தேர்தலில் வெற்றியடைந்த,த.தே.கூட்டமைப்பிடமிருந்து தமிழ் மக்கள் எதிர்பார்ப்பது என்ன?சிறப்புக் கட்டுரை இணைப்பு!

தேர்தலில் வெற்றியடைந்த,த.தே.கூட்டமைப்பிடமிருந்து தமிழ் மக்கள் எதிர்பார்ப்பது என்ன?சிறப்புக் கட்டுரை இணைப்பு!

மாற்று சிந்தனைகள் உருவான போதிலும் மக்களின் தெரிவில் மாற்றமில்லை

பாராளுமன்றத் தேர்தலில் எதிர்பார்க்கப்பட்ட வெற்றியைப் பெற்றிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால நகர்வுகள் எவ்வாறாக இருக்குமென்பதுதான் வடக்கு, கிழக்கு மக்களின் இப்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

பொதுத் தேர்தலில் இருபது பாராளுமன்ற ஆசனங்களை வென்றெடுப்பதே தங்களது இலக்கு என்று தேர்தல் பிரசாரங்களின் போது தமிழ்க் கூட்டமைப்பு அறிவித்து வந்த போதிலும் கூட்டமைப்பினரிடம் அந்த நம்பிக்கை இருக்கவில்லை. எவ்வாறுதான் கணக்குப் போட்டாலும் தேசியப் பட்டியல் நீங்கலாக பதினைந்து ஆசனங்களுக்கு மேல் தாண்ட முடியாதென்பதே தமிழ்க் கூட்டமைப்பின் எதிர்பார்ப்பாகக் காணப்பட்டது. வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களும் ஏறக்குறைய அவ்வாறுதான் எதிர்பார்த்திருந்தார்கள்.

தமிழ்க் கூட்டமைப்பு இப்போதைய தேர்தலில் சந்தித்த சவால்களையெல்லாம் வைத்துப் பார்த்த போது பன்னிரண்டு ஆசனங்கள் கிடைத்தால் கூட கூட்டமைப்புக்கு வெற்றிதான் என்றே மக்கள் கருதினர்.

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸில் கஜேந்திரகுமார் பொன்னம் பலம் களமிறங்கியதை வடக்கின் இரண்டாவது அரசியல் சக்தியாக நம்பியோர் பலர். அதேசமயம் வித்தியாதரன் தலைமையில் முன்னாள் போராளிகள் அமைப்பு தேர்தலில் குதித்தமை தமிழ்க் கூட்டமைப்புக்கு ஓரளவு கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது உண்மை.

இதற்கெல்லாம் மேலாக வடக்கில் ஈ. பி. டி. பியின் சவால், கிழக்கில் களமிறக்கப்பட்ட சுயேச்சைகள் என்றெல்லாம் தமிழ்க் கூட்டமைப்பை பல தரப்பும் சுற்றிவளைத்திருந்ததனால் பன்னிரண்டு ஆசனங்கள் மட்டும் கிடைக்குமென்ற நம்பிக்கையே வலுத்திருந்தது.

தேர்தல் முடிவை வைத்துப் பார் க்கின்றபோது தமிழ்க் கூட்டமைப் புக்குக் கிடைத்திருப்பது எதிர்பார்ப்புக்கும் மேலான வெற்றியென்றே கூற வேண்டியுள்ளது.

வடக்கு, கிழக்கு அரசியலைப் பொறுத்தவரை அங்குள்ள மக்களின் உள்ளக்கிடக்கையைப் புரிந்து கொள்வது மிகவும் கடினம்.

தமிழ்க் கூட்டமைப்புக்கு வாக்களித்து தமிழ் மக்கள் சலிப்படைந்து போயுள்ளனரென்பது பொதுவான அபிப்பிராயமாக இருந்தது. வடக்கு, கிழக்கு மக்களின் அரசியல் தொடர்பாக மாற்றுச் சிந்தனை உருவாக வேண்டுமென்ற எண்ணமும் அங்கு மேலோங்கியிருந்தது.

மாற்றுச் சிந்தனையென்று வகைப் படுத்துகின்ற போது இரு விதமான எண்ணங்களை இங்கே குறிப்பிட வேண்டியிருக்கிறது.

யுத்தம் முடிவுக்கு வந்து ஆறு வருடங்களாகின்ற இந்நிலையில் வடக்கு, கிழக்கு மக்களுக்கான அரசி யல் உரிமைகளை வெற்றெடுப்பதில் இம்மியளவு நகர்வைக் கூடக் காண முடியவில்லையென்பதால் தமிழ்க் கூட்டமைப்பை நோக்கியே ஏனைய அரசியல் தரப்புகள் சுட்டுவிரல் நீட்டி வந்தன. அரசியல் தீர்வை காலம் தாழ்த்துவதால் ஆகப் போவது எதுவுமில்லையென்பதால் வடக்கு, கிழக்கு மக்களுக்கான மாற்றுத் தலைமத்துவம் தேவையென்று வாதிடுவோரும் உள்ளனர்.

இவ்வாறான மாற்று சிந்தனையுடையோர் வடக்கில் களமிறங்கிய அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், முன்னாள் போராளிகள் அமைப்பு போன்றவற்றின் கருத்துகளால் கவரப்படக்கூடுமென்ற எதிர்பார்ப்பு நிறையவே இருந்தது.

அதற்கேற்றாற் போன்று வடக்கில் தமிழ்க் கூட்டமைப்புக்கு எதிராகக் களமிறங்கிய இவ்விரு அணியினரின் தேர்தல் விஞ்ஞாபனங்களும் ஓரளவு தீவிரத் தன்மையையே கொண்டிருந்தன.

மத்திய அரசில் ஆட்சி மாற்றமொன்று ஏற்பட்டு மஹிந்த ராஜபக்ஷவின் கைகளில் ஆட்சியதிகாரம் செல்லும் பட்சத்தில் வடக்கு, கிழக்கில் சிறுபான்மை மக்களின் இருப்புக்கு ஏற்படக்கூடிய ஆபத்தையிட்டு அகில இலங்கை தமிழ்க் காங்கிரசும், முன்னாள் போராளிகள் அமைப்பும் கவனம் செலுத்தியிருக்கவில்லை. போருக்குப் பின்னர் வடக்கு, கிழக்கில் படையினரின் பிரசன்னத்தை அதிகரித்து, அங்கு சிங்கள மக்களின் விகிதாசாரத்தை அதிகரிப்பதில் மஹிந்த ராஜபக்ஷ காண்பித்த கரிசனையின் உள்நோக்கத்தை குமார் பொன்னம்பலமோ அன்றி வித்தியாதரனோ கவனத்தில் கொள்ளாததற்கான காரணத்தை இன்னும் தான் புரிந்துகொள்ள முடியாதிருக்கிறது.

தமிழ் மக்களின் இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்கான அரசியல் தீர்மானங்களுக்கே இவ்விரு அமைப்புகளும் முதலில் வந்திருக்க வேண்டும். யுத்தக் குற்றச்சாட்டுக ளையும் அரசியல் உரிமைகளையும் முன்னிலைப்படுத்தி விட்டு தமிழி னத்தின் இருப்பைப் பறிகொடுத்து விடுவதால் ஆகப் போவது எதுவுமே இல்லை.

வடக்கு மக்கள் இவ்வாறான கோணத்தில் தான் சிந்தித்து முடி வெடுத்துள்ளனரென நினைக்கத் தோன்றுகிறது. தேர்தலில் வடக்கில் கிடைத்த ஐந்து ஆசனங்களையும் வைத்துப் பார்க்கின்ற போது இம் முடிவுக்கே வர முடிகிறது.

வடக்கு, கிழக்கு மக்கள் மத்தியில் நிலவிய மாற்றுச் சிந்தனைக்கான மற்றைய காரணத்தையும் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது. ‘தமிழ் தேசியம்’ என்ற கருத்தியல் வடக்கு, கிழக்கு மக்களை பல தசாப்த காலமாக அரசியல் அநாதைகளாக்கியுள்ளது என்பது வெளிப்படை.

கல்வி, தொழில் வாய்ப்பு, இட மாற்றங்கள், தனிநபர் பொருளாதார அபிவிருத்தியில் அரசின் உதவிகள், பிரதேச கட்டுமானத் திட்டங்கள் என்றெல்லாம் பல்வேறு நலன் திட்டங்களிலும் கூடுதலாகப் புறக்கணிக்கப் பட்டவர்கள் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் என்று கூறுவதில் தவறில்லை. அரசிடமிருந்து கிடைக்கின்ற சலுகைகளில் கால்பங்கு கூட தமிழ் மக்களைச் சென்றடையவில்லை. யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னரும் இதேவிதமான புறக்கணி ப்பு தொடரவே செய்தது.

கிழக்கின் முதலமைச்சராக சிவனேசதுரை சந்திரகாந்தன் பதவி வகித்ததற்குப் பின்னரான காலப் பகுதியில் கிழக்கு மாகாண சபையினால் தாங்கள் ஓரவஞ்சகமான முறையில் நடத்தப்பட்டதாக தமிழ் மக்கள் மத்தியில் ஒரு குறை உண்டு. அக்குற்றச்சாடை மறுக்கவும் முடியாதிருக்கிறது.

கிழக்கு மாகாண சபை நிருவாகத் தின் கீழ் வழங்கப்பட்ட தொழில் வாய்ப்பு நியமனங்களையும் இடமாற்றங்களையும் வைத்துப் பார்க்கின்ற போது ஏற்றத் தாழ்வுகளையும் புறக் கணிப்புகளையும் மிகத் தெளிவாகவே புரிந்து கொள்ள முடியும். கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களின் விகிதாசாரத்தை வைத்துப் பார்க்கின்ற போது இவ்வாறான புறக்கணிப்பு அவர்களை ‘அரசியல் அநாதைகள்’ என்ற வரையறைக்குள்ளேயே தள்ளியிருக்கின்றது.

இவ்வாறு நோக்கும் போதுதான் தமிழ்க் கூட்டமைப்பு மீது ஒருவித சலிப்பும் கூடுதல் எதிர்பார்ப்பும் அங்குள்ள மக்களுக்கு ஏற்படுகிறது. அரசியல் உரிமைகள் என்பதையெல்லாம் சிறிது காலத்துக்கு மூட்டை கட்டி வைத்துவிட்டு தமிழ் மக்களுக்குரிய ஏனைய உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதில் தமிழ்க் கூட்டமைப்பு இனிமேல் கவனம் செலுத்த வேண்டுமென்ற கோரிக்கைகள் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் வலுவடைந்திருக்கின்றன. அரசியல் உரிமைகளை வென்றெடுக்கும் முயற்சிகளுக்குச் சமாந்தரமான முறையில் தமிழ் மக்களுக்கான ஏனைய சலுகைகளைப் பெற்றெ டுக்கும் முயற்சிகளையும் தமிழ்க் கூட்டமைப்பு முன்னெடுக்க வேண்டுமென்பதே இன்றைய பொதுவான கோரிக்கையாக உள்ளது.

வடக்கில் தேர்தலில் போட்டியிட்ட ஏனைய கட்சிகளின் சவால்களும் மத்தியிலும் தமிழ்க் கூட்டமைப்பு தனது வாக்கு வங்கி சரிந்து விடாமல் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. வடக்கில் ஈட்டப்பட்ட ஐந்து ஆசனங்க ளும் கூட்டமைப்பைப் பொறுத்த வரை பெரு வெற்றியொன்று தான் கூற வேண்டும். இன்னும் சொற்ப வாக்குகளைப் பெற்றிருப்பின் ஆறு ஆசனங்களை தமிழ்க் கூட்டமைப்பினால் பெற் றுக் கொண்டிருக்க முடியும்.

அதேபோன்றுதான் வன்னியி லும் கிழக்கிலும் கூட தமிழ்க் கூட்டமைப்பின் வாக்கு வங்கி இன்னுமே சரிந்து விடவில்லை. மாற்று அரசியல் சிந்தனையை நாடுகின்ற தமிழ் மக்களின் தெரிவு இன்னுமே தமிழ்க் கூட்டமைப்பாக இருப்பது உண்மையிலேயே ஆய்வுக்குரியதாகிறது. தமிழ்க் கூட்டமைப்புக்கு நிகராகக் கருதக் கூடிய மாற்று வழிமுறைக்குரிய அரசியல் சக்தியொன்று வடக்கு, கிழக்கில் இன்னும் உதயமாகவில்லையென்பது இதற்கான காரணமாகவிருக்கலாம்.

அதேசமயம் தமிழ் மக்கள் தங்களது அபிலாஷைகளுக்குப் பொருத் தமான அரசியல் சக்தியாக அகில இல ங்கை தமிழ்க் காங்கிரஸையோ அல்லது முன்னாள் போராளிகள் அமைப்பையோ ஏற்றுக்கொள்ளத் தயாரில்லையென்பதும் தெரிகிறது.

தமிழ் மக்களின் அரசியல் உரிமை க்கான போராட்டத்துக்கு தீவிர வடிவத்தைக் கொடுப்பதில் தமிழ் மக்களுக்கு உடன்பாடு பெரிதாக இல்லை. முரண்பாடான அரசியலில் இனிமேலும் காலம் தாழ்த்துவதை விடுத்து தென்னிலங்கை அதிகார பீடத்துடன் இணக்கப்பாட்டுடன் பயணம் செய்வதில் மக்கள் பற்றுறுதி கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. தமிழ்க் கூட்டமைப்பை மீண்டும் தெரிவு செய்தமைக்கான காரணமும் இதுவேயாகும்.

தமிழ்க் கூட்டமைப்பு இனிமேல் எவ்வாறு தனது அரசியலை முன்னெடுக்கப் போகிறது? இதுவே மக்களின் எதிர்பார்ப்பு.

மூன்று தசாப்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் சமூகத்தின் குறைகள் இன்னும் தீர்க்கப்படாம லேயே உள்ளன. அரசியல் உரிமைகள் என்பதற்கப்பால் ஏனைய அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படு வது அவசியமாகிறது. தமிழ்க் கூட்ட மைப்பு ஆளுமை நிறைந்ததாக தன்னை மாற்றிக் கொண்டு புதிய பாதையில் பயணிக்க வேண்டும். இதுவே இன்றைய தேவையாகிறது.

20150710_150101

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux