தெருமூடி மடம் என்றால் என்ன ?
பருத்தித்துறை நகரில் தெருமூடி மடங்கள் மந்திகை, மாலுசந்தி ஆகிய இடங்களில் இருந்த போதும் தற்போது பருத்தித்துறை தெருமூடி மடம் மட்டுமே எஞ்சியிருக்கிறது. ஏனைய இரண்டு இடங்களில் இருந்த தெருமூடி மடங்கள் இடிக்கப்பட்டு உரிய பராமரிப்புமின்றி கைவிடப்பட்ட நிலையில் “ இது தான் அது” என்று சொல்லும் மோசமான நிலைக்கு அவை இரண்டும் தள்ளப்பட்டு விட்டன.
முன்னைய காலங்களி;ல் வாகன வசதிகள் குறைவாக இருந்தது. இதனால் மக்கள் எங்கும் எதனைப் பெறுவதாக இருந்தாலும் நடைப்பயணம் மூலமாகவே அவற்றினைப் பெற்றுக்கொண்டார்கள். பருத்தித்துறையிலிருந்து செல்வோரும் ஏனைய இடங்களிலிருந்து வருவோரும் சுமை தாங்கிகளுடன் வருகின்ற போது இவ்விடத்திலிருந்து இளைப்பாறி, உட்கார்ந்து விட்டு அயல் ஊர்களுக்கும் அதிலும் குறிப்பாக தும்பளை, மாதனை, நெல்லண்டை, கற்கோவளம், வராத்துப்பளை, வல்லிபுரம் ஆகிய ஊர்களுக்கும் உறவினர்களின் வீடுகளுக்கும் செல்வார்கள்.
இன்னும் பலர் அதிக தூரத்திலிருந்து வருவோர் தங்குவதற்கு உறவினர்கள் இல்லாத நிலையில் தெருமூடி மடத்திலே தங்கி விட்டே செல்வார்கள். இன்னும் கூடப்பார்த்தால் 60,70 வயது நிரம்பிய பெரியோர்கள் இளைப்பாறுவதற்கும் கூடிக்கதைப்பதற்கும் ஒரு நாளைக்கு ஒரு தடவை யென்றாலும் சிறிது நேரம் இதில் இருக்காமல் செல்லமாட்டார்கள். இதனால் தான் இன்னும் இவ்மடம் பல்வேறு வீதி அபிவிருத்திகள் என்று வந்து இதை உடைக்க முற்பட்ட போதும் அக்காரியம் தோல்வியில் அமைந்ததும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு நோயினால் துன்பப்படுகின்ற பலருக்கும் இவ்விடம் அடைக்கலம் கொடுப்பதோடு, பொழுது போக்குகின்ற இடமாகவும் காணப்படுகின்றது.
யாழ்ப்பாணப்பண்பாட்டு பாரம்பரியத்தைப் பேணும் வகையில் பல்வேறு பண்பாட்டுத் தொன்மைகள் இருப்பது போல பருத்தித்துறைக்கென்றும் தனித்துவமான பண்பாட்டுக் குறிகாட்டிகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் தெருமூடி மடமாகும். யாழ்ப்பாணத்தில் பண்டார மடம், உப்பு மடம், முத்தட்டு மடம், மருதனார் மடம், ஆறுகால் மடம், கந்தர் மடம், நாவலர் மடம், செட்டியர் மடம், சுப்பர் மடம், ஒட்டு மடம், பண்டத்தரிப்பு மடம், சாரையடி மடம், சங்கத்தானை மடம், பனைமுனை மடம், நெல்லியடி மடம், திருநெல்வேலி மடம், மடத்துவாசல் ஆகிய இடங்களில் இத்தகைய தங்குமிடங்கள் இருந்ததற்கான சான்றுகள் இருந்தாலும் ஆனால் பருத்தித்துறை தெரு மூடி மடம் போல தெருவை மூடி இருமருக்கிலும் இருந்துள்ளன என்பது வெளிப்படையான உண்மையே.
மனித நேயத்தைக் கருத்திற் கொண்டு மக்களின் நீர் தாகம், தண்ணீர் தேவைகளை நிறைவு செய்யும் முயற்சியில் பாதையின் இடையிடையே கிணறுகள் தோண்டி அக்கிணறுகளுக்கு அருகி லே தண்ணீர் தொட்டிகளை அமைத்து கிணற்றிலிருந்து பெறப்படும் நீரை மனிதனுக்கு மட்டுமன்றி ஆடு, மாடு போன்ற கால் நடைகளும் விலங்குகளும் தாகம் தீர்க்கத் தொட்டிகளை கட்டினர். இவற்றினை கட்டிய பிற்பாடு ஏதோ ஒரு குறைபாட்டை கண்டு உணர்ந்தனர். அதன் பயனாக ஆவு ரோச்சிக்கல்லை தண்ணிர் தொட்டிக்கு அருகில் அமைந்தனர். ஆடு,மாடுகள் நீர் அருந்திய பின் உடம்பில் ஏற்பட் டிருக்கும் நனமச்சலைப் அக்கல்லிலே உரோஞ்சி போக்கிடும் இந்தக் கல்லு மூன்று அடி தொடக்கம் நான்கு அடி உயரமும் ஒன்றரையடி அகலமாகவும் இருந்தது.
வாகனங்கள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தவதற்கு முன்னர் மாட்டு வண்டியே மக்களுக்கு பெரிதும் உதவி வந்தன. மாட்டு வண்டிகளின் எண்ணிக்கையும் குறைந்திருந்தன. இதனால் மாட்டு வண்டில்களின் பொதிகளை ஏற்றிச் செல்ல முடியாதவர்கள் கால் நடையாகவே நீண்ட தூரங்களுக்கு பொதிகளைச் சுமந்து செல்லும் போது இடை இடையே இறக்கி இளைப்பாறுவதற்கு மக்கள் பெரிதும் சிரமப்பட்டார்கள். இதனை அவதானித்த நல்மனம் படைத்த மக்கள் ஏற்றதான பாதை ஒரங்களில் ஐந்து அடி அகலமும் 4 தொடக்கம் ஐந்து அடி உயரமான ஒரு மேடை போன்ற சுமை தாங்கியை அமைந்தார்கள். இதனால் தத்தமது பொதிகளை தாங்களாகவே இறக்கிக்கொள்ள சுமைதாங்கிக் கல் கை கொடுத்தது. இவற்றினை அமைத்து விட்ட ஒரு திருப்தியில் மக்கள் வாழ்ந்தனர்.
நூறு வருடங்களுக்கு முன்நோக்கி பார்த்தால் பருத்தித்துறையில் பருத்தி உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்ட இடமாகவும் ஒர் துறை முகமாகவும் விளங்கியிருந்தது. இதனால் பல்வேறு பட்ட மக்களும் இங்கு வந்து குவியும் ஒர் இடமாக இது திகழ்ந்தது. வடை,அப்பம், தோசை ஆகிய தீன்பண்டங்களை வாங்குவதற்கு இலங்கையின் எப்பாகத்திலிருந்தும் வருகை தந்தனர். இன்று போல் மருதங்கேணி பிரதேச செயலகம், கரவெட்டிப் பிரதேச செயலகம் என முன்னர் பிரிக்கப்பட்டு இருக்க வில்லை. இதனால் இப்பிரதேச மக்கள் தமது தேவைகளை நிறை வேற்றிக் கொள்ள பருத்தித்துறை மத்திய பகுதிக்கு வருகை தந்தனர். இம் மக்கள் இளைப்பாறுவதற்கென்று ஒர் தனியான இடம் இருக்கவில்லை.
இந்நிலையையும் கால் நடைப்பயணங்கள், வண்டிப்பாரங்கள், இராப்பயணங்கள், சிற்றூண்டி விடுதி, திருடர் தொல்லை, குறித்த நேர பிரயாணத்தடங்கல், பேய் பிசாசு மூடக் கொள்கைகள், திருத்தல யாத்திரைகள் என்பனவற்றின் தேவையை உணர்த்த மக்கள் பருத்தித்துறை தெரு மூடி மடத்தை உருப்பெறச் செய்தார்கள்.
இந்தத் தெரு மூடி மடம் 150 வருடங்கள் பழைமை வாய்ந்தவையாகும். இதன் கட்டடக்கலை திராவிடக்கலைப்பாணியில் அமைந்த்துள்ளது. வெண் வைரச் சுண்ணக்கல்லினால் உருவாக்கப்பட்ட தூண்கள் அதன் கபோதங்கள் மற்றும் தளம் ஆகிய சிறந்த கொத்து வேலைப்பாடுகளை கொண்டிருக்கின்றன. இங்கு 16 தூண்கள் காணப்படுகின்றன. இவற்றுள் ஆறு தூண்களில் தமிழ் வரிவடிவில் சாசனங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன.
இத்தெரு மூடி மடத்தினது மேற் கூரையானது தூண்களின் கபோதத்திலிருந்து இருபக்கங்களிலும் சமாந்தரமாக மேலெழுப்பட்டுள்ள ஒர் அரைச்சுவரின் மீது அமைக்கப்பட்ட விட்டத்துடன் கூடிய ஒரு சட்டகக் கோப்பினால் தாங்கப்பட்டுள்ளது. இத்தெரு மூடி மடத்தினூடான போக்குவரத்து நடைமுறைகளுக்கு கூரை எந்த வித தடையாக அமையவில்லை. 150 வருடங்களுக்கு முன்னர் இது கட்டப்பட்டாலும் எதிர்கால நிகழ்வுகளின் சிந்தனையிலிருந்தும் எமது முன்னோர்கள் தவறவில்லை என்பதை உண்மையாகவே உணர முடிகின்றது.
பல்வேறு பட்டோருக்கு பல பாதுகாப்புக்களையும் மன ஆறுதலையும் வழங்கிய தெரு மூடி மடம் காலப்போக்கில் என்ன கதியாகும் என்பது கேள்விக்குறியே? இத்தெரு மூடி மடத்தோடு இணைந்திருந்த சுமைத்தாங்கிக்கல், ஆவுரோஞ்சிக்கல், துலாக்கிணறு மற்றும் நீர் தொட்டி ஆகியன முற்றாகச் செயலிழந்து இருந்த இடம் விட்டு நகர்த்து விட்டன. தெரு மூடி மடம் என்ற பெருமையுடன் இதுவொன்றுதான் மிஞ்சியிருக்கின்றது. இதன் பழைமை உணராத பலர் இதனைப் பகடையாய் பயன்படுத்த முயலலாம். இந்தப் பாரப்பரிய தெருமூடி மடத்திற்கு ஒரு காவலாளியை நியமித்தால் இந்தப் பழைமையை இன்னும் எத்தனையோ சந்ததியினருக்கு கையளிக்க முடியும் என்பது புத்தி ஜீவிகளின் எதிர்பார்ப்பாகும்.
இந்தத் தெரு மூடி மடம் யாவரிற்கும் புனிதமானது. இதனைச் துஸ்பிரயோகம் செய்யவோ அல்லது சேதப்படுத்தவோ யாருமே முனையாத வகையில் பாதுகாப்பது எம் சந்ததிக்கான தேடலைச் செய்வதற்குச் சமன்.
விஞ்ஞானம் வளர்ந்து விட்டது என்பதற்காக பழைமையை விட்டுவிட்டு போக முடியாது. தெருவை மூடித்தெருவோரமாக கிடந்தாலும் எத்தனை ஆயிரம் ஆயிரம் மக்களுக்கு அடைக்கலப் பொக்கிஷமாக விளங்கும் இந்த தெரு மூடி மடம் 150 வருடங்களாக எம் முன்னை யோர்களால் பாதுகாக்கப்பட்டது போல நாமும் இன்னும் பல நூற்றூண்டுகள் கட்டிக்காத்து “ தெருவோரம் கிடந்ததையில்லை” என்ற நட்பாசை, நம்பிக்கையுடனும் வாழும் இந்த மடத்திற்கு துரோகம் பண்ணாது பழைமையே எங்கள் வழமை என்று பாதுகாப்போம்.