கொழும்பு: ”இலங்கையில் வசிக்கும் அனைத்து தரப்பு மக்களுக்கும் சம உரிமையும், மரியாதையும் அளிக்கப்பட வேண்டும்,” என, யாழ்ப்பாணத்தில், பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
இலங்கையில் இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, முதல் நாளான வெள்ளிக்கிழமை அன்று , இலங்கை பார்லிமென்டில் உரை நிகழ்த்தினார். பின், இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்நிலையில், மோடியின் இரண்டாவது நாள் சுற்றுப் பயணம் சனிக்கிழமை துவங்கியது. இலங்கை அனுராதபுரத்தில் உள்ள பழமையானதும், மிகவும் பிரசித்தி பெற்றதுமான மகாபோதி கோவிலில், பிரதமர் மோடி வழிபட்டார்.
அவருடன், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவும் வழிபாட்டில் பங்கேற்றார். அசோக சக்கரவர்த்தியின் மகளும், புத்த துறவியுமான சங்கமித்தையால் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட, மரக்கன்று இங்கு நடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. புத்த மதத்தினர், இந்த போதி மரத்தை புனித மரமாகக் கருதி வழிபடுகின்றனர். 30 நிமிடங்கள் இங்கிருந்த மோடி, போதி மரத்தின் முன், மண்டியிட்டு வணங்கினார். இதன்பின், அங்கிருந்து, இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில், தமிழர் கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்தில் உள்ள தலைமன்னாருக்கு சென்றார். அங்கு, இலங்கை தலைநகர் கொழும்பையும், வடகிழக்கு மாகாணங்களையும் இணைக்கும் வகையிலான ரயில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டுள்ளது. 265 கி.மீ., துாரத்தை உடைய இந்த வழித்தடத்தில், தலைமன்னார் – மடு ரோடு இடையேயான, 63 கி.மீ., துாரத்திலான சீரமைப்பு பணிகள் முடிவடைந்து உள்ளன.
இந்திய அரசுக்கு சொந்தமான, ‘இர்ஸ்க்கான் இன்டர்நேஷனல் லிமிடெட்’ என்ற நிறுவனம் தான், இந்த பணிகளை செய்து வருகிறது. இந்த வழித்தடத்தில் முதல் ரயில் போக்குவரத்தை, பிரதமர் மோடி, நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த ரயில் போக்குவரத்தின் மூலம், வடக்கு மாகாணங்களில் வசிப்பவர்கள், குறைந்த நேரத்திலும், பாதுகாப்பாகவும் பயணிக்க முடியும்.
இதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணத்துக்கு சென்றார். 2013ல், பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், யாழ்ப்பாணம் சென்றார். அதற்கு பின், இங்கு சென்ற இரண்டாவது வெளிநாட்டு பிரதமர் நரேந்திர மோடியே. யாழ்ப்பாணத்தில் உள்ள பிரசித்தி பெற்றதும், பழமையானதுமான, பொதுஜன நுாலகத்துக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு, இந்தியா சார்பில், 60 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும், புதிய கலாசார மையத்துக்கான அடிக்கல்லை நாட்டினார். இந்த விழாவில், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனும் கலந்து கொண்டார். மோடியை வரவேற்கும் விதமாக, நுாலகத்தின் நுழைவாயிலில் வாழை மரத் தோரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த விழாவில் மோடி பேசியதாவது:ஒற்றுமை, அமைதி, நல்லுறவு ஆகியவையே, ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அவசியம். இலங்கையை பொறுத்தவரை இங்கு வசிக்கும் அனைத்து தரப்பு மக்களுக்கும் சம உரிமையும், மரியாதையும் அளிக்கப்பட வேண்டும். இந்த கலாசார மையத்தை கட்டித் தருவதற்காக, இந்தியா பெருமைப்படுகிறது. குறித்த காலத்துக்குள் இந்த மையம் கட்டி முடிக்கப்படும். அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் விதமாக இது அமையும். யாழ்ப்பாணம், தற்போது சர்வதேச அளவில், அமைதியின் புதிய அடையாளமாகத் திகழ்கிறது. என்னுடைய யாழ்ப்பாணம் வருகை முன்கூட்டியே திட்டமிட்டதல்ல. இந்த மண்ணை வணங்குவதற்காகவே இங்கு வந்துள்ளேன். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மக்கள், ஏராளமான அவலத்தையும், கொடுமையையும், துயரத்தையும் சந்தித்துள்ளனர்; பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்துள்ளனர். இவ்வாறு, அவர் பேசினார்.
வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் பேசுகையில், ”மாகாணங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிக்கும், 13வது சட்ட திருத்தத்தை அமல்படுத்த இந்தியா வலியுறுத்த வேண்டும்,” என்றார்.
கண்ணீரை துடைக்கும் நிகழ்ச்சி’:
யாழ்ப்பாணத்தில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக இந்தியா சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்ட, 27 ஆயிரம் வீடுகளை, பயனாளிகளிடம் பிரதமர் மோடி நேற்று ஒப்படைத்தார். இந்த விழாவுக்கு மோடி வந்தபோது, தமிழ்ப் பெண்கள் ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றனர்; நாதஸ்வரமும் இசைக்கப்பட்டது.
இதில் மோடி பேசியதாவது:இந்த வீடுகள், வெறும் செங்கற்களால் கட்டப்பட்டதல்ல; கடுமையான துயரங்களையும், பாதிப்புகளையும் எதிர்கொண்ட மக்கள் சந்தோஷமாக வாழ்வதற்காக எங்களால் மேற்கொள்ளப்பட்ட சிறிய முயற்சி தான், இந்த வீடுகள். என்னுடைய இலங்கை சுற்றுப் பயணத்தின் கடைசி நிகழ்ச்சியான இது, எனக்கு உணர்ச்சிமயமான அனுபவத்தை தந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரைத் துடைக்கும் வகையிலான இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது, எனக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது. அடுத்த கட்டமாக, 47 ஆயிரம் வீடுகள் இந்திய அரசால் கட்டித் தரப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.
இதையடுத்து, பிரதமர் மோடி, யாழ்ப்பாண பயணத்தை முடித்து, கொழும்பு புறப்பட்டு சென்றார். முன்னதாக, யாழ்ப்பாணத்தில் உள்ள நகுலேஸ்வரர் கோவிலிலும் அவர் வழிபட்டார்.