தமிழர்களின் பிரதான பண்டிகைகளில் ஒன்றான ஆடிப்பிறப்பு பண்டிகை பல வருடங்களுக்கு பின்னர் தாயகத்திலுள்ள பாடசாலைகள், திணைக்களங்கள், அரச அலுவலகங்கள், தனியார் கல்வி நிலையங்கள், போன்ற அனைத்து இடங்களிலும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளது.
நம் தங்கத்தாத்தா நவாலியூர் சோமசுந்தரப் புலவர், தமிழ்ச்சிறுவன் ஒருவன் தோழர்களை அழைத்துப் பாடும் பாடலாக அமையும் ஆடிப்பிறப்பு பாடலை இங்கே பகிர்கிறேன்.
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தெள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,
வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.
வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பாளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!
பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக்க வாயூறிடுமே
குங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் படைப்பும் படைப்போமே
வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே
வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தந் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராசாவின் பணிப்புரைக்கமைய கல்வி அமைச்சின் செயலாளரினால் அனைத்து பாடசாலைகளுக்கும் அனுப்பப்பட்ட சுற்றுநிருபங்களில் இம்முறை ஆடிக்கூழ் காய்ச்சி மாணவர்களுக்கு வழங்குமாறு கூறப்பட்டிருந்தது. அத்துடன் ஆடிப்பிறப்பு தொடர்பாக மாணவர்களுக்கு தெளிவுபடுத்துமாறும் அந்த சுற்றுநிருபத்தில் மேலும் கூறப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய வடக்கு மாகாணத்திலுள்ள பெரும்பாலான பாடசாலைகளில் வெள்ளிக்கிழமை அன்று ஆடிக்கூழ் காய்ச்சி வழங்கப்பட்டது.
இம்முறை தீவகத்தில் இயங்கும் பல பாடசாலைகளில் ஆடிப்பிறப்பு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றதாக-அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேபோல் அல்லைப்பிட்டியில் இயங்கும் இரண்டு பாடசாலைகளான,பராசக்தி வித்தியாலயம் மற்றும் றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் ஆகியவற்றிலும் ஆடிப்பிறப்பு நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றதாக தெரிய வருகின்றது.