அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்திற்குப் பின்னர் எதிர்க் கட்சித் தலைவராகும் இரா சம்பந்தன் -விபரங்கள் இணைப்பு!

அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்திற்குப் பின்னர் எதிர்க் கட்சித் தலைவராகும் இரா சம்பந்தன் -விபரங்கள் இணைப்பு!

இலங்கை நாடாளுமன்றத்தில் 32 ஆண்டுகளுக்குப் பின்னர் எதிர்க் கட்சித் தலைவராக தமிழர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி 8ஆவது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நியமிக்கப்படவுள்ளதாகவும், இந்த நியமனம் நாளை அறிவிக்கப்படலாம் எனவும் உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என்பன இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்துள்ளன.

sampanthan_4இந்த நிலையில் அரசாங்கத்தில் இணையாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அதிகளவான 16 ஆசனங்களை கொண்ட கட்சியாக விளங்குகிறது. எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெறுவதற்குரிய அனைத்து வகையிலான தகுதிகளையும் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் அடிப்படையில் இரா. சம்பந்தன் நாளைய தினம் நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவினால் எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை இதற்கான ஒப்புதலை ஜனாதிபதியும் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மக்கள் விடுதலை முன்னணியும் இதே நிலைப்பாட்டில் இருப்பதாக பல முறை அறிவித்துள்ளது. இதற்கிடையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குமாரவெல்கமவை எதிர்க் கட்சி தலைவராக நியமிக்க வேண்டும் என்ற கையெழுத்துக் கோரிக்கை ஒன்றும் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனினும் வெற்றிலை சின்னத்தின் கீழ் தேர்தலில் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் (ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி) உறுப்பினர்கள் தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதால் அதில் ஒரு குழு தனியான கட்சியாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்ற வாதம் ஒன்றும் தற்போது முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டால்,அது 1983 ஆம் ஆண்டுக்குப் பின்னர் குறிப்பாக 32 வருடங்களுக்கு பின்னர் தமிழர் ஒருவர் இலங்கையில் எதிர்க்கட்சி தலைவராக நியமனம் பெறுவார். ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனவின் ஆட்சியின் போது தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 1983ஆம் ஆண்டு ஒக்டோபர்  24ஆம் திகதிவரை எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

amirthalingam_mgr

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux