்களையும் பெற்றுள்ளன.

சுவிஸ் மக்கள் கட்சியை பொறுத்தவரை கடந்த 2011ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை விட, இந்தாண்டில் கூடுதலாக 11 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அளிக்கப்பட்ட வாக்குகளில் 50 சதவிகித வாக்குகள் சுவிஸ் மக்கள் கட்சிக்கு கிடைத்துள்ளது.

முதலாம் உலக போருக்கு பின்னர், சுவிஸ் அரசியலில் அதிக எண்ணிக்கையில் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ள முதல் கட்சி என்ற பெயரையும் சுவிஸ் மக்கள் கட்சி பெற்றுள்ளது.

குடியேற்றம் மற்றும் அகதிகள் விடயத்தில் கடும்போக்கை கொண்ட சுவிஸ் மக்கள் கட்சியின் வெற்றி எதிர்காலத்தில் அகதிகள் தொடர்பான முடிவுகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுவிஸ் பூர்வக குடிகள் சுவிஸ் மக்கள் கட்சிக்கு அதிகம் வாக்களிப்பதற்கு காரணம் சுவிஸில் குடியேறியுள்ள வெளிநாட்டவர்களாகும்.

சுவிஸ் மக்கள் கட்சியின் இந்த வெற்றி சுவிஸ் குடிமக்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தியாக இருந்தாலும், இது சுவிஸில் குடியேறியுள்ள வெளிநாட்டை சேர்ந்த அகதிகளுக்கும் மற்றும் எதிர்காலத்தில் சுவிஸ் நாட்டிற்கு குடியேற விரும்பும் வெளிநாட்டினர்களுக்கும் கசப்பான செய்தியாகவே பார்க்கப்படுகிறது.

சுவிஸ் மக்கள் கட்சி தனது தேர்தல் பிரசாரத்தில் சட்டவிரோத குடியேற்றவாசிகள் அதிக அளவில் நாட்டிற்குள் பிரவேசிப்பதன் ஆபத்துக்கள் பற்றி கூறிவந்தது. அதிகளவான அகதிகள் தமது நாட்டிற்குள் வருவதால் பூர்வீக குடிகளை விட வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகலாம் என்றும் பிரசாரத்தில் ஈடுபட்டது.

சுவிட்சர்லாந்தின் மொத்த சனத்தொகை 80இலட்சத்து 60ஆயிரத்து 893ஆகும். இதில் தற்போது 35வீதமானவர்கள் வெளிநாட்டவர்கள் என கணிப்பிடப்பட்டுள்ளது. அகதிகளை சுவிட்சர்லாந்து தொடர்ந்து அனுமதித்தால் சுவிஸ் பூர்வீக குடிகளை விட வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்றும் இதனால் சுவிட்சர்லாந்தின் அதிகாரம் வெளிநாட்டவர்களின் கைகளுக்கு செல்லும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் சுவிஸ் மக்கள் கட்சி பிரசாரம் செய்திருந்தது.

குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து அண்மைக்காலத்தில் பெருந்தொகையான சட்டவிரோத குடியேற்றவாசிகள் ஐரோப்பாவிற்குள் பிரவேசிப்பது ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பிற்கு ஆபத்து என்ற பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அண்மைக்காலத்தில் சிரியா, ஆப்கானிஸ்தான், ஈராக், ஈரான் உட்பட மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து பெருந்தொகையான அகதிகள் தினமும் வருகை தருகின்றனர். இவர்களை கட்டுப்படுத்துவதற்கும் கையாள்வதற்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி உள்ளன.

சுவிட்சர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்காவிட்டாலும் ஐரோப்பாவில் இருக்கும் நாடு என்ற வகையில் அகதிகள் பிரச்சினையை எதிர்நோக்கி உள்ளது. அண்மைக்காலத்தில் ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஒஸ்ரியா ஆகிய நாடுகளுடனான எல்லைகளில் சுவிஸ் குடிவரவு அதிகாரிகள் கடும் சோதனைகளை மேற்கொண்டிருக்கின்ற போதிலும் இந்த கட்டுப்பாடுகளையும் மீறி இந்த வருடத்தில் மாத்திரம் சுவிட்சர்லாந்தில் 8321 பேர் அகதி தஞ்சம் கோரியுள்ளனர்.

சுவிஸ் சமஷ்டி ஆட்சி என்பது நேரடி ஜனநாயக கட்டமைப்பை கொண்டதாகும். நாட்டில் எந்தவித சட்டரீதியான மாறுதல்களை கொண்டு வரவேண்டும் என்றால் அதனை ஜனாதிபதியோ அல்லது அமைச்சரோ தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி கொண்டுவர முடியாது. நாடாளுமன்றம் கூட பாரிய மாற்றங்களை கொண்டுவர முடியாது.

அகதிகளை உள்வாங்குவது, வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்குவது, வரியை உயர்த்துவது, ஐரோப்பிய நாடுகளுடன் இணைவது உள்ளிட்ட எந்த விவகாரமாக இருந்தாலும், சுவிஸ் மக்கள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே அதனை நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்ற முடியும்.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து கொள்ளுமாறு ஐரோப்பிய ஒன்றியமும் ஜேர்மன், பிரான்ஸ், இத்தாலி, ஒஸ்ரியா போன்ற அயல்நாடுகளும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்ற போதிலும் சுவிஸ் நாட்டில் இரு தடவைகள் நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பில் இந்நாட்டு மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதற்கு மறுப்பு தெரிவித்து விட்டனர்.

அகதிகளுக்கு முற்றிலும் எதிரான கருத்துக்கள் கொண்டுள்ள சுவிஸ் மக்கள் கட்சியை அபாரமாக வெற்றி பெற வைத்துள்ளதால், சுவிஸ் மக்களுக்கும் அதிகரிக்கும் அகதிகள் எண்ணிக்கையில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதையே காட்டுகிறது.

சுவிட்சர்லாந்தின் பூர்வீக குடிகளில் 90வீதமானவர்கள் சுவிஸ் மக்கள் கட்சிக்கே வாக்களித்துள்ளனர் என்றும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. பெருந்தொகையான அகதிகள் தமது நாட்டிற்குள் பிரவேசிப்பதால் தாம் சிறுபான்மையாக்கப்பட்டு விடுவோம் என்ற அச்சம் பூர்வீக குடிகளிடம் காணப்படுகிறது. இதன் வெளிப்பாட்டையே இத்தேர்தல் பிரதிபலித்திருப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
இதே கருத்தை தான் வெற்றிக்கு பிறகு பெர்ன் மாகாணத்தில் சுவிஸ் மக்கள் கட்சியின் தலைவரான டோனி புரூன்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

‘சுவிஸ் மக்கள் கட்சிக்கு கிடைத்துள்ள இந்த வெற்றி மூலம் ஒரு விடயம் தெளிவாக தெரிகிறது. அதாவது, அதிகரிக்கும் அகதிகளின் எண்ணிக்கையால் சுவிஸ் மக்கள் வேதனை அடைந்துள்ளனர் என்பதை தான் இந்த வெற்றி காட்டுகிறது” என டோனி புரூன்னர் தெரிவித்துள்ளார்.

ஏ.எவ்.பி என்ற செய்தி ஸ்தாபகத்திற்கு அளித்த பேட்டியில், வெளிநாட்டவர்களுக்கு உகந்த நாடுகளாக ஐரோப்பாவை மாற்ற மாட்டோம். இந்த வெற்றிக்கு பிறகு, உலக நாடுகளுக்கு ஒரு செய்தியை வெளிப்படுத்துகின்றோம்.

இனிவரும் காலங்களில், சுவிஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் என்ற பேச்சிற்கு இடமில்லை. யுத்தங்களங்களிலிருந்து உயிர் பிழைத்து தப்பி வரும் அகதிகளுக்கு கூட அடைக்கலம் வழங்க மாட்டோம்” என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்தில் தேசிய அரசாங்க முறையே நடைமுறையில் உள்ளது. அமைச்சரவையிலும் ஒவ்வொரு கட்சிக்கும் கிடைக்கும் ஆசனங்களின் எண்ணிக்கையை பொறுத்து அமைச்சு எண்ணிக்கை வழங்கப்படுகிறது. 7 அமைச்சர்களும் இதில் ஒருவர் ஜனாதிபதியாகவும் ( ஜனாதிபதி ஒரு வருடத்திற்கு ஒருவர் என்ற ரீதியில் ) பணியாற்றுவார்கள்.

கடந்த முறை சுவிஸ் அமைச்சரவையில் சுவிஸ் மக்கள் கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவியே வழங்கப்பட்டிருந்தது.

தேர்தல் பிரச்சாரத்தின்போது ’இனி ஒரு அமைச்சரவை ஏற்க முடியாது. புதிய அரசாங்கம் அமையும்போது சுவிஸ் மக்கள் கட்சிக்கு இரண்டு அமைச்சரவைகள் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காவிட்டால், கூட்டணியில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சியாக செயல்படுவோம்’ என பகிரங்க அறிவிப்பு வெளியிட்டார்.

கருத்து கணிப்பின் போது சுவிஸ் மக்கள் கட்சியே வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அக்கட்சி 50வீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளையும் 65 ஆசனங்களையும் பெறும் என எதிர்பார்க்கவில்லை, சுவிஸ் மக்கள் கட்சி எதிர்பார்த்ததை விட அதிக ஆசனங்களை பெற்றதால் தன்னுடைய கோரிக்கையை மேலும் பலப்படுத்தியுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 9ம் திகதி, புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சரவைகளை தீர்மானிக்கும் நிகழ்வு நடைபெற உள்ளதால், அதில் சுவிஸ் மக்கள் கட்சிக்கு எத்தனை அமைச்சரவை ஒதுக்கீடு செய்யப்படும் என்பது தீர்மானிக்கப்படும்.

புதிதாக நியமிக்கப்பட இருக்கும் 7 அமைச்சர்களிலிருந்து ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார். அவர் 2016 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியிலிருந்து டிசம்பர் 31ஆம் திகதிவரை ஜனாதிபதியாக பதவி வகிப்பார். அடுத்த ஆண்டுக்கான ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட இருப்பவர் சுவிஸ் மக்கள் கட்சியை சேர்ந்தவராகத்தான் இருப்பார். அத்துடன் சுவிஸ் மக்கள் கட்சிக்கு 3 அமைச்சர் பதவிகளும், சமஷ்டி ஜனநாயகக்கட்சி மற்றும் சோசலிசக்கட்சி ஆகியனவற்றிற்கு தலா 2 அமைச்சு பதவிகளும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது சுவிஸில் உள்ள வெளிநாட்டவர்களுக்கு சாதகமான எதிர்காலமாக இருக்காது என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இத்தேர்தல் முடிவுகள் இன்னொரு அச்சத்தையும் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு ஏற்படுத்தி உள்ளது.
2004-2007 காலப்பகுதியில் சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு பெரும் சிம்மசொப்பனமாக விளங்கிய சுவிட்சர்லாந்தின் பெரும் சர்ச்சைக்குரிய அரசியல்வாதியான கிறிஸ்தோப் புளக்கர் என்பவரின் மகள் மக்டெலெனா புளொக்கர் கிறபுண்டன் மாநிலத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

சுவிஸ் மக்கள் கட்சியின் துணைத்தலைவராக 2007ஆம் ஆண்டுவரை இருந்த கிறிஸ்தோப் புளொக்கர் கடும்போக்கான முடிவுகளால் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டிருந்தார். இந்நிலையில் புளொக்கரின் மகளின் வெற்றி சுவிஸ் மக்கள் கட்சியை மீண்டும் கடும்போக்குவாதத்திற்கு கொண்டு செல்லலாம் என கருதப்படுகிறது.

சுவிஸ் மக்கள் கட்சி மீது சுவிஸ் மக்கள் நம்பிக்கை வைப்பதற்கு சுவிஸில் குடியேறியுள்ள வெளிநாட்டவர்களின் நடவடிக்கைகளும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. சுவிஸில் குடியேறியுள்ள வெளிநாட்டவர்கள் ( தமிழர்கள் உட்பட) பலர் சுவிஸ் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைய நடப்பதில்லை. இது சுவிஸில் உள்ள பூர்வீகக்குடிகளுக்கு வெறுப்பை ஏற்படுத்திருப்பதன் வெளிப்பாடு தான் வெளிநாட்டவர்களுக்கு எதிரான கொள்கை உள்ள சுவிஸ் மக்கள் கட்சியின் வெற்றியாகும்.
(இரா.துரைரத்தினம்)

12065640_749325325179081_6985240888745025925_n 12190113_749325338512413_3297775573695040214_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux