தமிழர்களுக்கு அறிவு மைய அரசியல் தேவை – பேராசிரியர் இரா.சிவசந்திரன்-சிறப்புக் கட்டுரை..

தமிழர்களுக்கு அறிவு மைய அரசியல் தேவை – பேராசிரியர் இரா.சிவசந்திரன்-சிறப்புக் கட்டுரை..

சிந்தனைக்கூடம் யாழ்ப்பாணம் எனும் ஆய்வு, அபிவிருத்தி நிறுவனத்தின் குழுநிலை ஆய்வுக் கலந்தரையாடல் ஒன்று 2015ஃ22ஃ02 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் இரண்டாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள சிந்தனைக் கூடத்தின் கேட்போர் கூடத்தில் மாலை 4மணிக்கு, ‘வடக்கின் இன்றைய நிலை’ எனும் தலைப்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தலைமையுரையாற்றிய சிந்தனைக் கூடத்தின் பணிப்பாளர் பேராசிரியர் இரா.சிவசந்திரன் பின்வரும் கருத்துகளை முன்வைத்தார்.sivachandran

மாகாண சபை முதன் முதலாக வடக்கில் ஏற்படுத்தப்பட்ட போது பெரும் வரவேற்பு இருந்தது. அது தமிழ் மக்களுக்கான பொருளாதார, சமூக, கலாசார அபிவிருத்திக்கான ஒரு சக்தி மிக்க நிறுவனமாக அமையும் என எண்ணினர். இம் முறைமையில் எமக்கான அபிவிருத்தியை நாமே தீர்மானிக்கக் கூடிய அபிவிருத்தி வழிவகை ஒன்றை நாம் பெற்றிருக்கின்றோம். இதில், அதிகாரங்கள் தொடர்பில் குறை, நிறைகள் இருக்கலாம். ஆனாலும் இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தமிழ் பிரதேசத்தில் நிலைபேறான அபிவிருத்தியை ஏற்படுத்தலாம் என்பதே மக்கள் எதிர்பார்ப்பாக இருந்தது.

கடந்த ஒரு வருடமாக இடம்பெற்று வந்த மாகாண சபை நிகழ்வுகள் கசப்பான விதைகளை மக்களிடம் விதைத்துள்ளன. ‘அபிவிருத்தி’ தவிர இவர்கள் முக்;கியமற்ற அரசியல் விடயங்களின் கவனம் கொண்டு தம்மையும், மக்களையும்; குழப்பும் நிலை காணப்படுகின்றது. இதை உற்று நோக்கும் போது மாகாணசபையின் அதிகார எல்லை எது என்பதை இவர்கள் அறியாது உள்ளார்கள் போன்றே தோன்றுகிறது.

அதாவது, அரசியல் உரிமையினையும் அபிவிருத்தியையும் ஒரு வண்டிலை இழுக்கும் ஜோடி மாடுகள் போல சமமான அந்தஸ்து அளித்து இழுத்துச் செல்லவேண்டிய கடப்பாடு மாகாண சபைக்கு உள்ளது. எந்த அரசியலுக்கும், அங்கு வாழும் மக்களின் அபிவிருத்தியும் சுபீட்சம் மிக்க வாழ்வும் இன்றியமையாதவையாகும்.

இந்த இடத்தில் அபிவிருத்தி என்றால் என்ன? என்ற கேள்வியினை நாம் எழுப்பவேண்டியுள்ளது. எம்மைச் சூழவுள்ள பௌதிக வளங்களை மனித வளங்களின் ஊடாகவே நாம் மேம்படுத்த செய்யமுடியும். மனிதன் வளமாக மாறுவதற்கு கல்வி அறிவும் தொழில்நுட்ப அறிவும் கொண்டவனாக அவன் இருத்தல் வேண்டும்.

எனவேதான் அறிவை மையமாகக் கொண்ட மனிதனை நாம் உருவாக்க வேண்டும். தகவல் தொழில்நுட்ப யுகத்தில் அதனைப்பெற்று அறிவையும் நுட்பத்தினையும் வளர்த்து அறிவுமைய மனித வளத்தினை உருவாக்க வேண்டிய தேவை போரின் பின்பான நிலையில் தமிழர்களுக்கு அவசியமாகவுள்ளது.

அதாவது, தமிழ் இனம் இதுவரைகாலமும் எதிர்கொண்ட பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கும் தென்படைவதற்கும் அவர்களின் நீண்ட கால சொத்தான அறிவுசார் நிறுவனங்களின் மீள் உருவாக்கம் அவசியமாகவுள்ளது என்பது எனது எதிர்பார்க்கையாகும்.

மாகாணசபை, பிரதேச சபை உறுப்பினர்கள் தற்போது ‘மாலை, மேடை’ எனத் திரிகின்றார்களே தவிர மக்கள் வாழ்வின் மேம்பாடு பற்றி சிந்திப்பதாகத் தெரியவில்லை. மக்கள் வாக்களித்துத்தான் ஒவ்வோர் அவையிலும் அங்கத்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள். தர்க்க ரீதியாகப் பார்த்தால் மக்களுக்கு இவர்களே மாலை இடவேண்டும். ‘மாவீரர்களுக்குத் தான் மாலை மற்றையோருக்கு இல்லை’ என்று ஒவ்வொரு தாழ்மகனும் தீர்மானம் எடுக்கவேண்டும்.

தமிழ் மக்களின் அரசியலிலும் ஏனைய சமூக பொருளாதார விடயங்களிலும் இன்று மிகவும் அவசியப்படும் விடயமாக அறிவினை நான் பார்க்கின்றேன். இந்த அறிவு தனியே கல்வி நிறுவனங்களால் ஏற்படுத்தப்படுவதென நான் அடையாளப்படுத்தவில்லை.

மாறாக அது முறைசார்ந்த கல்வியால் பெற்ற அறிவாகவோ அல்லது முறைசாரா முறைமைகளினூடாகப் பெற்ற அறிவாகவோ இருக்கலாம். எதுவாக இருந்தாலும் உணர்ச்சிவசப்படுத்தலுக்கு அப்பாற்பட்டு எதையும் அறிவு ரீதியாக அணுகவேண்டிய யதார்த்தம் ஒன்று காலத்தின் அவசியமாக உள்ளது.

கடந்த காலத்தில் நாம் எதிர்கொண்ட துர்ப்பாக்கிய நிலைமைகள் எம்மை அனேகமாக உணர்ச்சிமைய செயற்பாடுகளுக்குள்ளும் கருத்தாடல்களுக்குள்ளும் முடக்கியே வைத்துள்ளன.

வடமாகாண சபையின் அண்மைக்கால தீர்மானங்கள் அறிவு சார்ந்தவையாக இல்லை, உணர்ச்சி சார்ந்தவையாகவே உள்ளன. பாராளுமன்றத்தில எமது அரசியல் சார் குறைகளை பற்றிக்குரல் எழுப்புவதற்கு எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். வடமாகாண சபை சகல மக்கள் வாழ்வின் மேம்பாடு பற்றியே முதற் கவனம் கொள்ளவேண்டும் என நாம் நம்புகின்றோம்.

 எமது யாழ்குடாநாட்டில் மிகவும் வளமான செம்மண் பிரதேசமான வலிகாம பிரதேசத்தின் தரைகீழ் நீரில் கழிவு எண்ணெய் கழிவுகள் கலந்துள்ளன என்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்து. இது இன்றைய நிலையில் நாங்கள் எதிர் நோக்கும் பல பிரச்சினைகளுள் தலையாய பிரச்சினையாக உள்ளது. நீரியியல் சார் நிபுணர்கள், இத்துறை சார் அறிஞர்கள் பேச வேண்டிய, ஆய்வு செய்ய வேண்டிய இவ்விடயம் பற்றி யார் யாரோ எல்லாம் பேசுகின்றார்கள். அவர்களே தீர்வையும் சொல்கின்றார்கள். இது புத்திஜீவிகள் வாழும் பூமியா? அரசியல் வாதிகள் எல்லாம் துறைபோன அறிஞர் பெருமக்களா?

அடுத்த முறை பாராளுமன்றத்திற்கு தெரிவாகுபவர்களுக்கும் மாகாணசபை, பிரதேச சபைக்குத் தெரிவாகுபவர்களுக்கும் அவர்களது கல்வி அறிவு பற்றிய சுய விபரக்கோவையை பரிசீலித்தே வேட்பாளர்கள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். மாநகர சபையின் கழிவுகளைத் திரட்டுபவர்கள் கூட க.பொ.த சாதாரணம் சித்தியடைந்திருக்க வேண்டும். எம்மை வழிநடத்தும் அரசியல் வாதிகளுக்கு கல்வி அறிவு தேவை இல்லையா? இது பற்றி தமிழ் மக்கள் ஆழமாகச் சிந்திக்கவேண்டும்.

மாகாண சபையும், பிரதேச சபையும் பெருமளவும் தமிழர் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியிலேயே இயங்கி வருகின்றன. உள்ளுராட்சி நிறுவனத்தின் முதற்பணி மக்களின் சுற்றம், சுகாதாரம் பேணுவதற்கு கழிவுகளை ஒழுங்காக அகற்றுவதாகும். யாழ்ப்பாணத்தில் எங்கும் குப்பைகளும், கழிவுகளும் வீதி ஓரங்களில் நீக்கமற நிறைந்துள்ளன. ஒழுங்காகக் கழிவு அகற்றும் முகாமைத்துவம் தெரியாதவர்களுக்கு ஆட்சி ஏன்?

 கல்லண்டையில் கழிவு கொட்டுதல் தொடர்பாக மக்களுக்கும், மக்களால் தேர்;ந்தெடுக்கப்பட்ட மாகாண சபைக்கும், பிரதேச சபைகளுக்கும் பிரச்சினை உள்ளது, இது தீராத பிரச்சினையாக தொடர்கிறது எப்படி இருக்கிறது எமது நிர்வாகம்?

எமது பிரதேச நிர்வாகத்தின் ஆட்சிமுறை திண்மக் கழிவுகள் அகற்றுதல் பற்றிய விடயம் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு முறையான முகாமைத்துவத்திற்கு உட்பட வேண்டிய விடயமாகும். இவற்றைப் பற்றி எந்தச் சபையும் முறையான திட்டத்தை கொண்டிருக்கவில்லை.

உள்ளுராட்சி நிர்வாகம் பற்றிய அறிவை எல்லோருக்கும் புகட்டுவதன் மூலமே இவ்வாறான பிரச்சினைகளுக்கும் இது போன்று எதிர்காலத்தில் எழும் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணலாம் என பேராசிரியர் சிவசந்திரன் தெரிவித்தார்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux