வீரகேசரி வாரமலரில் 07.06.2015 பதிப்பில் வெளியான-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்களுடனான-சிறப்பு நேர்காணல்…..கீழே இணைக்கப்பட்டுள்ளது.
“இன்றைய சூழலில் மொழிப்புலமை மிகக் குறைவு’
கலாநிதி செல்லையா திருநாவுக்கரசுடனான நேர்காணல்…
கோப்பாய் ஆசிரிய பயிற்சிக்கலாசாலையின் ஓய்வு பெற்ற உப அதிபரான பண்டிதர் கலாநிதி. செல்லையா திருநாவுக்கரசு அல்லைப்பிட்டியில் 1950ஆம் ஆண்டு பிறந்தவர்.
கலை இலக்கிய விமர்சகராகவும், எழுத்தாளராகவும், பேச்சாளராகவும், பல்துறை ஆளுமை கொண்டவராக விளங்குகின்ற அவரை வீரகேசரி சங்கமத்திற்காகச் சந்தித்தோம்.
கேள்வி:- தங்களின் குடும்பப்பின்னணி தமிழியல் ஈடுபாட்டை உங்களுக்கு உருவாக்கியதா?
நான் அல்லைப்பிட்டியில் ஒரு விவசாயக்குடும்பத்தில் பிறந்தவன். எனது தாய் தந்தையர்கள் பெரியளவில் இலக்கிய ஈடுபாடு உடையவர்கள் என்று சொல்ல இயலாது. ஆனால், எனது பாட்டனார்கள் நாட்டுக்கூத்து, புராணபடனம், திருமுறை ஓதல் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். எனக்குள் ஒரு வகையில் தமிழ் சார் உணர்வியலை உருவாக்கியதில் இந்த பேரனார்களின் பங்கே பெரியது.
கேள்வி-: அவ்வாறாயின் பாடசாலை, பல்கலைக்கழகம் வாயிலாகவா தாங்கள் இலக்கிய உணர்வு பெற்றீர்கள்?
அவ்வாறு சொல்லி விட இயலாது. நான் கற்றதெல்லாம் அல்லைப்பிட்டியிலும்,வேலணையிலுமே. அதுவும் குடும்ப வறுமையால் பதினாறு வயது வரை மட்டுமே கல்வி கற்றேன். அதனுடன் பாடசாலைக்கல்வி நின்று விட்டது. ஆனால், அக்காலத்தில் அல்லைப்பிட்டியில் வாழ்ந்த க.வ.ஆறுமுகம் என்பவர் ஒரு முன்னோடி எழுத்தாளர். அவர் தான் எனக்கு வாசிப்பு ஆர்வத்தை தூண்டினார். நான் அதிகம் வாசித்ததில் அவரது பங்கு பெரிது. அது மட்டுமன்றி 06,07 நாடகங்களிலும் என்னை நடிக்க வைத்தார்.
கேள்வி:- பதினாறு வயதில் பாடசாலையிலிருந்து இடை விலகிய தாங்கள் எப்படி கல்வி நிர்வாக சேவையில் உள்வாங்கப்பட்டீர்கள்?
இதற்கு நீண்ட பதில் சொல்ல வேண்டும். நான் பாடசாலையிலிருந்து இடை விலகி ஓராண்டு விவசாயம் செய்தேன். அடுத்த ஓராண்டு பல நோக்குக் கூட்டுறவுச்சங்கத்தில் சிற்றூழியராக வேலை செய்தேன். பிறகு பதிவு செய்யப்பட்ட உதவித்தபால் ஊழியராகச் சில காலம் இருந்தேன்.
பிறகு ஆறு ஆண்டுகள் இலங்கை போக்குவரத்துச்சபைப் பேருந்தில் நடத்துனராகப் பணிபுரிந்தேன். இந்த ஆறாண்டில் தான் உயர்தரம் கற்று சித்தி பெற்றதுடன், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி பட்டப்படிப்பை பூர்த்தி செய்தேன். நான் நினைக்கிறேன் அந்தக்காலத்தில் இலங்கையில் ஒரு பட்டதாரிப் பேருந்து நடத்துனராக நானே இருந்திருப்பேன்.
இதன் பின்னணியில் 1985இல் ஆசிரிய நியமனம் கிடைத்தது. இரண்டு மூன்று பாடசாலைகளில் கற்பித்தேன். யாழ். இந்துக்கல்லூரியில் கற்பிக்கிற போது, சேவைக்கால ஆசிரிய ஆலோசகராகப் பதவி உயர்வு கிடைத்தது. பிறகு, கோப்பாய் ஆசிரிய பயிற்சிக்கலாசாலையில் இணைக்கப்பட்ட விரிவுரையாளராக மாறினேன். 2000ஆம் ஆண்டில் தான் கல்வி நிர்வாக சேவைக்குள் உள்வாங்கப்பட்டு, விரிவுரையாளராக மாறினேன்.
இதற்குள் தமிழிலும், முகாமைத்துவத்திலும், கல்வியியலிலும் பல்வேறு கற்கை நெறிகளை மேற்கொண்டு முதுகலை, இளங்கலை, பட்டங்கள் பலவற்றை பல்கலைக்கழகத்தில் பெற்றிருந்தேன். அதனை விட, தமிழில் கலாநிதிப்பட்ட ஆய்வையும் செய்து யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் “கலாநிதி” பட்டமும் கிடைத்தது. இவற்றுக்கு அப்பால், பண்டிதர், சைவப்புலவர் பட்ட தேர்வுகளிலும் சித்தி பெற்றேன். இவ்வாறு நான் பத்துபட்டங்களை படித்துப் பெற்றேன்.
கேள்வி-:- நீங்கள் ஒரு விரிவுரையாளர் என்பதற்கு அப்பால் ஒரு எழுத்தாளராக எதனை செய்திருக்கிறீர்கள்?
எனது முதலாவது கவிதை 1972இல் சுதந்திரன் பத்திரிகையில் வெளியானது. அன்று முதல் இன்று வரை நூற்றுக்கணக்கான கவிதைகளை எழுதியுள்ளேன். ஏராளமான கட்டுரைகளை வரைந்துள்ளேன். அவற்றில் சிலவற்றைத் தொகுத்து மூன்று நூல்கள் வெளியிட்டுள்ளேன். டானியலின் எழுத்துக்கள் (2004), எண்ணங்களும் வண்ணங்களும் (2011), எண்ணங்களும் எழுத்துக்களும் (2012) என்பன அவையாகும். இந்நூல்களுக்குக் கூட, வடகிழக்கு சாகித்திய பரிசு, இலங்கை இலக்கியப் பேரவைப்பரிசு, தமிழியல் விருது என்று பல விருதுகள் கிடைத்துள்ளன.
இதனை விட, இன்னும் நிறைய பாடத்திட்ட நூல்கள் எழுதியுள்ளேன். இரண்டு நூல்களைப் பதிப்பித்திருக்கிறேன்.
இன்னும் எழுதி வருகின்றேன். வரும் வாரத்தில் கூட, எனது பத்தாம் பதினோராம் வகுப்புகளுக்கான தமிழிலக்கியத் தொகுப்பு வெளிவரவுள்ளது. இதனை விட, நிறைய விமர்சனங்களை வரைந்துள்ளேன்.
கேள்வி-:- நீங்கள் படித்துப் பெற்றவை தவிர, கௌரவங்கள், பட்டங்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?
நிறைய கிடைத்துள்ளன. அவை கள் பற்றிச் சொல்வதென்றால், வேலணை, நல்லூர் பிரதேச செயலகங்களால் முறையே கலைவாரிதி, கலைஞானச்சுடர் என்ற பட்டங்கள் தரப்பட்டதையும், சென்ற ஆண்டு 2013 கலாபூஷணம் கிடைத்ததையும் வேண்டுமென்றால் சொல்லலாம்.
கேள்வி-:- இன்றைய இலக்கிய உலகு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
– வாசிப்புப்பழக்கம் குறைந்திருக்கிற இன்றைய சூழலில் மொழிப்புலமை மிகக்குறைவு. மொழிக்கையாளுகையில் பலரும் நிறைய பிழை விடுகிறார்கள். கல்விக்கூடங்களில் பட்டங்களைப் பெற்று வருபவர்கள் பலருக்கும் தமிழை சரியாகப் பயன்படுத்தத் தெரியவில்லை. அதனை விட, பிறரைப் பாராட்டும் பண்பு குறைவு. பதவி மோகம் அதிகம். இந்த அளவில், இந்நாட்டு இலக்கிய உலகு திருப்தி தருவதாக இல்லை.
கேள்வி-:- எழுத்துத் துறையில் உங்களின் எதிர்காலத்திட்டம் என்ன?
இப்போதைக்கு தமிழ் சினிமா வில் மிக முக்கிய பங்காற்றிய தமிழ்ச் சினிமாக் கவிதையின் பிதாமகர், பகுத்தறிவுக்கவிஞர் உடுமலை நாராயணகவி பற்றி விரிவாக ஆய்வு செய்து வருகிறேன். அது நிறைவு
பெறும் நிலையில் உள்ளது. பழந்தமிழ்ச்சினிமாவில் பெரும் பணி செய்த அவரை இளந்தலை முறைக்கும் அறிமுகம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.
தி.மயூரகிரி