
எதிர்ப்பு
மஹாராஷ்டிராவின் அவுரங்காபாதில் உள்ள வைஜாபூர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் கீர்த்தி, 19. இவர், வேற்று ஜாதியைச் சேர்ந்த இளைஞரை காதலித்தார். இதற்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, ஜூனில் வீட்டைவிட்டு வெளியேறிய கீர்த்தி, காதலரை திருமணம் செய்தார். கணவருடன் வசித்து வந்த கீர்த்தி கர்ப்பமானார்.
தகவலறிந்த கீர்த்தியின் தாய் சமீபத்தில் அவரது வீட்டுக்கு வந்தார். தன் காதல் திருமணத்தை தாய் ஏற்றுக் கொண்டதாக கருதி கீர்த்தி மகிழ்ச்சி அடைந்தார். இந்நிலையில், 18 வயது கூட ஆகாத கீர்த்தியின் சகோதரனுடன் அவரது தாய் நேற்று முன்தினம் மீண்டும் வீட்டுக்கு வந்தார். கீர்த்தியின் கணவருக்கு உடல்நிலை சரி இல்லாததால் அவர் அறையில் உறங்கி கொண்டு இருந்தார்.தாய் மற்றும் சகோதரனை பார்த்து மகிழ்ச்சி அடைந்த கீர்த்தி, அவர்களுக்கு தேநீர் தயார் செய்வதற்காக சமையல் அறைக்குள் சென்றார்.
அதிர்ச்சி
அப்போது கீர்த்தியின் சகோதரன் அவரை பின்னால் இருந்து தாக்கினார். கீர்த்தியின் தாய் கால்களை பிடித்துக் கொள்ள, மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, கீர்த்தியின் கழுத்தை துடிக்க துடிக்க அவரது சகோதரன் கொடூரமாக வெட்டினார். சத்தம் கேட்டு எழுந்து வந்த கீர்த்தியின் கணவரையும் அவர்கள் கொல்ல முயன்றதை அடுத்து, அவர் தப்பி ஓடினார்.
துண்டான கீர்த்தியின் தலையை வீட்டுக்கு வெளியே எடுத்து வந்து அனைவரிடமும் காட்டி உள்ளனர். மகளின் தலையை கையில் ஏந்தியபடி தாயும், மகனும் ‘செல்பி’ எடுத்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சியுடன் தெரிவித்தனர். தாயும், மகனும் அருகில் இருந்த போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.