மட்டக்களப்பில் சில தினங்களுக்கு முன்னர் நடந்த பயங்கர சம்பவம் இது. படுவான்கரை பகுதியான போரதீவுப்பற்று பிரதேசத்தின் முனைத்தீவு எனும் கிராமத்தைப் பூர்வீகமாக் கொண்ட அவர்கள், மட்டுநகரில் வாழ்ந்து வந்தனர்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரசடி பார் வீதியில் செல்வராஜா குடும்பத்தின் வீடு அமைந்துள்ளது. சம்பவ தினமான திங்கட்கிழமை (20.12.221) அவரது வீட்டில் வைத்தே செல்வராசாவின் மனைவி தயாவதி மிகவும் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
தயாவதியின் வீட்டிற்கு வழக்கமாக அவ்வப்போது வந்து வீட்டு வேலைகளைச் செய்து விட்டு அதற்குரிய பணத்தைப் பெற்றுச் செல்லும் பெண் ஒருவர் அன்றைய தினம் தனது தந்தையாருடன் தயாவதியின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
முதல் நாள் இரவு ஆலயத்தில் திருவெம்பாவைப் பூஜையில் கலந்து கொண்டு விட்டு வந்த தயாவதியின் கணவன் செல்வராசா வீட்டின் மூன்றாம் மாடியில் நித்திரைக்குச் சென்றுள்ளார். அவர்களது மகள் வீட்டின் இரண்டாம் மாடியில் படித்துக் கொண்டிருந்துள்ளார். மகன் வகுப்புக்குச் சென்றுள்ளார்.
வீட்டின் கீழ்ப் பகுதியில் சமையல் வேலை பார்த்துக் கொண்டிருந்த தயாவதியைக் குறிவைத்திருந்த வழக்கமாக வீட்டுக்கு வந்திருந்த வேலைக்காரி தயாவதியை கழுத்திலும், உடம்பின் பல இடங்களிலும் மிகவும் கொடூரமாக கத்தியால் வெட்டி விட்டு தயாவதி அணிந்திருந்த தங்க நகைகளை எடுத்துக் கொண்டார். அதன் பின்னர் குறித்த பெண்ணும், அவருடைய தந்தையும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள்.
தந்தையும், மகளும் வீதியில் இரத்தக் கறையுடன் செல்வதை அவதானித்த எதிரே நின்ற முச்சக்கர வண்டி சாரதி உள்ளிட்டவர்கள், இருவரையும் துரத்திச் சென்று சோதனை செய்த போது இரத்தம் தோய்ந்த நகைகளையும் தோடுகளுடன் இரு காதுகளையும் அப்பெண் பையொன்றில் கொண்டு சென்றதைக் கண்டுபிடித்தனர். இருவரையும் பிடித்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவ்வாறு கொடூரமாக கொலை செய்யப்பட்ட 50 வயதுடைய தயாவதியின் சடலம் மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் ஏ.சி.றிஸ்வானின் விசாரணையை தொடர்ந்து பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
வீட்டுக்கு வந்த தந்தையும் மகளும், குறித்த வீட்டில் வேலைகளை செய்து விட்டு மதிய உணவு உட்கொண்டு இருந்துள்ளனர். அப்போது தந்தை வீட்டுக்கு வெளியில் வந்துள்ளார். அப்போது “எங்கள் வீட்டில் தேங்காய் இல்லை அக்கா. தேங்காய் இருந்தால் தாருங்கள்” என அப்பெண் வீட்டின் உரிமையாளரான தயாவதியிடம் கேட்டுள்ளார்.
தயாவதி அவ்வேளையில் தேங்காய் எடுக்கச் சென்ற போது திடீரென குறித்த பெண் அவர் கொண்டு சென்ற பையிலிருந்த கத்தியை எடுத்து வீட்டின் உரிமையாளரான தயாவதியின் மீது கழுத்தின் பின்பகுதியில் சரமாரியாக வெட்டி விட்டு, தயாவதி அணிந்திருந்த தாலிக்கொடியை அபகரித்துள்ளார். காதுகளில் உள்ள தோடுகளைக் கழற்ற முடியாத நிலையில் காதுகளையும் வெட்டியுள்ளதோடு, காப்பு அணிந்திருந்த கை ஒன்றை தேங்காய் மீது வைத்து வெட்டி எடுத்துள்ளார். அவர் இரத்தக் கறையுடன் வெளியில் வந்துள்ளார். இரத்தக்கறையுடன் மகள் வருவதைக் கண்ட தந்தை, “என்ன செய்துவிட்டு வருகின்றாய்” என கேட்டுள்ளார். பீதியில் இருவரும் நடந்து சென்றுள்ளதாகத் தெரியவருகின்றது.
அதன் பின்னரே இருவரும் அகப்பட்டனர். சம்பவம் அறிந்த மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மற்றும் புலனாய்வுத்துறையினர் உடன் ஸ்தலத்திற்கு வரைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்ட தடயவியல் பிரிவு பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இந்த கோரச் சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்தையே கதிகலங்கச் செய்துள்ளது. இதன் காரணமாக அன்றைய தினம் குறித்த பகுதியில் பெருமளவு மக்கள் ஒன்றுகூடியதன் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தையும் காண முடிந்தது.
மட்டக்களப்பு கருவேப்பங்கேணியைச் சொந்த இடமாகவும், வாழைச்சேனை பகுதியில் திருமணம் செய்தவருமான 29 வயதுடைய பெண் தனது தந்தையுடன் சென்றே இந்தக் கொலையை மிகவும் கொடூரமான முறையில் மேற்கொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவருகின்றது.
சம்பவ தினத்தன்று பகல் வேளையில் மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள கடை ஒன்றிலேயே கத்தி ஒன்றை வாங்கியதாகவும், கத்தி வாங்கும்போது “எதற்கு கத்தி வாங்குகின்றாய்” என தந்தை கேட்டுள்ளார் எனவும் விசாரணையில் தெரியவந்தது.
“வீட்டிற்குத் தேவை” என மகள் கூறியுள்ளார். எனவே ஏற்கனவே திட்டமிட்டு இந்தக் கொலையைச் செய்துள்ளதாக தெரியவருகின்றது. கைது செய்யப்பட்டுள்ள பெண் தொடர்பில் பல குற்றச்சாட்டுக்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த பெண் அண்மையில் வெளிநாடொன்றில் தொழில் புரிந்து விட்டு வந்தவர் எனவும், போதைவஸ்துக்கு அடிமையானவர் எனவும், இன்னும் பல சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தானும் தனது குடும்பமும், பிள்ளைகளின் படிப்பும், இறைபக்தியுடன் இணைந்ததாக சமூக சேவையும் என வாழ்ந்து வந்தவர் செல்வராஜா. தனது மனைவிக்கு திடீரென இவ்வாறு ஒரு கொடூரம் நடக்கும் என அவர் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. ஒரு மகன், ஒரு மகள். இருவரும்
மேற்படிப்பு படிக்கின்றார்கள். 4 பேரைக் கொண்ட சிறியதொரு குடும்பம் அது. ஆடம்பரமின்றி எளிமையாக அவர்கள் வாழ்ந்து வந்த நிலையில், குடும்பத் தலைவி தயாவதி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்தார்.