கிழக்கில் அரசியல்வாதிகளின் வியூகமும் தமிழ் மக்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்துக்களும் – இரா.துரைரத்தினம்

கிழக்கில் அரசியல்வாதிகளின் வியூகமும் தமிழ் மக்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்துக்களும் – இரா.துரைரத்தினம்

இந்த தலைப்பை பார்த்ததும் உங்களில் சிலர் என்னை ஒரு இனவாதியாக சித்தரிக்கலாம். நான் சார்ந்த இனத்தின் அழிவுகள் பற்றி எச்சரிப்பது இனவாதம் என்றால் நான் இனவாதி என்ற பட்டத்தை ஏற்பதில் எனக்கு எந்தவித தயக்கமும் கிடையாது.

பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்த காலத்திலும் அதன் பின்னர் இடம்பெற்று வரும் பிரசார நடவடிக்கைகளையும் தமிழ் மக்களுக்கு எதிராக பின்னப்பட்டிருக்கும் சதி வலைகளையும் பார்க்கும் போது கிழக்கின் தேர்தல் முடிவுகள் தமிழ் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் பாதிப்பையும் ஏற்படுத்தலாம் என்றே எண்ணத்தோன்றுகிறது.

இந்த ஆபத்துக்களிலிருந்து தமிழ் மக்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டுமாக இருந்தால் மிக அவதானமாக சாதுரியமாக தமது பிரதிநிதித்துவத்தை தக்க வைத்து கொள்ளும் வகையில் செயல்பட வேண்டும்.
தமிழ் மக்கள் தம் முன் விரிக்கப்பட்டிருக்கும் சதிவலைகளை சரியாக புரிந்து கொண்டு செயல்படவில்லை என்றால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 76வீதமாக இருக்கும் தமிழ் மக்கள் ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினரையும் 24வீதமாக இருக்கும் முஸ்லீம்கள் 4 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பெறுவார்கள்.

இது வெறும் கற்பனையாக கூறும் விடயம் அல்ல. தமிழ் மக்களுக்கு எதிராக வகுக்கப்பட்டிருக்கும் வியூகங்களாலும் சதிவலைகளாலும் மாவட்ட விகிதாசார தேர்தல் முறையாலும் இந்த ஆபத்தை தான் தமிழ் மக்கள் சந்திக்க போகிறார்கள் என்பது மிகத்தெளிவாக தெரிகிறது.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் பிரதிநிதித்துவங்களை தக்க வைத்து கொள்ள முடியுமா என்பதை மேலோட்டமாகவும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 76வீதமான தமிழ் மக்கள் தங்களுக்கான பிரதிநிதிகளை பெறுவார்களாக என்பதை பற்றியுமே இங்கு ஆராய விளைகின்றேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 16 அரசியல் கட்சிகளும், 30 சுயேட்சைக்குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.  இந்த 30 சுயேட்சைக்குழுக்களில் பெரும்பாலான சுயேட்சைக்குழுக்கள் தமிழர்களால் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஒவ்வொரு குழுவுக்கும் தலா 25 இலட்சம் ரூபாவை முஸ்லீம் அரசியல்வாதி ஒருவரே வழங்கியுள்ளார்.

முக்கியமாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்க கூடிய வாக்குகளை சிதறிப்பதை இலக்காக கொண்டு இந்த சுயேச்சைக்குழுக்கள் களமிறக்கப்பட்டிருக்கின்றன. பொதுவாகவே சுயேட்சைக்குழுக்களில் போட்டியிடும் அனைவருக்கும் தெரியும் தான் வெற்றி பெறப்போவதில்லை என்று. இருந்த போதிலும் சில கட்சிகளின் வாக்குகளை பிரித்து அவர்களுக்கான வெற்றியை தடுப்பதற்காக சுயேட்சைக்குழுக்கள் களமிறக்கப்படுவது வழமை. அதைப் போலத்தான் மட்டக்களப்பு மாவட்டத்தில் 30க்கு மேற்பட்ட சுயேட்சைக்குழுக்கள் களமிறக்கப்பட்டிருக்கின்றன.

1988ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியில் பிறேமதாஸவும் சிறிலங்கா சுதந்திர கட்சியில் சிறிமாவோ பண்டாரநாயக்காவும் சிறிலங்கா மக்கள் கட்சியில் ஒஸ்வின் அபேகுணசேகரவும் போட்டியிட்டனர். 2இலட்சத்து 79ஆயிரம் மேலதிக வாக்குகளினாலேயே பிரேமதாஸ வெற்றி பெற்றார். ஒஸ்வின் அபேகுணசேகர 2இலட்சத்திற்கு 35ஆயிரம் வாக்குகளை பெற்றிருந்தார்.

ஓஸ்வின் அபேகுணசேகர இறப்பதற்கு சில காலத்திற்கு முதல் பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் பிரேமதாஸவே தனக்கு பணத்தை தந்து தேர்தலில் போட்டியிட வைத்ததாகவும். தான் போட்டியிட்டிருக்காவிட்டால் சிறிமாவோ பண்டாரநாயக்கா வெற்றி பெற்றிருப்பார் என்றும் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு வாக்குகளை பிரித்து ஒருவரை தோற்கடிப்பதற்காகவே சிலர் தேர்தலில் களமிறக்கப்படுகின்றனர். சுயேட்சைக்குழுக்கள் வெற்றி பெறுவதற்காக போட்டியிடுவதில்லை. வாக்குகளை பிரிப்பதற்காகவே போட்டியிடுகின்றன என்பதுதான் உண்மை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 இலட்சத்து 20 ஆயிரத்து 949 தமிழர்களும், ஒரு இலட்சத்து 53ஆயிரத்து 17 முஸ்லீம்களும் வாழ்கின்றனர். இச்சனத்தொகை மற்றும் வாக்காளர் எண்ணிக்கையின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரு முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினருமே தெரிவாக வேண்டும்.

ஆனால் தமிழ் மக்கள் ஐக்கிய தேசியக்கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி போன்ற கட்சிகளுக்கு வாக்களிப்பதால் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் 1994ஆம் ஆண்டிலிருந்து இழக்கப்பட்டு வருகிறது. 1989ஆம் ஆண்டு மற்றும் 2004ஆம் ஆண்டு நடந்த தேர்தல்களில் மட்டுமே நான்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகினர்.

ஏனைய ஆண்டுகளில் நடந்த பொதுத்தேர்தல்களில் 3 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களே தெரிவாகினர். வாக்காளர் தொகையின் படி ஒரு முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவாவதற்கு பதிலாக 2000, 2001, 2010 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத்தேர்தல்களில் 2 முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகினர். இது முஸ்லீம்களின் தவறல்ல. அவர்கள் புத்திசாதுர்யமாக தமது வாக்குகளை பயன்படுத்துகின்றனர். தமிழர்கள் ஏமாளிகளாக இருந்து தமது பிரதிநிதித்துவத்தை இழந்து வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 75வீதமாக தமிழ் மக்களும் 24 வீதமாக முஸ்லீம்களும் இருக்கும் போது எப்படி நான்கு முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரும் தெரிவாக முடியும் என நீங்கள் கேள்வி கேட்கலாம்.  மாவட்ட விகிதாசார தேர்தல் முறையை பயன்படுத்தி கட்சிகள் வகுக்கும் வியூகத்தால் இந்த அதிர்ச்சியான முடிவுகள் வந்திருக்கின்றன.

இதற்கு அம்பாறை மாவட்டத்தில் 1989ஆம் ஆண்டு 1994ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகளை உதாரணமாக கொள்ளலாம்.

அம்பாறை மாவட்டத்தில் 2இலட்சத்து 82ஆயிரத்து 484 முஸ்லீம்களும், 2இலட்சத்து 51ஆயிரத்து 18 சிங்களவர்களும் ஒரு இலட்சத்து 12ஆயிரத்து 750 தமிழர்களும் வாழ்கின்றனர்.  அம்பாறை தொகுதியில் மட்டுமே சிங்களவர்கள் வாழ்கின்றனர். சம்மாந்துறை, கல்முனை பொத்துவில் தொகுதிகளில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாகவும் தமிழர்கள் அடுத்த நிலையிலும் வாழ்கின்றனர்.

மாவட்ட விகிதாசார தேர்தலின் பிரகாரம் அம்பாறை மாவட்டத்தில் 1989ஆம் ஆண்டில் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகினர். வாக்காளர்களின் தொகையின் அடிப்படையில் நான்கு முஸ்லீம்களும், ஒரு சிங்களவரும் ஒரு தமிழரும் தெரிவாக வேண்டும். ஆனால் 1989ஆம் ஆண்டு நான்கு சிங்களவர்களும் ஒரு முஸ்லீமும், ஒரு தமிழரும் தெரிவாகினர்.

ஐக்கிய தேசியக்கட்சி பி.தயாரட்ணா, ஏ.பி.கலப்பத்திகே, நிஹால் பக்மீவௌ ஆகிய சிங்கள வேட்பாளர்களையும் 4முஸ்லீம் வேட்பாளர்களையும் இரு தமிழ் வேட்பாளர்களையும் நிறுத்தியிருந்தனர். 62ஆயிரத்து 600வாக்குகளை பெற்ற ஐக்கிய தேசியக்கட்சி மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களையும், 61325 வாக்குகளை பெற்ற சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரையும் 45ஆயிரத்து 400வாக்குகளை பெற்ற சிறிலங்கா சுதந்திர கட்சி ஒரு நாடாளுமன்ற உறுப்பினரையும் 43ஆயிரத்து 435 வாக்குகளை பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு நாடாளுமன்ற உறுப்பினரையும் பெற்றுக்கொண்டது.

ஐக்கிய தேசியக்கட்சிக்கு அளிக்கப்பட்ட வாக்குகளில் 35ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகள் முஸ்லீம் மற்றும் தமிழர்களின் வாக்குகள். ஆனால் ஐக்கிய தேசியக்கட்சிக்கு அளிக்கப்பட்ட சிங்கள வாக்குகள் சிதறாமல் மூன்று சிங்கள வேட்பாளர்களுக்கும் அளிக்கப்பட்டதால் தயாரட்ணா, கலப்பத்திகே, நிஹால் பக்மீவெட ஆகிய மூவரும் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகினர். சிறிலங்கா சுதந்திர கட்சியிலும் தெரிவானவர் சிங்களவர்தான்.

இதேபோன்று 1994ஆம் ஆண்டிலும் அம்பாறை மாவட்டத்தில் சிங்களவர்கள் நான்கு பேர் தெரிவாகினர். முஸ்லீம்கள் இருவர் தெரிவாகினர். தமிழர்கள் யாரும் தெரிவாகவில்லை. 1994ஆம் ஆண்டும் ஐக்கிய தேசியக்கட்சியில் நிறுத்தப்பட்ட மூன்று சிங்களவர்களும் தமிழ் முஸ்லீம் வாக்குகளால் வெற்றிபெற்றனர். சிறிலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து ஒரு சிங்களவர் தெரிவானார்.

முஸ்லீம்களும் தமிழர்களும் அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி போன்ற கட்சிகளுக்கு வாக்களித்ததால் எவ்வாறு தமது பிரதிநிதித்துவத்தை இழந்தனர் என்பதையும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை மட்டும் பெற கூடிய சிங்களவர்கள் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை எவ்வாறு பெற்றார்கள் என்பதையும் 1989ஆம் ஆண்டு மற்றும் 1994ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் எமக்கு தெளிவாக காட்டுகின்றன.

அதன் பின்னர் முஸ்லீம் மக்கள் இந்த ஆபத்தை நன்கு அறிந்து கொண்டு 2000ஆம் ஆண்டுக்கு பின்னர் வந்த தேர்தல்களில் சராசரியாக நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்று வருகின்றனர்.  அம்பாறை மாவட்டத்தில் 1989ஆம் ஆண்டு மற்றும் 1994ஆம் ஆண்டுகளில் முஸ்லீம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் நேர்ந்த அவலம் தான் இம்முறை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களுக்கு ஏற்பட உள்ளது.

முஸ்லீம் அரசியல்வாதிகளான ஹிஸ்புல்லா, மற்றும் அமீர்அலி ஆகியோரால் இவ்வாறான வியூகம் தான் வகுக்கப்பட்டிருக்கிறது. இந்த வியூகத்திற்கு தமிழர்கள் பலியானால் ஹிஸ்புல்லா தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, அல்லது அமிர்அலி தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியே அதிக வாக்குகளை பெறும். அவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதிக வாக்குகளை பெற்றால் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகப்போவது ஹிஸ்புல்லாவும் அவருடன் சேர்ந்த மூன்று முஸ்லீம்களும் தான்.

1989 மற்றும் 1994ஆம் ஆண்டுகளில் அம்பாறை மாவட்டத்தில் எவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சி மூன்று சிங்கள வேட்பாளர்களையும் ஏனைய 4முஸ்லீம் வேட்பாளரையும் இரு தமிழ் வேட்பாளர்களை நிறுத்தி அவர்களின் வாக்குகளை பெற்று மூன்று சிங்கள வேட்பாளர்களும் வெற்றி பெற்றார்களோ அதே வியூகத்தை தான் ஹிஸ்புல்லாவும் வகுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், சாலி ஜவாஹிர், எம்.எஸ்.எம். சுபைர் ஆகிய மூன்று முஸ்லீம் வேட்பாளர்களும், சிவநேசதுரை சந்திரகாந்தன், சாணாக்கியன், கிருஸ்ணப்பின்ளை சிவநேசன், செல்வராசா அரசரட்ணம், எப்றகாம் ஜோர்ஜ்பிள்ளை, ஆகிய ஐந்து தமிழ் வேட்பாளர்களும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

முஸ்லீம்கள் அளிக்கும் வாக்குகள் மூன்று முஸ்லீம் வேட்பாளர்களுக்கு அண்ணளவாக சமனாக கிடைக்கும். ஏனெனில் முஸ்லீம்கள் அனைவரும் இந்த மூன்று வேட்பாளர்களுக்கும் தமது விருப்பு வாக்கை வழங்குவார்கள். உதாரணமாக 65ஆயிரம் வாக்குகளை பெற்றால் 3 நாடாளுமன்ற உறுப்பினர்களை அக்கட்சி பெறும். அதில் 30ஆயிரம் முஸ்லீம்களும் 35ஆயிரம் தமிழர்களும் வாக்களித்தாலும் முஸ்லீம்கள் அனைவரும் மூன்று முஸ்லீம் வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்கை அளிப்பதால் அந்த மூவரும்தான் தெரிவாகுவார்கள். தமிழர்கள் 5 வேட்பாளர்களுக்கு பிரிந்து வாக்களிப்பதால் ஒரு போதும் தமிழ் வேட்பாளர்கள் 10ஆயிரத்திற்கு மேற்பட்ட விருப்பு வாக்கை பெற முடியாது.

மடக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்தால் அவர்கள் மூவரும் ஹிஸ்புல்லா, சாலி ஜவாஹிர், எம்.எஸ்.எம்.சுபைர் ஆகியோர்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகுவர்.

அதேபோன்று அமிர்அலி தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளை பெற்றால் அதில் தெரிவு செய்யப்படப்போவர்கள் மூவரும் முஸ்லீம்கள் தான்.

ஐக்கிய தேசியக்கட்சியில் அமீர் அலி தலைமையில் ஏ.கியாஸ்தீன், எம்.எல்.ஏ.லத்தீப், எம்.ஆர்.அப்துல் அஸீஸ், ஆகிய முஸ்லீம் வேட்பாளர்களும் எஸ். கணேசமூர்த்தி, ஜே.ஆறுமுகம், தி.லோகநாதன், எஸ்.மாமங்கராசா ஆகிய தமிழ் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். அமிர்அலியும் அவருக்கு கீழ் உள்ள இரு முஸ்லீம் வேட்பாளர்களும் சராசரியாக 40ஆயிரத்திற்கு மேற்பட்ட விரும்பு வாக்குகளை பெறுவார்கள். இந்த தமிழ் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் 10ஆயிரத்திற்கு குறைவான விருப்பு வாக்குகளை மட்டுமே இவர்களால் பெற முடியும். கணேசமூர்த்தியோ அல்லது மாமாங்கராசாவோ தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று அமிர்அலியையும் அவருடன் சேர்ந்த முஸ்லீம் வேட்பாளர்களையும் மட்டுமே வெற்றி பெற வைக்க முடியும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக்கட்சி போன்ற தேசிய கட்சிகளுக்கு வாக்களித்தால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை அல்லது ஒருவரை கூட தெரிவு செய்ய முடியாத அவல நிலை ஏற்படலாம்.

கடந்த 2010ஆம் ஆண்டு தமிழ் மக்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி ஆகியனவற்றிற்கு வாக்களித்ததால் தமிழரசுக்கட்சி மிக சொற்ப வாக்கு வித்தியாசத்திலேயே 3 ஆசனங்களை பெற முடிந்தது. 2010ஆம் ஆண்டு தமிழரசுக்கட்சி 66ஆயிரத்து 235வாக்குகளை பெற்று 3 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 62ஆயிரத்து 9 வாக்குகளை பெற்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினரையும் ஐக்கிய தேசியக்கட்சி 22935 வாக்குகளை பெற்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினரையும் பெற்றுக்கொண்டன. பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 16886 வாக்குகளையும் பெற்றுக்கொண்டது.

கடந்த 2010 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழரசுக்கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 4226வாக்குகள் மட்டும் தான். 4ஆயிரம் வாக்குகளை கடந்த முறை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றிருந்தால் 3 நாடாளுமன்ற உறுப்பினரை பெற்றிருக்கும். இதன் மூலம் கடந்த முறை 4 முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினரும் ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரும் தெரிவாகும் அபாயம் 4ஆயிரம் வாக்குகளால் மட்டும் தடுக்கப்பட்டது. இம்முறை இந்த 4ஆயிரம் வாக்கை பிள்ளையானின் கட்சி பெற்றுக்கொடுத்தால் மிக இலகுவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகும் நிலை காணப்படுகிறது.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள முஸ்லீம்கள் 1989 மற்றும் 1994ஆம் ஆண்டுகளில் பெற்ற அனுபவத்தை தொடர்ந்து 10ஆண்டுகளில் தமது பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக்கொள்வதற்கான வைராக்கியத்தை வளர்த்துக் கொண்டுள்ளளனர்.

அம்பாறையில் தாம் இழந்தவற்றை அனுபவமாக பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் அந்த வியூகத்தை முஸ்லீம்கள் வகுத்து செயற்பட்டு வருகின்றனர்.  ஆனால் தமிழ் மக்கள் 60ஆண்டுகள் என்ன 100ஆண்டுகள் கடந்தாலும் கசப்பான அனுபவங்களை பெற்றாலும் தமது இனத்திற்கான உரிமையை தமது இனத்திற்கான பிரதிதித்துவத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற வியூகமோ உணர்வோ அற்றவர்களாகத்தான் காணப்படுகின்றனர்.

இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்கள் தம் முன் விரிந்திருக்கும் ஆபத்துக்களையும் முஸ்லீம் அரசியல்வாதிகள் விரித்திருக்கும் சதி வலைகளையும் புரிந்து கொண்டு தமது பிரதிநித்துவத்தை காப்பாற்றி கொள்ள வேண்டும்.

அதை விடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் ஐக்கிய தேசியக்கட்சிக்கும் வாக்களித்தால் நான்கு முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரையும் மட்டுமே பெற முடியும்.
முஸ்லீம் காங்கிரஷ் கட்சியிலிருந்தும் ஒரு முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவாகுவார். எனவே தமிழர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஐக்கிய தேசியக்கட்சிகளுக்கு வாக்களிக்கும் போக்கு காணப்பட்டால் நான்கு முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது உறுதி. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து மூன்று முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சிகளிலிருந்து தலா ஒவ்வொருவருமான 5 முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஏனெனில் தமிழர்கள் தன்மானம், உணர்ச்சி, இனப்பற்று எதுவும் அற்ற ஜடங்களாக மாறி வரும் துர்ப்பாக்கிய நிலை தொடர்ந்தால் இந்த அவல நிலை வருவது தவிர்க்க முடியாததாகும்.  இதன் மூலம் கல்லடியும் ஆரையம்பதியும் காத்தான்குடியாக மாறுவது மட்டுமல்ல  தான்தோன்றீஸ்வரர் வீற்றிருக்கும் கொக்கட்டிச்சோலையில் பள்ளிவாசல் பாங்கு ஒலிக்கும்.

இந்த ஆபத்துக்களை பிள்ளையானும், கணேசமூர்த்தியும் மாமாங்கராசாவும் உணர்ந்து கொள்வார்களா? அல்லது அவர்களுக்கு வாக்களித்து முஸ்லீம்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப் போகும் தமிழ் மக்கள் புரிந்து கொள்வார்களா?

ஆபத்துக்களால் சூழ்ந்திருக்கும் மட்டக்களப்பு தமிழ் மண்ணை காப்பாற்ற வேண்டிய பொறுப்பை ஒவ்வொரு மட்டக்களப்பு தமிழ் மகனும் உணர்ந்து செயல்பட வேண்டும்.  இல்லையேல் முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட அழிவை போன்ற பேரழிவை மீண்டும் தமிழ் இனம் சந்திப்பது தவிர்க்க முடியாமல் போகும்.

hissu1

TNA

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux