அல்லையூர் இணையத்தின் இயக்குனராகிய-நான் சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்திற்குச் சென்று திரும்பியிருந்தேன்.அங்கு நின்ற போது ஒரு நாள் எனது நீண்டகால முகநூல் நண்பரும்,”ஈரநெஞ்சம்”என்னும் அமைப்பின் நிறுவனருமாகிய,திரு மகேந்திரன் அவர்களைச் சந்திப்பதற்காக கோயம்புத்தூருக்குச் சென்றேன்.
இனி திரு மகேந்திரன் பற்றி…..
இவர் கோவை மாநகரில் ஈரநெஞ்சம் என்னும் அமைப்பினை உருவாக்கி-அதன் மூலம் அன்னை தெரசாவின் வழியில் அரும்பணிச் சேவையினை கருணையோடு செய்து வருபவர்-வீதியில் அனாதைகளாக கிடப்பவர்களை பொறுப்பெடுத்து-அவர்களைச் சுத்தப்படுத்தி ஆதரவற்றோர் காப்பகங்களில் சேர்த்து விடுவதுடன்-இறந்தவர்களை அடக்கம் செய்வது வரை இவரது பணி தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.
இனி கோவை மாநகராட்சி ஆதரவற்றோர் காப்பகம் பற்றி…..
கோவை மாநகராட்சியினால் பராமரிக்கப்படும் இந்த ஆதரவற்றோர் காப்பகத்தில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் கிடையாது-இங்கு 100க்கும் அதிகமான ஆதரவற்றோர் தங்கியுள்ளனர்.இவர்களில் முதியவர்கள்-மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள்-வலுவிழந்தோர்-பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதால் மனநிலை இழந்தோர் என பல்வேறு தரப்பினரும் கலந்து ஒரேயிடத்தில் தங்கியுள்ளனர்.
இனி அல்லையூர் இணையம் பற்றி…….
அறப்பணியே முதற்பணியாக கொண்டு இயங்கும் அல்லையூர் இணையத்தின் இயக்குனராகிய செல்லையா சிவா-ஆகிய நான் -இந்த ஆதரவற்றோர் காப்பகத்தில் ஒரு நாள் பொழுதினை கழித்ததோடு-அன்றைய தினம் காப்பகத்தை பார்வையிட வருகைதந்த மருத்துவக்கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் சிறிய உரையொன்றினையும் நிகழ்த்தியிருந்தேன்.மேலும் காப்பகத்தில் தங்கியுள்ளவர்களுடன் கலந்துரையாடியதுடன்,அன்றைய தினம் காப்பகத்தில் இயற்கை மரணமடைந்த மூதாட்டியின் உடலை இடுகாட்டில் அடக்கம் செய்துவிட்டு-அல்லையூர் இணையத்தின் சார்பில் 10.ஆயிரம் இந்திய ரூபாக்களை ஒருநாள் உணவுக்காக வழங்கிவிட்டு கனத்த இதயத்துடன் அங்கிருந்து விடைபெற்றேன்.