இலங்கைத் தமிழ் மீனவர்கள் உருவாக்கியுள்ள ‘லக்ஸ்மன் கடல் காப்பு படை-தமிழகப் பத்திரிகை தினமலரிலிருந்து……
Sea Black Tiger Captain Laxman Kugathasan Pranavan Nallur Jaffna

இலங்கைத் தமிழ் மீனவர்கள் உருவாக்கியுள்ள ‘லக்ஸ்மன் கடல் காப்பு படை-தமிழகப் பத்திரிகை தினமலரிலிருந்து……

இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ராட்சத மீன்பிடி விசைப் படகுகளை அடித்து விரட்ட, இலங்கை தமிழ் மீனவர்கள், ‘லக்ஸ்மன் கடல் காப்பு படை’ என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளனர்.

ஆயுதங்களை இயக்குவதில் சிறப்பு பயிற்சி பெற்ற முன்னாள் போராளிகள், இலங்கை, ‘மீன்வளப் பாதுகாப்பு படை’க்கு அதிரடி தாக்குதல் நடத்துவதற்கான பயிற்சிகள் அளிக்கத் துவங்கியுள்ளனர். இவர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளிக்கும் அணிக்கு, ‘லக்ஸ்மன் டீம்’ என்று பெயர் சூட்டியுள்ளதாக, இலங்கை மீனவர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

மீன்பிடித் தொழில்:

இலங்கையில் இனக்கலவரம் மற்றும் இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் நடந்த போரால், அங்கு மீன்பிடித் தொழில் அடியோடு பாதிக்கப்பட்டிருந்தது. அண்மையில் போர் முடிவுக்கு வந்த பின், இலங்கை தமிழ் மீனவர்கள், 25 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீன்பிடித் தொழிலில் முழு வீச்சில் இறங்கியுள்ளனர். ஆனால், இலங்கை மீனவர்கள் மீன் பிடிக்காத காலத்தில், இலங்கை கடல் பகுதிக்குள் நுழைந்து, அங்கு அன்றாடம் மீன் பிடித்து வந்த தமிழக மீனவர்களில் பலர், இப்போது அங்கு செல்வதைத் தவிர்த்து வருகின்றனர். 

குறிப்பாக தமிழக நாட்டுப் படகுகள், விசைப்படகுகள் இந்திய — இலங்கை கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடிக்கின்றன. ஆனால், தமிழகத்திலிருந்து பெரிய விசைப் படகுகள் எனும் ராட்சத விசைப்படகுகள், இலங்கை கடல் பகுதிக்குள் நுழைந்து, தடை செய்யப்பட்ட இழுவலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்கின்றனர். இந்த வகையான இழுவலைகள் கடலில் அடியில் உள்ள தரைப்பகுதியில் வாழும் மீன் குஞ்சுகள், மீன் முட்டைகள், அறிய கடல் வாழ் உயிரினங்களை அழித்து விடுகின்றன. இதனால், இலங்கை கடற்பகுதியில் மீன் வளமும், கடல் வளமும் அழிந்து வருகின்றன.

அடுத்த, 10 ஆண்டுகளுக்கு பிறகு கடலில் மீன்களே இல்லாத நிலை உருவாக வாய்ப்புள்ளது என, இலங்கை தமிழ் மீனவர்கள் கூறுகின்றனர். இவர்கள், இலங்கை அரசிடமும், இலங்கையின் மீன்வளத் துறையிடமும் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இலங்கை கடற்படை, இதற்கான நடவடிக்கை எடுக்கும்போது, அதில் தமிழகத்தைச் ராட்சத விசைப் படகுகள் சிக்குவதில்லை. இந்த ராட்சத விசைப்படகுகள், அதிவேக இன்ஜின்கள் பொருத்தப்பட்டவை என்பதால், அவை வேகமாக தப்பி விடுகின்றன.

ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த நாட்டுப் படகுகள், விசைப் படகுகள் இலங்கை கடற்படையிடம் சிக்கிக் கொள்கின்றன. இதையடுத்து, ராட்சத விசைப் படகுகளின் அத்துமீறலைக் கட்டுப்படுத்துமாறு, இந்திய, தமிழக மீன்துறை அதிகாரிகளிடம் இலங்கை மீனவர்களும், இலங்கை மீனவ அமைப்புகளும் பலமுறை கேட்டுப் பார்த்தனர். ஆனால், தமிழக மீன்துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், ராட்சத விசைப்படகு உரிமையாளர்களுக்கு ஆதரவாக நடந்து, பெரும் தொகை பார்த்தனர்.

விசைப் படகு:

இதையடுத்து, ராட்சத விசைப் படகுகளை இலங்கை கடல் பகுதிக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தும் அதிரடி நடவடிக்கையை, இலங்கை மீனவர்கள் நேரடியாக மேற்கொள்ள களத்தில் இறங்கியுள்ளனர். இதற்காகவே, இலங்கை தமிழ் மீனவர்கள், ‘மீன்வளப் பாதுகாப்பு படை’ என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளனர். இலங்கை கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடிக்கும், தமிழகத்தைச் சேர்ந்த ராட்சத விசைப் படகுகளை அடித்து விரட்டுவதோடு, அதில் உள்ள மீனவர்களைப் பிடித்து, இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளனர். இப்படி பிடிபடும் ராட்சத விசைப்படகு மீனவர்கள், முதலில் இலங்கை மீனவர்களிடம் உதைபடப் போவது நிச்சயம். இலங்கை மீனவர்களின், ‘மீன்வளப் பாதுகாப்பு படை’யில், 25 வயது முதல், 40 வயது வரையிலான மீனவர்கள் இருப்பர். இவர்களுக்கு, முன்னாள் போராளிகள், அடிதடி, ரப்பர் ஸ்டிக் தடியடி உள்ளிட்ட சில அபாயகரமான பயிற்சி அளிக்கத் துவங்கியுள்ளனர்.

கடலோர மீனவர்கள்:

தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை அதிகமாகப் பயன்படுத்தும் ராட்சத விசைப்படகுகளை கட்டுப்படுத்த வேண்டிய தமிழக மீன்துறை அதிகாரிகள், இனியும் அலட்சியம் காட்டினால், இலங்கை மீனவர்களின் அதிரடி நடவடிக்கையால், பல மீனவர்கள் உயிரிழக்க நேரிடலாம் என்கின்றனர், தமிழக கடலோர மீனவர்கள். 

தமிழ்நாடு – -புதுச்சேரி மீனவர் கூட்டமைப்பின் தலைவர் என்.ஜே.போஸ் கூறியதாவது:
தமிழக அரசின் மீன்துறை விதிகளுக்கு உட்பட்ட, 180 குதிரை சக்தியுள்ள இன்ஜின்கள், அரசு அனுமதித்த மீன்பிடி வலைகளையும் பயன்படுத்தும் நாட்டுப் படகுகள், விசைப் படகுகள் இலங்கை கடற்படையிடம் சிக்கிக் கொள்கின்றன. இதனால், அப்பாவி மீனவர்களே இலங்கை கடற்படையிடம் பிடிபடுகின்றனர். இவ்வாறு பிடிபட்ட மீனவர்களை, இலங்கை சிறையிலிருந்து விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கின்றன.

அத்துமீறல்:

ஆழ்கடலில் மட்டுமே மீன் பிடிக்க வேண்டிய ராட்சத விசைப் படகுகள், இந்திய பகுதியில் உள்ள கடல் வளத்தை ஏற்கனவே இழுவை வலையால் அழித்துவிட்டு, இப்போது இலங்கை கடற்பகுதியிலும் அத்துமீறி நுழைந்து அழிக்கின்றனர். இதைத் தடுக்க இலங்கை மீனவர்கள் படை உருவாக்கியுள்ளதாக, அங்கிருந்து, மீனவர் தலைவர் ஜஸ்டீன் தகவல் தந்துள்ளார். தமிழக மீன்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழக மீனவர்கள் இதுவரை இல்லாத துன்பங்களை அனுபவிக்க நேரிடலாம்.இதனால், இரு நாட்டு மீனவரிடையே உள்ள நல்லுறவு பாதிக்கப்படலாம். இதுபோன்ற நிலை உருவாக, தமிழக மீன்துறை அதிகாரிகள் சிலரே காரணம். தமிழக முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு, சட்டவிரோத மீன் பிடிப்பிற்கு உதவும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, போஸ் கூறினார்.

‘லக்ஸ்மன் கடல் காப்பு படை’ பெயர் பெறக் காரணம்:

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்த இலங்கை மீனவர்கள் அமைத்துள்ள படைக்கு, ‘லக்ஸ்மன் கடல் காப்பு படை’ என, பெயர் வைத்துள்ளனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்படை கரும்புலிகள் கேப்டன் லக்ஸ்மன். இலங்கை மன்னார், கற்பிட்டி கடற்பகுதியில் நின்ற, ‘சாகரவர்த்தனா’ என்ற இலங்கை கடற்படை போர்க் கப்பலை வெடிக்க, மனித வெடிகுண்டாகச் செயல்பட்டவர். இக்கப்பல், 1994, செப்டம்பர், 19ல் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. இலங்கை யாழ்ப்பாணம் நல்லுாரில் பிறந்து குகதாசன் பிரணவனுக்கு, லக்ஸ்மன் என்று பெயர் வைத்தவர், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1304314

141014130611_lanka_fishermen_512x288_getty_nocredit

Sea Black Tiger Captain Laxman Kugathasan Pranavan Nallur Jaffna

Sea Black Tiger
Captain Laxman
Kugathasan Pranavan
Nallur
Jaffna

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux