தமிழகத்திலிருந்து மீண்டும் தாயகம் திரும்ப 70 சதவீதமாக அகதிகள் விருப்பம்-முழு விபரங்கள் இணைப்பு!

தமிழகத்திலிருந்து மீண்டும் தாயகம் திரும்ப 70 சதவீதமாக அகதிகள் விருப்பம்-முழு விபரங்கள் இணைப்பு!

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளில், 70 சதவீதம் பேர், மீண்டும் இலங்கை செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், ஏழு நிலைகள் கொண்ட தயாரிப்பு திட்டம் என்ற பெயரில், மத்திய, மாநில அரசுகளுக்கு அவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.

Evening-Tamil-News-Paper_1538813115

இலங்கையில் நடந்த மூன்றுகட்ட போர்களினால், 8 லட்சம் தமிழர்கள், அந்நாட்டை விட்டு வெளியேறினர். இவர்களில், 3.20 லட்சம் பேர், தமிழகம் வந்தனர். 2.12 லட்சம் பேர், இலங்கை திரும்பி விட்டனர். 1.02 லட்சம் பேர், தமிழகத்தில் உள்ளனர் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது. மூன்றாம்கட்ட இறுதிப் போர் முடிந்த பின்னும், நாட்டுக்கு திரும்பாமல் உள்ளவர்களின் எண்ணிக்கையே, 1.02 லட்சம். இவர்களில், 34,524 பேர், 107 முகாம்களிலும், மீதமுள்ளவர்கள் வெளியிலும் தங்கியுள்ளனர்.

அதிபர் தேர்தல்:இலங்கையில், அண்மையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள், தாயகம் திரும்பத் தேவையான ஏற்பாடுகளை, ஈழ அகதிகள் மறுவாழ்வுக்கான அமைப்பு செய்து வருகிறது.’ஈழத் தந்தை’ என அழைக்கப்படும் செல்வாவின் மகனும், இந்த அமைப்பின் பொருளாளருமான சந்திரஹாசன் கூறியதாவது:ஈழத் தமிழர்களுக்கு, நெருக்கடியான கட்டத்தில் தமிழகம் உதவி செய்துள்ளது. இதை, எங்களால் எப்போதும் மறக்க முடியாது. அதே நேரத்தில், விருந்தாளியாக எத்தனை நாட்களுக்கு, தமிழகத்தில் இருக்க முடியும். ஓட்டுரிமை, நிரந்தர குடியுரிமை என்பது, இலங்கையில் தான் கிடைக்கும். அதனால், பெருவாரியான ஈழத் தமிழர்கள், நாடு திரும்பவே விரும்புகின்றனர். இறுதிக்கட்டப் போர் முடிந்த பின், 2009 முதல் 2014 வரை, 2,000 பேர், அவர்களே விரும்பி, இலங்கை திரும்பி உள்ளனர். அவர்களில் பெரும் பகுதியினர், அங்கு தான் இருக்கின்றனர். சிலர், மீண்டும் இங்கு வந்துவிட்டனர்.அங்கிருப்பவர்கள், ‘ஸ்கைப்’ என்ற இணையதள வசதி மூலம் இங்கு உள்ளவர்களிடம் பேசுகின்றனர். அங்கு, உயிருக்கு அச்சமில்லை என்பது தெரிய வந்திருக்கிறது.

நெருக்கடிகள்:ஆனால், சில நெருக்கடிகள் மட்டும் உள்ளன. அதைத் தாண்டி முன்னேற முடியும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது. அகதிகள் நாடு திரும்புவதில் தமிழக அரசியலை புகுத்தாமல், விரும்பி நாடு திரும்புவோரை, உரிய முறையில் மகிழ்ச்சியுடன் அனுப்ப வேண்டும்.ஈழத்தில் விட்டுவிட்டு வந்த வீடு, நிலம் ஆகியவற்றை திரும்ப வழங்க வேண்டும். அப்படியில்லாத நிலையில், மாற்று இடங்களை வழங்க தயாராக இருப்பதாக, இலங்கை அரசு கூறியுள்ளது. ஆட்சி மாற்றத்தால் நிம்மதி ஏற்படும் வகையில், பாதுகாப்பு அம்சங்கள்உருவாகியுள்ளன. புதிய அரசின், 100 நாள் திட்டம், இதற்கு சாட்சியாக இருக்கும் என, எதிர்பார்க்கிறோம். தமிழர் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உள்ளிட்ட தமிழர் தலைவர்களைக் கொண்டு, இலங்கை அதிபர், பிரதமர் ஆகியோர் அடங்கிய குழு தான், 100 நாள் திட்ட நோக்கத்தை உருவாக்குகிறது. எனவே, தமிழர்களுக்கு சாதகமான நிலை உருவாகும்.இவ்வாறு, அவர் கூறினார்.

70 சதவீதம் பேர் ஆர்வம்:இந்தியாவில் உள்ள, பல்வேறு தொண்டு நிறுவனங்கள் நடத்திய ஆய்வில், தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளில், 70 சதவீதம் பேர், நாடு திரும்ப விரும்புவதாக தெரிவித்துள்ளனர். 20 சதவீதம் பேர், சில நிபந்தனைகளுக்குஉட்பட்டு நாடு திரும்ப விரும்புகின்றனர். 10 சதவீதம் பேரே, தமிழகத்தில் தொடர்ந்து வாழ விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.இந்த ஆய்வு, பார்லிமென்ட் நிலைக்குழு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து, நிலைக்குழு தலைவர் சுதர்சன நாச்சியப்பன் கூறியதாவது:இரு நாடுகளின் வெளியுறவுத் துறை அதிகாரிகள், ஐ.நா., சபை அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில், தொண்டு நிறுவனம் தன் ஆய்வு முடிவை அளித்துள்ளது. இதை, அகதிகள் மறுவாழ்வுக்கான பார்லிமென்ட் நிலைக் குழுவும், ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளது.தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளிடம், பார்லிமென்ட் நிலைக்குழு, கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்த உள்ளது. அதன்மூலம் தொண்டு நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள், முழுமையாக ஆய்வு செய்யும். இதன்பின், நிலைக்குழு அறிக்கை பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும். தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்ப விரும்பினால் அதற்கு, மூன்று முதல் ஐந்து ஆண்டுகளாகும். இதற்கான தயாரிப்பு பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை செய்து தர வேண்டி இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.பலன் என்ன?இலங்கையின், 1981ம் ஆண்டு மொத்த மக்கள் தொகை கணக்குப்படி, 7.4 சதவீத தமிழர்கள் இருந்தனர். 2012 கணக்கெடுப்பின் போது, தமிழர்களின் எண்ணிக்கை, 5.2 சதவீதமாகக் குறைந்துள்ளது என, புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.போரினால், தமிழர்கள் வெளியேறியதால், மக்கள் தொகை குறைந்து விட்டது. இதனால், இலங்கை பார்லிமென்டில், தமிழர்களின் எண்ணிக்கையில், நான்கு எம்.பி.,க்கள் குறைந்துள்ளனர்.வெளிநாட்டில் உள்ள தமிழர்கள்,தாயகம் திரும்புவதன் மூலம், தமிழர்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும். அதன்மூலம், அவர்களின் உரிமையை நிலைநாட்ட முடியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ஏழு அம்ச திட்டம் என்ன?

*இந்தியாவில் இருந்த காலத்தில், பெற்ற கல்வி சான்று, திருமண சான்று, தொழில் சான்றுகளை தமிழகஅரசு அளிக்க வேண்டும். அதோடு, இங்கு சேர்த்த பொருட்களை, தாயகம் கொண்டு செல்ல, அனுமதியும், அவற்றை கொண்டு செல்ல மரப் பெட்டிகளும் கொடுக்க வேண்டும்.
*இப்பொருட்களை, அகதி முகாமில் இருந்து, விமான நிலையம் மற்றும் துறைமுகங்களுக்கு கொண்டு செல்ல, போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும். அத்துடன், இந்திய அரசு அளிக்கும் மறுவாழ்வு உதவிகளையும் கொடுக்க வேண்டும். இதற்கான, உறுதி ஆவணங்களையும் அளிக்க வேண்டும்.
*குறிப்பாக, பொருட்களை கொண்டு செல்ல, சிறப்பு கப்பல் போக்குவரத்தோடு, சுங்க மற்றும் இதர செலவுகளை இந்திய அரசு ஏற்க வேண்டும்.
*இலங்கையில், இப்பொருட்களுக்கு, சுங்க வரி விலக்கு பெற்று தர வேண்டும். இலங்கையில் சொந்த ஊர்களுக்கு செல்ல, சிறப்பு போக்குவரத்து ஏற்பாடு செய்து தர வேண்டும்.
*இலங்கையில், மீள் குடியமர்வு செய்யப்படுவோருக்கு, குடியிருக்க இடம், வீடு, தொழிலுக்கான உதவிகளை, படிப்படியாக அளிக்க வேண்டும்.
*நிரந்தர குடியமர்வு செய்யப்படுவோருக்கு, முதல் மூன்று ஆண்டுகளுக்கு, உணவு, மருத்துவ வசதி, குழந்தைகளின் கல்வி ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்.
*வாழ்வாதாரத்தை உறுதி செய்ய, தொழில் பயிற்சி மற்றும் கடன் உதவிகளை அளிக்க வேண்டும்.இவ்வாறு, ஏழு அம்ச திட்டங்களை முன் வைக்கின்றனர்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux