கோவையில் அரசு பஸ் மீது மோதல் விபத்தில் சிக்கிய காரில் பண மழை கொட்டியது-படியுங்கள்!

கோவையில் அரசு பஸ் மீது மோதல் விபத்தில் சிக்கிய காரில் பண மழை கொட்டியது-படியுங்கள்!

10922454_866903650014436_3799949463117417148_n

கோவையில், விபத்தில் சிக்கிய காரில் இருந்து கட்டுக்கட்டாக பணம் கொட்டியது. அதை பொதுமக்கள் போட்டிப்போட்டு அள்ளிச்சென்றனர். ரூ.2.45 கோடி மீட்கப்பட்டது. கோவை மதுக்கரை மார்க்கெட்டில் இருந்து அரிசிபாளையம் நோக்கி நேற்று காலை 8.40 மணிக்கு அரசு டவுன் பஸ் ஒன்று சென்றது. போடிபாளையம் அருகே சென்றபோது அவ்வழியாக வந்த சொகுசு கார் மீது பஸ் மோதியது. இதில் காரை ஓட்டிய டிரைவர், கேரள மாநிலம் கோழிக்கோடுவை சேர்ந்த யாசர் அராபத் (26), முன் பக்க சீட்டில் உட்கார்ந்திருந்த ஜாபர் (35) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். காரின் பின் பக்க சீட்டில் இருந்த ஜலீல் (41) என்பவருக்கு விரலில் காயம் ஏற்பட்டது. விபத்தின்போது காரில் கதவில் இருந்தும், டேஷ் போர்டில் இருந்தும் பணக்கட்டுகள் கொட்டியது.  மேலும், பெரிய மூட்டை ஒன்று சிதறி ரோட்டில் விழுந்தது. அதில், 500 ரூபாய் கட்டுகளாக இருந்தன. ரோட்டில் பண கட்டுகள் சிதறியதை கண்ட பஸ் பயணிகளும், பொதுமக்களும் போட்டி போட்டுக் கொண்டு தங்களது வேட்டி, சேலையில் பணக்கட்டுகளை போட்டுக் கொண்டு சென்றனர். மேலும், சுற்றுப்புற பகுதிகளில் இருந்தவர்கள் கூடிவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணக்கட்டுகளை யும், ரோட்டில் சிதறிக் கிடந்த பணக் கட்டுகளையும் கைப்பற்றினர். மதுக்கரை போலீஸ் ஸ்டேஷனில் வைத்து பணக்கட்டு மூட்டையை பிரித்து எண்ணப்பட்டது. இதில் 248 கட்டுகளாக 2 கோடியே 44 லட்சத்து 95 ஆயிரத்து 800 ரூபாய் இருந்தது. 800 ரூபாய் தவிர மற்ற அனைத்தும் 500 ரூபாய் தாள்களாக இருந்தது. சில கட்டுகளில் வங்கிகளில் பெறப்பட்ட ரசீதும் காணப்பட்டது. இவ்விபத்தில் காயமடைந்த 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பண மூட்டை குறித்து வருமான வரித்துறை மற்றும்  வருவாய்த்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வருமான வரித்துறை (விசாரணை பிரிவு) துணை இயக்குநர் ஜெயப்பிரகாஷ், ஆய்வாளர்கள் மனோஜ், பிரசாத், கனகராஜ் ஆகியோர் ஜலீலிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஜலீல், ‘‘இந்த பணம் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முஸ்தபா (52) என்பவருக்கு சொந்தமானது. பணம் தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது, என்னை பாதுகாப்பிற்காக காரில் போக சொன்னார்கள், பாலக்காட்டிற்கு பணத்தை கொண்டு போய் சேர்க்கவேண்டும் என தெரிவித்தார்கள்‘‘ என்றார்.

முஸ்தபாவிடம் கேட்டபோது அவர், ‘‘ரயில்வேயில் கேட்டரிங் பிசினஸ் செய்து வருகிறேன். மலப்புரத்தில் 1 கோடி ரூபாய் செலவில் மசூதி கட்ட திட்டமிருக்கிறேன். எனக்கு தொழில் மூலமாக கிடைத்த பணத்தை காரில் அனுப்பி வைத்தேன். என் பணத்தை என்னிடம் ஒப்படைக்கவேண்டும்‘‘  என்று தெரிவித்தார். பணம் எப்படி வந்தது என்பதற்கான கணக்கு விவரங்களை கேட்டதற்கு அவரிடம் சரியான பதில் கிடைக்கவில்லை.
ஜலீல், ஜாபர், யாசர்அராபத் ஆகியோர் கடந்த 3ம் தேதியில் இருந்து காரில் சுற்றி கொண்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. கடந்த 3ம் தேதி கொச்சின் விமான நிலையம் சென்றுள்ளனர். பின்னர் மைசூர், பெங்களூர், சென்னை என பல்வேறு இடங்களில் இவர்களில் காரில் சுற்றியதாக தெரிகிறது. நேற்று காலை ஈரோட்டில் இருந்து கேரள மாநிலம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். காரில் சீட்டுக்கு அடியில் தார் பாய் மூலமாக பணத்தை மூட்டையாக கட்டி வைத்திருந்தனர். விபத்து ஏற்பட்டபோது பணம் சிதறி விட்டது. அனைத்து பணமும் விமானம் மூலமாக வந்திருக்கலாம் என வருமான வரித்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதைதொடர்ந்து பணம் அனைத்தையும் வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். அந்த பணம் வங்கியில் செலுத்தப்பட்டது.

சர்வதேச கடத்தலா?
விபத்தில் சிக்கிய காரில் 6 ஜீன்ஸ் பேண்ட், 10 சட்டை, 2 வேட்டி இருந்தது. இவை மூட்டையாக கட்டப்பட்டிருந்தது. காரில் 3 பேர் 4 நாள் முக்கிய நகரங்களுக்கு சென்ற விவரங்களை செல்போன் அழைப்பு மூலமாக வருமான வரித்துறையினர் கண்டறிந்தனர். இந்த கும்பல், இதற்கு முன் இதேபோல் பண மூட்டைகளை கடத்தியிருக்கலாம் என வருமான வரித்துறையினர் சந்தேகிக்கின்றனர். பணம் விமானம், கப்பல் மூலமாக கடத்தி வர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த கடத்தலில் சர்வதேச கும்பலின் தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது. கார் கதவில் கட்டுக்கட்டாக பணம் காருக்குள் சீட்கவர், டோர், டேஸ்போர்டு போன்றவற்றில் பணக்கட்டுகளை திணித்து வைத்திருந்தனர். விபத்து ஏற்பட்டதும், காரில் இருந்தவர்கள் ரத்த காயத்துடன் பணக்கட்டு மீது உயிருக்கு போராடினர். காரை மீட்டு, பணக்கட்டுடன் மதுக்கரை போலீஸ் ஸ்டேஷன் கொண்டு வந்தனர். காருக்குள் சீட் கவர், டோர் சந்து, டேஸ் போர்டில் மட்டும் ரூ.50 லட்சம் அடைக்கப்பட்டிருந்தது.

 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux