யாழில் பிரசவிக்கப்பட்ட மறுகணமே கைவிடப்படும் குழந்தைகள்

Hi Jeya
Hi Jeyaமுதல் நாள் பெய்த பெருமழையின் மிச்சமாக வானம் இருண்டு கிடந்தது. மெலிதான தூறல். விடிந்தும் விடியாத காலைப்பொழுது. தூக்கத்திலிருந்து விழித்துக்கொள்ளத் தொடங்கிய கிராமத்தின் வீதிகளில் இன்னமும் மனித நடமாட்டம் தொடங்கவில்லை. எங்கும் அமைதி போர்த்தப்பட்டி ருந்தது. அந்த அமைதி வெகு நேரம் நீடிக்கவில்லை.  வீதியோரமாய் தேங்கிநின்ற வெள்ள நீரைவிலக்கியவாறு வந்துகொண்டிருந்த வயோதிபர் ஒருவரின் காதில் திடீரென எழுந்த  முனகல் ஒலி விழுந்தது.வீதியில் யாருமில்லை. வீடுகளும் திறந்திருக்கவில்லை.  எங்கிருந்து அந்த முனகல் சத்தம் வருகின்றதென அவருக்கு ஒரே குழப்பம். சுற்றும் முற்றும் துழாவிப்  பார்த்த போதுதான்   ஒரு சாக்குப்பை அவரின் கண்ணில் பட்டது. அதிலிருந்தே பூனைக்குட்டியின்  மெலிதான குரல் போல ஒலி வந்துகொண்டிருந்தது. அவருக்கு எரிச்சலாக வந்தது.
 

Hi Jeya
“”வேற இடம் இல்லையெண்டு பூனைக்குட்டிகளை எங்கட றோட்டில போட்டிருக்கிறாங்கள்” என்று சற்று உரத்து சொல்லியவாறே அகன்றார். அவருடைய வார்த்தைகள் வீட்டின் வாசலுக்கு வந்துகொண்டிருந்த பெண்ணொருவரின் காதுகளிலும் விழுந்தது. மெதுவாக எட்டிப்பார்த்தார். தூரத்தே சாக்கு மூடை ஒன்று அசைந்து கொண்டி ருந்தது.  அது பூனைக்குட்டியாய் இருக்க முடியாது என்று அவருக்கு சந்தேகம் தோன்றியது. சந்தேகம் வலுக்கவே   என்னவோ ஏதோவோ என்று பதறியவாறு ஓடிச்சென்று பார்த்தார். உதிரமும் கண்ணீரும் மழைநீரும் சேர்ந்து சாக்குமுழுதையும் ஈரமாக்கியிருந்தன. ஆனாலும் துளிகூட நெஞ்சில் ஈரமில்லாமல் ஒரு சிசுவை சாக்கில் சுற்றி யாரோ வீசி விட்டுப் போயிருக்கிறார்கள். தொப்புள் கொடிகூட அறுக்கப்படாமல் ஒரு அவசரத்தனத்தோடு அந்தச் சிசு எறியப்பட்டிருந்தது. நடந்தது எதுவுமே அறியமுடியாமல்  பிரசவித்த மறுநொடியே பெற்றவளால் தூக்கி வீசப்பட்ட அவலம் புரியாமல்  தாயின் அணைப்பைத் தேடி பூமியில் பிறந்து ஒரு சில மணித்துளிகளேயான அந்த சிசு அழுதுகொண்டிருந்தது. 
குழந்தையைக் கண்டெடுத்த அந்தப் பெண் துணைக்கு அயலவர்களை அழைத்தார். “ஒரு குழந்தையை ஆரோ போட்டுட்டுப் போட்டாங்களாம்’ என்ற தகவல் காட்டுத்தீயாய் அடுத்த நொடியே எங்கும் பரவியது. கூட்டம் குழுமியது.  அனுபவமுள்ளவர்களால் குழந்தையின் தொப்புள் கொடி அகற்றப்பட்டு, பிறந்த மேனியாக இருந்த  அந்த ஆண் குழந்தைக்கு சின்னதாக சட்டையும் அணிவிக்கப்பட்டது. குழந்தையைக் கண்டெடுத்த பெண்ணும் அண்மையிலேயே குழந்தை ஒன்றைப் பிரசவித்திருந்ததால்  அநாதரவாகக் கிடந்த சிசுவுக்கு இரவல் தாய்ப்பாலும் கிடைத்தது. மகாபாரதத்திலே குந்தியால் கர்ணன்  இதே போன்று கைவிடப்பட்ட போது குந்தியின் சேலையால் சுற்றியே ஆற்றில்  பெட்டியினுள் வைத்து விடப்பட்டான். தனது தாய் குந்தி என்பதை கர்ணனுக்கு கடைசியில் அந்தச் சேலை தான் காட்டிக்கொடுத்தது. அதே போன்று இந்தக் குழந்தை வீசப்பட்டுக் கிடந்த சாக்கிலும் ஒரு “பெற்சீற்’றும், தாயின் “கவுண்’ ஒன்றும் இருந்தன. வீதியெங்கும் நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு அலைகின்ற நாய்கள் போன்ற பிராணிகளால் எவ்வித ஆபத்தும் நேராமல் குழந்தை தப்பியது அதிசயம் தான். கிராமசேவகர் ஊடாக பொலிஸாருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டது. இப்போது அந்தக் குழந்தை யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப் பட்டு நலமாக உள்ளது.  ஆனாலும் இன்னமும் தாயைத் தேடியோ  அந்தக் குழந்தை அலைவதையும், அழுவதையும் நிறுத்தவேயில்லை. 
 கடந்தவாரம் கொக்குவில் சம்பியன் லேனில் நிகழ்ந்த சம்பவமே இது. இது தவிர இந்த ஒரு வாரத்தில் மட்டும் திருகோணமலை, மட்டக்களப்பு, பசறை, போன்ற இடங்களிலும் இதே பாணியில் குழந்தைகள் கைவிடப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் பசறை என்ற இடத்தில் தனது குழந்தையை தூக்கி வீசிவிட்டுச் சென்ற தாயை பொலிஸார் கண்டுபிடித் திருக்கிறார்கள். மற்றைய இடங்களில் எல்லாம் இந்தக் குழந்தைகள் இன்னமும் தாய்மாரின் மடியைத் தேடியபடியே உள்ளன. 

Hi Jeya
யாழ்ப்பாணத் தில் பொதுவா கவே ஒருவ னுக்கு ஒருத்தி என்ற கலாசாரம் நீண்டகாலமாக எழுதப்படாத விதியாகப் பேணப்பட்டு வருகிறது. ஒருவகையில்  பல சமூகச் சீரழிவுகள் இல்லாமல் போவதற்கும், எயிட்ஸ் முதலான பாலியல் சார் நோய்களின் தாக்கம் மிகக் குறைந்தளவில் இருப்பதற்கும்  இத்தகைய பண்பே காரணமாக உள்ளது. யாழ்ப்பாணத்தவர்களின்   குறிப்பாக பெண்களின்  நன்னடத்தை பற்றி அனைவருமே சிலாகித்துச் சொல்வதுண்டு.  ரஜினிகாந்த் நடித்த “சிவாஜி’ படத்தில் ஒரு காட்சி வருகிறது. தமிழ்ப்பண்பாடுடைய  பெண்ணைத்தான் திருமணம் செய்வேன் என்று ரஜினிகாந்த் ஒற்றைக்காலில் நிற்க அவரது மாமனான விவேக் அத்தகைய கலாசாரமுள்ள பெண்ணைத் தேடி ஊரெல்லாம் அலைந்துவிட்டு கடைசியாக  “”தமிழ்ப் பண்பாடுள்ள பெண் தேவையென்றால் இனி யாழ்ப்பாணத்துக்குத்தான் செல்ல வேண்டும்” என்று கூறுவார். அந்தளவு தூரம் தமிழ்ப் பெண்கள் என்றாலே அது யாழ்ப்பாணத்துப் பெண்கள் தான் என்று அடையாளப்படுத்தப்படும் அளவுக்கு பண்பாட்டோடு ஊறித்திளைத்தவர்கள். (ஒருசிலர் மிக மோசமான ஆணாதிக்கத்துக்குள் யாழ்ப்பாணத்துப் பெண்கள் சிக்குண்டிருப்பதாகவும் இத்தகைய ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டை விமர்சிக்கவும் செய்கிறார்கள்) 
யாழ்ப்பாணத்து இளம் சந்ததியினரிடையே இத்தகைய நீண்டகால மரபு செல்லாக்காசாகி வருவதையே குழந்தைகள் அநாமதேயமாக கைவிடப்படும் சம்பவங்கள் உணர்த்துகின்றன. போர், அது சார்ந்து உருவான புறச்சூழல் என்பனவெல்லாம் கலாசாரச் சீரழிவுகளை ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. ஆனால் அவையெல்லாம் விலகியவுடன் மிக மோசமான சூழலுக்குள் எமது இளையவர்கள் பிரவேசிக்கத் தொடங்கிவிட்டார்கள். வீட்டில் இருந்து நீங்கள் வீதிக்கு வந்தால், வீதியில் பயணிப்பவர்களில் 80%மானோர் காதுகளில் “ஹான்போனை’ பொருத்திய படி தம்பாட்டுக்குச் சிரித்துக் கதைத்தபடி சென்று கொண்டிருப்பார்கள். இவர்களில் அனேகமானோர் இளையோர். அவர்களது இத்தகைய வீதியோர நடமாடும் செல்போன் உரையாடலை  கொஞ்சம் உற்றுக் கேட்டால் நிச்சயம் யாரோ ஒரு எதிர்ப்பாலரோடுதான் அவர்கள் கொஞ்சிக் குலாவிக்கொண்டிருப்பதை அறிய முடிகிறது.  இத்தகைய “ரெடிமெட்’ காதல்களின் பெறுபேறுகளே கடைசியில் கைவிடப்பட்ட குழந்தைகளாக மாறுகின்றன. வெறுமனே பாலினக் கவர்ச்சியில் மயங்கித் தவறான பாதையில் பயணிக்கும் இளையவர்கள் தமக்குப் பின்னே நீண்டு கிடக்கும் பெரும் பாதையைக் கவனிக்க மறந்துவிடுகிறார்கள். இதுவே அவர்களது காதலுக்கு முற்றுப்புள்ளியை வைத்துவிடுகிறது. அனேகமாக  “ரெடிமேட்’காதல் தந்த பரிசுகளைப் பெண்களே சுமக்க வேண்டியதாகி விடுகின்றது. அவர்களும் ஏதோ ஒரு வழியில் ஊருக்குத் தெரியாமல் உண்மைகளை மறைத்து, இறுதியில் பெற்றெடுத்த சில நொடிகளிலேயே தமது பிள்ளைகளைத் தூர உள்ள இடங்களில் வீசி விட்டு வந்துவிடுகிறார்கள். 
கைத்தொலைபேசிப் பாவனை மட்டுமல்லாது குடாநாடெங்கும் மலிந்து போய்விட்ட உல்லாச விடுதிகளின் பெருக்கம், ஆபாசப் படங்களின் அதிகரிப்பு, தவறான பாதைக்கு வழிகாட்டும் இணையத் தளங்களின் உள்நுழைவு, போதைப் பொருள்கள் பாவனை போன்றவையெல்லாம் இத்தகைய மோசமான நிலைக்கு நமது இளையவர்களைக் கைபிடித்து அழைத்துச் செல்கின்றன. அண்மையில் யாழ்ப்பாணத்தில் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்ட நல்லூர் ஆலயத்திருவிழாவில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருளான “பாவுள்’ என்னும் பொருள் அடங்கிய பீடாவை பகிரங்கமாக விற்பனை செய்ததைக் காணமுடிந்தது. இதனை எல்லோருமே கண்ணுற்றாலும் எவருமே தடைசெய்யவோ, கட்டுப்படுத்தவோ முன்வரவில்லை. கண்முன்னே நடக்கும் அநீதிகளைத் தட்டிக் கேட்கும் முதுகெலும்பு நம்மில் பலருக்கும் காணாமல் போய் இருப்பதும் இத்தகைய சமூக சீரழிவுகளின் பெருக்கத்திற்கு பெரிதும் காரணம். 
யாழ்.பஸ் நிலையப் பகுதி தவறான நடத்தைகளுக்கான மையப்புள்ளியாக மாறிவருவதாக சமூக அக்கறையுள்ளவர்கள் பலரும் சுட்டிக்காட்டிவருகின்றார்கள். தனியார் கல்வி நிலையத்துக்குச் செல்வதாகவோ அல்லது வேறேதோ முக்கியமான அலுவலுக்காக செல்வதாகவோ கூறி வீட்டிலிருந்து “சிங்கிளாகப்’ புறப்படும் இளசுகள் பஸ்நிலையத்தில் சோடிகளாக மாறி எங்கெங்கோவெல்லாம் செல்வதாக தகவல்கள் வந்தவண்ணமே உள்ளன. (யாழ்ப்பாணத்தில் உள்ள சில திரையரங்குகளில் காதலர்களுக்கான தனிப்பட்ட அறைகளும் இருப்பதாகக் கூறப்படுகின்றது.) கணநேரத் தவறுகள் காரணமாக ஒரு குழந்தைக்கு தாயாகி பின்னர் பிரசவமானவுடனேயே அவற்றைக் கைகழுவிவிடுவதற்கு சில நியாயப்பாடுகளை அவர்கள் தமக்குத்தாமே சொல்லக்கூடும். குடும்பக் கௌரவம், சகோதரர்களின் சமூக அந்தஸ்து நிலை, எதிர்காலம் பற்றிய தொலைநோக்கு இவற்றை தக்கவைத்துக் கொள்ளவே தவறின் அடையாளமான சிசுக்களை உதறிவிடுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும் உண்மையில் தமது தவறுகளை மறைப்பதற்காக, தமது எதிர்காலத்தின் இருப்புக்காக எதுவுமே அறியாத மனித உயிர் ஒன்றோடு விளையாடுவது உலகிலேயே மிகப்பெரிய பாவகாரியம். இவ்வாறு கைவிடப்படும் குழந்தைகளில் அனேகமாவை இறந்த நிலையிலேயே மீட்கப்படுகின்றன. கொக்குவில் சம்பவம் போல தெய்வாதீனமாகத் தப்புகின்ற குழந்தைகள் கூட மனக் குறைகளோடே வளரவேண்டியுள்ளது. இத்தகைய மனக்குறைகள் எதிர்காலத்தில் இந்த சமூகத்தின் மீது கோபம்கொள்ளக்கூடிய மனிதன் ஒருவனை உருவாக்கிவிடும். அது சமூகச் சீரழிவுகள் இன்னும் பெருக புதிய வழியைத் திறந்துவிடுவதாகவே இருக்கும். 
சமூகத்தின் இருப்பினைக் கறையான்கள் போல் அரித்துச் செல்லும் எதிர்மறையான பண்புகளை, அழிவு நிலைக்கு இட்டுச் செல்லும் புதிய நிகழ்ச்சித் திட்டங்களை இனங்கண்டு அவற்றைத் தடுப்பதற்கு எவருமே தயாராயில்லை. எனினும் அந்தத் திராணியை ஒவ்வொருவருமே வரவழைத்துக்கொள்ளவேண்டும். குறைந்தபட்சம் பெற்றோர் பருவநிலையை அடைந்து விட்ட தத்தம் பிள்ளைகள் மீது அக்கறையோடு ஒருகண் வைத்திருக்க வேண்டும். அவர்கள் தவறுவிடும்போதாவது மாத்திரம் தட்டிக்கேட்டு சரியான வழிக்கு திசைதிருப்ப வேண்டும். ஒவ்வொரு பெற்றோருமே அவ்வாறு செய்தால் எந்தவொரு இளையதலைமுறையும் எப்படி தவறுசெய்யமுடியும்?* 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux