இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி உடல் உறுப்புப் தான தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் கிட்டதட்ட 2 லட்சம் பேர் மாற்று சிறுநீரகத்துக்காகவும், 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மாற்று கல்லீரலுக்காகவும் பதிவு செய்து காத்திருக்கின்றனர் என்ற வேதனையான செய்தியும் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சிறுநீரகத்திற்காக 2 லட்சம் பேரும், கல்லீரலுக்காக 1 லட்சம் பேரும் மருத்துவமனைகளில் பதிவு செய்து விட்டு காத்திருக்கின்றனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இவர்களில் 2 முதல் 3 சதவீதத்தினருக்கு மட்டுமே உடல் உறுப்புகள் தானமாக கிடைக்கிறது.
ஏனெனில், 121 கோடி இந்தியர்களில் வெறும் ஒரே ஒரு சதவீதத்தினர் மட்டுமே தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
வாழ்வளிக்க உதவுங்கள்:
கடந்த 2 வருடங்களாக உறுப்பு தானம் செய்வதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று கவலை தெரிவித்துள்ள மருத்துவர்கள், இறந்த பின் மக்கி மண்ணாகப் போகும் உறுப்புகளை தானமாக அளித்து மற்றவர்களுக்கு வாழ்வளிக்க உதவுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
22 ஆயிரம் பேர் மட்டுமே பதிவு:
எய்ம்ஸ் உறுப்பு தான வங்கிக் கணக்குப் படி, 2010 ஆம் ஆண்டில் இருந்து இப்போது வரை 22,500 பேர் மட்டுமே தாங்கள் இறந்த பிறகு தங்களின் உறுப்புகளை தானம் தர பதிவு செய்திருக்கிறார்கள்.
இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகம்:
எடுப்பதும், தேவைப்படுகிறவருக்கு பொருத்துவதும் மிக நுட்பமான, முக்கியத்துவம் வாய்ந்த சேவையாகும். இந்தியாவில் உடல் உறுப்புகள் தேவைப்படுவோர் எண்ணிக்கைக்கும், கிடைக்கும் உறுப்புகளின் எண்ணிக்கைக்கும் இடையே பெரும் இடைவெளி இருக்கிறது. மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் உறுப்புகள் கிடைக்காமல் இறப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
எண்ணிக்கையை குறைக்கலாம்:
இந்தியாவில் சராசரியாக ஒரு வருடம் 80 லட்சம் பேர் இறக்கிறார்கள். அவர்களில் ஒரு சில நூறு பேரின் உறுப்புகள்தான் தான மாக கிடைக்கின்றன. தேவைப்படும் அளவு உறுப்புகள் தானமாக கிடைத்தால், ஒருசில உறுப்புகளின் செயல்பாடு சரி இல்லாமல் மரணமடையும் நோயாளிகளின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்துவிடலாம்.
தவறான எண்ணங்களை விட்டு விடுங்கள்:
மூளைச்சாவை எட்டியவர்களிடம் இருந்து மட்டுமே உறுப்புகள் தானம் பெற முடியும் என்பதில்லை. உயிரோடு இருப்பவர்களும் கிட்னி, ஈரல் போன்ற குறிப்பிட்ட உறுப்புகளை தானம் செய்யலாம். அப்படி தானம் செய்யும்போது தனது ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்றும், வாழும் மீதிகாலம் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டும் என்றும் தானம் செய்பவர்கள் நினைப்பது சரியில்லை.
உடல் உறுப்பு தானம் அவசியம்:
நீங்கள் செய்யும் உறுப்பு தானம் பல பேரின் உயிரினைக் காப்பாற்றும்… இந்த உடல் உறுப்பு தான தினத்தில் உறுப்புகளை தானம் செய்து, மரணத்தை வென்று உயிர் பறந்த பின்னும் உலகில் வாழுங்கள்!