அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்கள்-எதிர்வரும் டிசம்பர் மாதம் 14ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள விருது வழங்கும் விழாவில் கலாபூஷணம் விருதினைப் பெறவுள்ளார்-என்று அறியமுடிகின்றது.
பல பட்டங்களையும்,விருதுகளையும்,பெற்றுள்ள பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்கள்- தற்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும்-தன்னை நாடி வரும் மாணவர்களுக்கு கல்விப்பணியாற்றி வருகின்றார் என்றும் அறிய முடிகின்றது.கல்விப்பணி-சமூகப்பணி என்று ஓயாது உழைத்தவரின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதனால்-கலாபூஷணம் விருதினை,அவருக்குப் பதிலாக உறவினர்கள் பெற்றுக் கொள்ள மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2014ஆம் ஆண்டுக்கான கலாபூஷணம் விருது பற்றிய முழு விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது
2014ஆம் ஆண்டுக்கான கலாபூஷணம் விருது பெறும் தமிழ் கலைஞர்கள் தொடர்பான விபரங்களை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதற்கமைய வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கலைஞர்கள் நூறுபேருக்கு கலாபூஷணம் விருது வழங்கப்படவுள்ளது.
இலக்கியம், சிற்பம், ஓவியம், இசை, நாட்டார் கலைகள், ஊடகம் போன்ற கலைத்துறைகளில் நீண்டகாலமாக சேவை புரிந்து அதன் மூலம் தாம் சார்ந்த சமூகத்திற்கு மகிழ்வையும், இரசனையான சிந்தனை மாற்றத்தையும் ஏற்படுத்திய மூத்த கலைஞர்களுக்கே இந்த விருது வழங்கப்படவிருப்பதாக இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து 45 கலைஞர்களும், மட்டக்களப்பு 11, வவுனியா 6, கிளிநொச்சி 3, மன்னார் 3, திருகோணமலை 7, அம்பாறை 4, நுவரெலியா 1, கண்டி 1, களுத்துறை 1, பதுளை 1, புத்தளம் மாவட்டத்தில் ஒருவருக்கும் கலாபூஷண விருது வழங்கப்படவுள்ளது.
கலைஞர்களுக்கான கலாபூஷணம் விருது வழங்கும் வைபவம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 14ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.