மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகரின் வரலாற்றுக் கட்டுரையும்,பரிபாலன சபையினரின் நேர்காணலும் இணைப்பு!

மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகரின் வரலாற்றுக் கட்டுரையும்,பரிபாலன சபையினரின் நேர்காணலும் இணைப்பு!

தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகரின் வரலாற்றுக் கட்டுரையுடன்-ஆலய பரிபாலன சபையினரின் நேர்காணலின் வீடியோப் பதிவும்  கீழே இணைக்கப்பட்டுள்ளன.

இக்கட்டுரையினை,உருவாக்கித் தந்த-ஆலய பரிபாலன சபையின் உறுப்பினரும்,இளைப்பாறிய,பேராதனை பல்கலைக்கழக ஆசிரியருமான திரு வை.குணரத்தினம் அவர்களுக்கு எமது நன்றியினை முதலில் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அத்தோடு இக்கட்டுரையினை,ரைப்பண்ணி எமக்கு அனுப்பி வைத்த திரு எஸ்.தனதீபன் அவர்களுக்கும் எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அல்லையூர் இணையத்தின் ஊடாக -வீரகத்தி விநாயகப் பெருமானின் வரலாற்றுக் கட்டுரை வெளியிட வேண்டும் என்ற யோசனையினை முன் வைத்து -அதைச் செயற்படுத்திய, நண்பர் திரு I.சிவநேசன் அவர்களுக்கும் எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மண்கும்பான் வெள்ளைப் புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வரலாறு.

மலைவளமும்-நதி வளமும், கடல் வளமும்-காட்டுவளமும், நீர் வளமும்-செழித்த மண்வளமும் கொண்டது இலங்கைத்தீவு. இலங்கையின் தலையென வர்ணிக்கப்படும் வடபகுதியில் அமைந்துள்ளது யாழ்ப்பாணம. அதனை அண்டி யாழ்ப்பாணத்திற்கு அணியாக அழகுபடுத்தும் ஏழு தீவுகள். அத்தீவுகளில் ஒன்றே சைவமும் தமிழும் செழித்து வளர்ந்த வேலணை தீவாகும். அத்தீவில் உள்ள சிறிய கிராமமே மண்கும்பானாகும்.

பனந்தோப்பும், தென்னைகளும்-கடற்கரையில் தாழைகளும், சோலையும்-பொன் மணற்குன்றுகளும் நீர்வளமும் நிலவளமும் நிரம்பிய அழகிய சிற்றூர் ஆகும். சிற்றூராயினும் சைவத்தமிழ் பண்பைப் பேணும் பேரூர் என்பதற்கு அங்கு அமைந்துள்ள ஆலயங்களே சான்றாகும். விநாயகர் கோவிலும், முருகன் கோவிலும், அம்மன் கோவில்களும், வைரவர் கோவில்களும் முக்கியமான ஆலயங்களாகும். இவ் ஆலயங்களுக்கு மணிமுடியாக விளங்குவது மண்கும்பாண் வெள்ளை புற்றடி சிறி வீரகத்தி பிள்ளையார் கோயிலாகும்.

மண்கும்பான் வெள்ளை புற்றடி ஸ்ரீ வீரகத்தி பிள்ளையார் வரலாற்றில் யான் மற்றவர்கள் மூலம் அறிந்ததையும் தெரிந்ததையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

இவ் ஆலயத்திற்கு மண்கும்பான் வெள்ளை புற்றடி என்ற பெயர் காரணப்பெயர் என்றே கொள்ள வேண்டும். கோயில் அமைந்துள்ள இடம் வெள்ளை மணலினால் நிறைந்திருந்தது. வெள்ளை மணலில் எலிகள் புற்றுகள் எடுத்து குடி கொண்டு இருக்கலாம். வெள்ளை மணல் புற்றுகளால் சூழ இருந்த இடத்தில் இவ்வாலயம் அமைக்கப்பட்டதால் வெள்ளை புற்றடி என்ற காரணப்பெயர் வந்திருக்கலாம்.

வெள்ளை புற்றடியானுக்கு ஒல்லாந்தர் காலத்தில் ஆலயம் அமைந்திருக்கலாம் என்று ஊகிக்கலாம். இவ்வாலயம் யாழ்ப்பாணம் கச்சேரியில் பதியப்பட்டுள்ளது. 1769ம் ஆண்டில் ஒரு பதிவு உண்டு. அடுத்த பதிவு 1832ம் ஆண்டாகும். பின்னைய பதிவினை நீதிமன்ற வழக்கு காரணமாக 1968ல் பெற்று (ரீ ஆர் 123 வழக்கின்) சான்றாக ஒப்படைத்திருந்தோம். முன்னைய பதிவை பெற்றுக்கொள்ள முடியவில்லை. பதிவு புத்தகம் சிதவடைந்த நிலையில் இருந்ததால் உரிய அதிகாரிகள் தர இயலாது என கூறினர். 1769ம் ஆண்டு பதிவினை கொண்டு எமது ஆலயத்தின் தொன்மையை அறிந்து கொள்ளலாம்.
அந்நியர் ஆட்சியில் சைவ ஆலயங்கள் அழிக்கப்பட்டும் மக்கள் மதம் மாற்றப்பட்டும் இருந்த காலச்சூழலில் சைவ பற்றுக்கொண்ட தொண்டனாக விளங்கினார் வைத்திலிங்க செட்டியார் அவர்கள். செட்டியார் வம்சத்தினார் வர்த்தக பெருமக்களாவார். அவர் யாழ்ப்பாணத்தில் பல ஆலயங்களை நிறுவியுள்ளார். அவ்வாறு அவரால் நிர்ணயிக்கப்பட்ட ஆலயமே மண்கும்பாண் வெள்ளை புற்றடி சிறி வீரகத்தி பிள்ளையார் ஆலயமாகும். இவ்வாலயம் நிர்ணயிக்கப்பட்டதிற்கு கர்ண பரம்பரை கதை ஒன்று கூறுவார்கள்.
யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் சைவ ஆலயங்களளை அமைப்பதற்கு தென்னிந்தியாவில் இருந்து விக்கிரகங்களை எடுத்து வந்துள்ளார். அக்காலத்தில் கடல் வழியாக மரக்கலங்களிலேயே எடுத்து வரவேண்டும் மரக்கலங்கள் பொருட்களை இறக்க ஏற்ற துறைமுகமாக ஊர்காவற்றுறை விளங்கியது வைத்திலிங்க செட்டியார் அவர்களும் பல விக்கிரங்களை வள்ளம் மூலமாக எடுத்து வந்து ஊர்காவற்றுறை துறைமுகத்தில் இறக்கியுள்ளார்.

அக்காலகட்டம் போக்குவரத்து வசதியற்ற காலமாகும். வண்டில்களால் பொருட்களை கொண்டு செல்லலாம் அல்லது சுமந்தே கொண்டு செல்லலாம.; அவரும் யாழ்ப்பாணத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக சுமந்து கொண்டுசென்றுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லும்மார்க்கத்திலேயே மண்கும்பான் அமைந்துள்ளதை யாவரும் அறிவர். அவர் விக்கிரகங்களை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு சென்ற போது களைப்பு மிகுதியால் ஒய்வு எடுக்க இறக்கி வைத்துவிட்டு ஓய்வு எடுத்துள்ளார். பின்னர் புறப்படத்தயாராகி விநாயகர் விக்கிரத்தை தூக்கிய பொழுது அதனை தூக்கமுடியவில்லை. முயன்றும் முடியாததினால் அவ்விடத்திலேயே விட்டுவிட்டு காவோலையால் நிழல் அமைத்து ஊரவர்களை பாராமரிக்க கூறி தம் பயணத்தை தொடர்ந்ததாக கூறுவர். எமது கிராம மக்கள் பூசைக்கான ஒழுங்குகளை மேற்கொண்டு பராமரித்து வழிபட்டு வரலாயினர்.
கிராம மக்கள் மாத்திரம் அல்ல இவ்வழியால் செல்லும் சைவமக்களும் வெள்ளைப் புற்றடியான் அருள் பெற்று வாழ்ந்தனர்-வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சைவர்கள் அல்லாதோரும் வழிபட்டதற்கு கதை ஒன்று கூறுவர். வேற்று மதத்தவர் ஒருவர் மாடுகள் விலைக்கு வாங்கி இவ்வழியால் கொண்டு சென்றுள்ளார். அவர் விநாயகரை வழிபடாது சென்றுள்ளார். வீடு சென்ற பொழுது அவர் கொண்டு சென்ற மாடுகள் காணாமல் போய்விட்டன அவர் அவைகளைத் தேடி அலைந்து அலுத்துப்போனார். அப்போது அயலவர் கூறியதற்கிணங்க விநாயகருக்கு பொங்கலிட்டு வழிபட்டு வீடு சென்ற போது அனைத்து மாடுகளும் வீட்டில் நின்றதைக் கண்டு, விநாயகர் திருவருளை நினைத்து பெருமகிழ்ச்சி அடைந்தனர் என்பர். இதனை விட இன்னுமொரு கதையும் உண்டு.
யாழ்ப்பாணத்தில் இருந்து ஒருவர் கரம்பனுக்கு-தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். கால் நடையாகவே பயணித்துள்ளார், இருளாகிவிட்டது. அதனால் மேற்கொண்டு இருளில் தனியாக பயணிக்க அவரால் முடியவில்லை, ஆலயத்தின் றோட்டு அருகில் தற்போது வைரவர் எழுந்தருளி இருக்கும் இடத்திற்கு கிழக்கருகில் ஓர் மடம் இருந்து. அதில் தங்க எண்ணினார். பொருட்களை சுமந்து கொண்டு வருபவர்கள் இறக்க வசதியாகவும் பொருட்களை தனியாக தூக்க வசதியாகவும்  சுமை தாங்கியும் இருந்தது. அவர் கொண்டு வந்த பொருளை இறக்கி விட்டு தனியாக இருந்துள்ளார். அப்பொழுது அவர் இரண்டு வடக்கன் எருதுகள் பூட்டப்பட்ட பெரிய வெள்ளை நிறமானதும் இரண்டு கொம்புகளும் மேல் நோக்கியும் உயரமான கொம்புகளை உடைய (இந்தியாவில் இருந்து கொண்டு வரப்படுபவை அதனை வடக்கன் எருதுகள் என்று கூறுவார்) வண்டில் சதங்கைச் சத்தத்துடன் வந்து நின்றதைக் கண்டார். அதில் இருந்தவர் ஏன் இங்கே நிற்கிறீர் என்று விசாரித்துள்ளார். இவரும்தான் கரம்பொன்னுக்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். வண்டிச்சாரதியும் தன்னோடு வண்டியில் வரும்படியும் தான் கரம்பொன்னுக்கு வெல்வதாகவும் கூறினார். இவரும் வண்டியில் ஏறி சென்று கொண்டு இருந்தனர் வண்டி சென்ற அதிவேகமும் எருதுகளில் கட்டி இருந்த சலங்கைச் சத்தமும் இனிய ஓசையும் இவருக்கு ஆச்சரியமாக இருந்தது. சில நிமிடங்களில் அவர் வீட்டையடைந்தார். வண்டியை விட்டு இறங்கியது தான் அவர் அந்த நொடியில் வண்டியையும் காணவில்லை. சாரதியையும் காணவில்லை. அப்பொழுது தான் அவர் எண்ணத்தில் வந்தது இந்த அருட்செயலை செய்தது வெள்ளைப்புற்றடி விநாயகனே என்று. அவரும் அவரது உறவினர்களும் ஆனந்த பரவசம் அடைந்து மறுநாள் பொங்கலிட்டு விநாயகரை வழிபட்டதாக கூறுவர். இச்சிறு கட்டுரையில் விநாயகர் இவ்விடத்தில் அமைந்த வரலாறும் அவரது அற்புதக் கதைகள் இரண்டையும் குறிப்பிட்டுள்ளேன்.
விநாயகர் அடியவர்கள் பலர் உள் வீதிக்கு வில்லு மண்டபம் அமைக்கும் அவாவினை வெளிப்படுத்தி வருகின்றனர். தற்போதைய பரிபாலன சபையினர் அவ் ஆசையை நிறைவேற்றுவதற்கான கைங்கரியத்தை மகோற்சவம் முடிந்த பின்னர் மேற்கொள்ள தயாராகிக் கொண்டுள்ளனர். விநாயகர் அனைவரும் இத்திருப்பணிக்கு நிதி உதவி அளிக்க வெள்ளைப்புற்றடியான் திருப்பாதங்களைப் பணித்து அன்புரிமையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

நன்றி

திரு வை.குணரத்தினம்-(இளைப்பாறிய ஆசிரியர்)

(இலங்கை பல்கலைக்கழகம் பேராதனை)

ஆலய பரிபாலனசபை,உறுப்பினர்

மண்கும்பான் வெள்ளைப்புற்றடி, 

ஸ்ரீ வீரகத்தி விநாயகர் தேவஸ்தானம்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux