யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதிக்கு தமிழ் பாரம்பரியங்களுடன் மகத்தான வரவேற்பு-நல்லூரானையும் தரிசித்தார்-விபரங்கள் இணைப்பு!

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதிக்கு தமிழ் பாரம்பரியங்களுடன் மகத்தான வரவேற்பு-நல்லூரானையும் தரிசித்தார்-விபரங்கள் இணைப்பு!

பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியாத பிரச்சினை என எதுவும் கிடையாது என்றும் ஒன்றாக அமர்ந்து பேசுவதன் மூலம் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். வடக்கில் ஒன்றாய் அமர்ந்து பேசுவது போல கொழும்பிலும் அமர்ந்து பேசுவோம் என அழைப்பு விடுத்த ஜனாதிபதி, ஜனநாயகத்தின் இலட்சனமும் இதுவே என்றும் குறிப்பிட்டார்.

mainpic_L

இந்தியப் பிரதமருடன் தாம் நடத்திய பேச்சுவார்த்தைகளின் பயனாக இரு நாட்டு அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு மீனவர் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு காணப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வட மாகாண ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

அமைச்சர்கள் டி.எம். சுவாமிநாதன், எம்.கே. டீ.எஸ். குணவர்தன, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், சுமந்திரன், டக்ளஸ் தேவானந்தா, மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,

ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் முதல் தடவையாக வட மாகாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன்.இதற்கு முன்பு இரண்டு மாதங்களுக்கு முன்பதாக தேர்தல் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக இங்கு வருகை தந்திருந்தேன். தேர்தல் வெற்றிக்குப் பின்னர் வட மாகாணத்திற்கான எனது முதலாவது விஜயம் இதுவாகும்.

நாட்டு மக்கள் தமது வாக்குகளை வழங்கி பெற்றுக்கொண்ட இந்த வெற்றியானது நாட்டினதும் மக்களினதும் வெற்றியாகவே நான் கருதுகின்றேன்.

நாட்டில் புது யுகமொன்று உருவாகியுள்ளதாக நான் கருதுகின்றேன். புதிய யுகமொன்று உருவாவதே மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது. மக்கள் என்மீது கொண்டுள்ள எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் பாதுகாத்து செயற்படுவது எனது பொறுப்பும் கடமையுமாகும்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி. மாவை சேனாதி ராஜா இங்கு கருத்துத் தெரிவிக்கையில், எமக்குள் எந்த ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப் படவில்லை என்பதை உறுதியாகத் தெரிவித்தார்.

எனினும் கடந்த தேர்தல் மேடைகளில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. அவ்வாறு எந்தவொரு ஒப்பந்தமும்

ஏற்படுத்தப்படவில்லை என இன்றும் நாம் உறுதியாகக் கூறுகின்றோம். ஒப்பந்தங்கள் எதுவும் மேற்கொள்ளப்பட வில்லை என்பதை உறுதிப்படுத்தும் முக்கிய நிகழ்வாக இந்த நிகழ்வைக் குறிப்பிட முடியும்.

எமது உள்ளங்களில் ஒப்பந்தங்கள் உள்ளன. அது மனிதாபிமானம் தொடர்பான ஒப்பந்தமாகும். அதனால் மனிதத்தன்மை யைப் பாதுகாப்பது எமது முக்கிய பொறுப்பாகும்.

பேசும் மொழிகளில் பிரச்சினைகள் இல்லை. நம் அனைவரினதும் இரத்தம் ஒரே நிறமானது. அதனால் நாம் மனிதத் தன்மையை முதன்மைப்படுத்தி செயற்படுவது முக்கியமாகும்.

நாட்டில் மக்களின் ஜனநாயகத்தைப் பாதுகாத்து வழங்குவது எனது முதன்மைப் பொறுப்பாகும். நாட்டில் வாழும் பல மொழிகளைப் பேசுகின்ற மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது அவசியமாகிறது. அதேபோன்று அனைத்து மதங்களுக்கிடையில் நட்புறவையும் சகோதரத்துவத்தையும் கட்டியெழுப்புவதும் முக்கியமாகும். சகோதரத்துவத்துடனும் புரிந்துணர்வுடனும் செயற்படுவது மிக முக்கியமானது. சக வாழ்வுக்கான செயற்பாடுகளும் இதில் குறிப்பிடத்தக்கது.

இன்று பல கட்சிகளையும் சார்ந்த மக்கள் பிரதிநிதிகள் ஆற்றிய உரைகளைத் தொகுத் தால் அது மிக நீளமானது. அதற்குள் உள்ள விடயங்கள் மிக முக்கியமானது. பல நாட்கள் பேச வேண்டிய விடயங்களை மக்கள் பிரதிநிதிகளாகிய நீங்கள் சில நிமிடங்களில் வெளிப்படுத்தியுள்Zர்கள். மக்கள் தமது பிரச்சினைகளைத் தெரிவிப் பதற்காகவே என்னை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். அதனால் பிரச்சினைகளைச் செவிமடுப்பதை நான் சிரமமாகக் கொள்ளாது மகிழச்சியடை கின்றேன். அது போன்றே இந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் நான் மகிழ்ச்சியடைவேன்.

பிரச்சினைகளைத் தீர்ப்பதில் நாம் சகோதரத்துவத்துடன் செயற்படுவது முக்கியமாகும்.

நாம் நீண்ட பயணம் ஒன்றை மேற்கொள்ள வேண்டிள்ளது. பெண்களுக் கெதிரான பாலியல் துஷ்பிரயோகம், அச்சுறுத்தல் போன்றவை இல்லா தொழிக்கப்பட வேண்டும்.

நாம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முற்படும் போது வடக்கு தெற்கு என பாராமல் நாடு என்ற ரீதியில் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். எனினும் யுத்தம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டது வடக்கு, கிழக்கு பிரதேசங்களே.

அதனால் வடக்கு கிழக்கு பிரதேசங்களை முதன்மைப்படுத்தி செயற்படுவது முக்கியமாகிறது. யுத்தத்தினால் தென்னிலங்கையிலும் பல இழப்புக்கள் பாதிப்புக்கள் இடம்பெற்றுள்ளன. அதனால் அனைவரையும் கருத்திற் கொண்டு செயற்படுவது அவசியமாகிறது.

எமது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசுவது சிறந்ததாகும். பேச்சுவார்த்தை மூலம் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்பது எனது நம்பிக்கை. அது ஜனநாயகத்தின் சிறந்த இலட்சணமாகும்.

அதேபோன்று பாராளுமன்றம், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிச் சபைகளின் பங்களிப்புகள் இதில் முக்கியம் பெறுகின்றன. இந்த நிறுவனங்களின் ஆலோசனைகள் மிக முக்கியமானது.

இங்கு மக்கள் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட இப்பிரதேசத்திற்கே உரித்தான பல பிரச்சினைகளை செவிமடுக்க நேர்ந்தது. சுகாதாரம், கல்வி, விவசாயம், கடற்றொழில் என பல அம்சங்கள் இவற்றிலடங்கும். காணிப் பிரச்சினைகள் தொடர்பில் விடயங்கள் முன்வைக்கப் பட்டன.

நாம் காணிப் பிரச்சினைகள் தொடர்பாக இந்த குறுகிய காலத்தில் கவனம் செலுத்தி பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளோம்.

தமது நடவடிக்கைகளுக்காகப் பெற்றுக் கொண்டுள்ள காணிகளில் உரிய மக்கள் மீள்குடியமர்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவை தொடர்பான பொறுப்புக்கள் அமைச்சர் சுவாமிநாதனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவர் அதனை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றார். அதற்காக அவருக்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன்.

யுத்த காலத்தில் வடக்கில் மட்டமன்றி தெற்கிலும் கிழக்கிலும் பாதுகாப்புப் படையினர் இது போன்று காணிகளை பெற்றுக்கொண்ட நிலைமைகள் உள்ளன.

கொழும்பிலும் ஜனாதிபதி மாளிகை அலரிமாளிகை போன்ற பிரதேசங்களில் பெறுமதியான காணிகள் படையினரால் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இவற்றை விடுவிக்கின்ற நடவடிக்கைகளை நாம் ஆரம்பித்துள்ளோம். நாம் புதிய அரசாங் கத்தை அமைத்த போது தமிழ் பிரதிநிதிகளில் யோசனைகள் பல முன்வைக்கப்பட்டன. புதிய ஆளுநர் ஒருவர் தேவை என்ற வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.

இது உங்களது நீண்டகால கோரிக்கை என்பது எனக்குத் தெரியும். நான் அமைச்சராக பதவி வகித்த போதே வடக்கிற்கு மட்டுமன்றி கிழக்கிற்கும் நிர்வாக சேவை அனுபவமுள்ள அதிகாரியை ஆளுநர்களாக நியமிக்குமாறு முன்னாள் ஜனாதிபதியிடமும் கேட்டுக்கொண்டேன். செயலாளர்களையும் அவ்வாறு மாற்றுமாறு நான் அவரிடம் கேட்டுக்கொண்டேன். எனினும் அது இடம்பெறவில்லை.

இது தொடர்பில் ஒரு வகையில் நான் மகிழ்ச்சியடைய முடிகிறது. அவ்வாறு இடம்பெறாததாலேயே மக்கள் என்னை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்துள் ளார்கள். இந்தப் பிரச்சினையை நான் தீர்க்க சந்தப்பம் கிடைத்துள்ளது.

என்னிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பல பிரேரணைகள் சம்பந்தமாக நாம் ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

வடக்கு கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் முக்கியமானவை, எனது இந்திய விஜயத்தின் போது இந்தியப் பிரதமருடனான சந்திப்பில் இதற்கு நாம் முக்கியத்துவமளித்தோம். பிரச்சினை தொடர்பில் நாம் தெளிவு பெற்றோம். எதிர்வரும் காலங்களில் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இதற்குத் தீர்வு காணப்படும்.

கல்வி சுகாதாரம் போன்ற பிரச்சினை தொழிலற்ற பிரச்சினை வடக்கில் மட்டுமன்றி நாடுமுழுவதிலும் உள்ளன. பட்டதாரிகளுக்கான தொழில்வாய்ப்பு தொடர்பில் நாம் கவனம் செலுத்துவோம்.

விவசாயத்துறை பற்றி குறிப்பிடும்போது வடக்கு விவசாயிகள் முழு நாட்டுக்கும் முன்னுதாரணமாகத் திகழ்பவர்கள். அர்ப்பணிப்புடன் செயற்பட்டு தேசிய பொருளாதாரத்துக்குப் பங்களிப்புச் செய்து வருபவர்கள்.

யாழ்ப்பாணத்தில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க வெளிநாட்டு உதவியுடன் உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளோம். யுத்தத்தினால் வடக்கில் 80,000 ற்கும் மேற்பட்ட விதவைகள் உள்ளதாகத் தெரிய வருகிறது. அவர்களின் மேம்பாட்டிற்காக புரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மூலம் விசேட செயற்திட்டமொன்றை நடைமுறைப்ப டுத்தவும் தீர்மானித்துள்ளோம்.

வடக்கு, கிழக்கு மட்டுமன்றி தெற்கிலும் பெருமளவு விதவைகள் உள்ளனர். இவர்கள் அனைவரது தொடர்பிலும் நாம் மனிதாபிமான ரீதியில் நடவடிக்கை களை மேற்கொள்வது முக்கியமாகும்.

மாவை சேனாதிராசா எம்.பி. தேசிய நிறைவேற்றுக்குழு பற்றி குறிப்பிட்டார். அக்குழு வாரா வாரம் கூடுகிறது. சம்பந்தன் எம்.பி. அக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றார்.

நூறு நாள் வேலைத்திட்டத்தின் மீளாய்வு அங்கு இடம்பெறுகிறது. அந்த வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் பற்றியும் அங்கு பேசப்படுகிறது. அதன் பிரதிபலன்களைக் காண முடிகின்றது.

எதிர்வரும் காலங்களில் அமைச்சர்கள் பலரை இந்த பகுதிக்கு அனுப்பி இங்குள்ள மக்கள் பிரதிநிதிகளுடனும் அதிகாரிகளுடனும் கலந்துரையாடி அபிவிருத்தி மற்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண எதிர்பார்த்துள்ளோம். இதற்கான பணிப்புரைகளை நான் விடுக்கவுள்ளேன்.

பெளதீக வளங்களை பெற்றுக்கொடுப்பதன் மூலம் மட்டும் வடக்கு, கிழக்கை சமாதானப்படுத்த முடியாது. இரும்பு, மணல், செங்கற்கள் மூலம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலுள்ள அதிகாரிகள் மக்கள் மனங்களை இணைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். உங்கள் சேவகன் என்ற வகையிலும் ஜனாதிபதி என்ற வகையிலும் இது விடயத்தில் நான் செயற்படுவேன்.

மக்கள் மத்தியிலுள்ள பயம் சந்தேகங்களை இல்லாதொழிப்பது முக்கியமாகும். தமிழ், முஸ்லிம் சிங்களம் என அனைத்து மக்களிடையேயும் சகோதரத்துவம் மேலோங்க வேண்டும். நட்புறவும் நம்பிக்கையும் அவசியமாகிறது.

இன்று எனது தலைமையிலான இந்த நிகழ்வில் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்று பிரச்சினைகள் கருத்துக்களை முன்வைத்துள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது.

வடக்கிற்கான முதலாவது விஜயம் போன்றே எனது ஐந்து வருட பதவிக்காலத்தில் நான் இங்கு வரும் போதெல்லாம் இந்த ஒற்றுமை வெளிப்படும் என நான் நம்புகிறேன்.

நம்பிக்கையான செயற்பாடுகள் மூலமே இவ்வாறு எம்மால் ஒன்றாக அமர முடியும். அவ்வாறு எம்மால் செயற்பட முடியுமென நான் நம்புகின்றேன்.

நாம் இலங்கையர் என்ற ரீதியில் ஒன்றிணைந்து செயற்படுவோம். அதேபோன்று தேசிய பாதுகாப்பு தொடர்பிலும் நாம் பொறுப்புடன் செயற்பட வேண்டியுள்ளது. தீர்க்கப்படாத பிரச்சினைகளை நாம் தீர்த்துக் கொள்வோம்.

வறுமை ஒழிப்பு முக்கிய பிரச்சினையாக உள்ளது. மக்களின் பொருளாதாரம் மிக முக்கியமானது. வறுமை அதிகரிக்கும் போதே நோய்கள் பெருகுகின்றன. வறுமை இருந்தால் ஆரோக்கியமான மக்களை உருவாக்க முடியாது. வறுமை மக்கள் மத்தியிலுள்ள சந்தோசத்தை ஒழிக்கக் கூடியது. இதனால் மக்களின் பெருளாதார மேம்பாட்டிற்கு முக்கியத்துவமளிப்போம்.

முன்வைக்கப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளிலும் நாம் கவனம் செலுத்துவோம். வடக்கிற்கு வந்து ஒன்றாய் அமர்ந்து நாம் கலந்துரையாடுவது போல கொழுப்பிலும் ஒன்றாய் அமர்ந்து பேசுவோம். பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

யாழ். மாவட்டச் செயலகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதிக்கு தமிழ் கலாசார முறையில் மகத்தான வரவேற்பளிக் கப்பட்டது. முதலமைச்சர் சி.வி. விக்னேஸ் வரன் மலர் மாலை அணிவித்து ஜனாதி பதியை வரவேற்றார். ஜனாதிபதி அவர்கள் நல்லூர்க்கந்தன் தேவஸ்தானத்துக்கும் சென்று விசேட வழிபாடுகளில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux