யாழ் தீவகம் மண்கும்பான் செட்டிகாட்டுப் பகுதியில் அமைந்துள்ள நீர் வழங்கும் மையத்திற்கு அருகில் 100அடியில் நீர்த்தாங்கி ஒன்று மிகப் பிரமாண்டமாக முறையில் அமைப்பதற்கான முதற்கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
நவீன இயந்திரத்தின் துணையுடன் அடித்தளம் இடுவதற்காக மண் அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதனை கீழே உள்ள படங்களில் காணலாம்.
இந்நீர்த்தாங்கி ஏன் மண்கும்பானில் அமைக்கப்படவுள்ளது என்று நாம் பலரிடம் விசாரித்த போது…
இரணைமடு குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு மாற்றீடாக-யாழ் குடாநாட்டின் ஒரு பகுதியில் கடல் நீரை நன்னீராக மாற்றி-அங்கிருந்து குளாய் மூலம் மண்கும்பானுக்கு எடுத்து வந்து-இங்கு அமைக்கப்படவுள்ள நீர்த்தாங்கியில் தேக்கி-பின்னர் தீவகத்தின் கிராமங்களுக்கு குளாய் மூலம் விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கின்றனர்.இதற்கமைவாக நிலத்தின் கீழ் குளாய்கள் பொருத்தும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால்……
இப்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சியினால்-தீவகத்தின் பல கிராமங்களில் குடிதண்ணீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும்-இதனை நிவர்த்தி செய்யும் நோக்கோடு -யாழ் அரச அதிபரின் பணிப்புரையின் பேரில் தற்போது குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் யாழ் பத்திரிகைச் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.
தீவுப்பகுதியில் நல்ல தண்ணீர் கிடைக்கின்ற கிராமங்களாக-அல்லைப்பிட்டியும் மண்கும்பானும் அமைந்துள்ள நிலையில்-மண்கும்பான் சாட்டியிலிருந்தும்-மண்கும்பான் செட்டிகாட்டில் அமைந்துள்ள நீர் வழங்கும் மையத்திலிருந்தும் பெறப்படும் நல்ல தண்ணீரே தீவகத்தின் ஏனைய கிராமங்களுக்கு தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
மண்டைதீவுக்கு குளாய் மூலம் வழங்கப்பட்டு வரும் குடிதண்ணீர் மக்களுக்கு போதுமானதாக இல்லாததால் -மேலதிகமாக பவுசர் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
தீவகத்தில் நல்ல தண்ணீரும்-மணலும் பெறக்கூடிய பெயர் போன முதற்கிராமமாக இன்றுவரை மண்கும்பானே பேசப்படுகின்றது.எதிர்காலத்தில் இக்கிராம மக்கள் இவை இரண்டையும் இழந்து விடாது தடுப்பது சமூக ஆர்வலர்களின் முக்கியமான கடமையாகும்.