காலத்தால் மறக்கப்பட்டு வரும்,நல்லூர் சங்கிலியன் மந்திரிமனை….படித்துப்பாருங்கள்!

காலத்தால் மறக்கப்பட்டு வரும்,நல்லூர் சங்கிலியன் மந்திரிமனை….படித்துப்பாருங்கள்!

பாரம்பரிய வரலாறு என்பது பண்டைய காலந்தொட்டு யாழ்ப்பாணத்திலிருந்து வந்தாலும் வரலாற்றில் அதன் பெருமை தமிழரசர்களின் காலத்தோடு சிறப்படைவதைக் காணலாம். 13ஆம் நூற்றாண்டு தொடக்கம் அந்நியராட்சி முழுமையாகக் கால்பதிக்கும் வரையில் யாழ்ப்பாணத்தின் முக்கிய நகராக நல்லூரே விளங்கியதெனலாம்.

வரலாற்றுப் பெருமை வாய்ந்த,காலத்தால் போற்றப்பட்ட வரலாற்றுச் சின்னங்களையும் தமிழர் பண்பாடுகளையும் தன்னகத்தே கொண்டு இந் நகரம் விளங்குகிறது.

அரசியல் அழுத்தங்களாலும் நாகரீக வளர்ச்சியின் அபரிமிதமான மாற்றங்களாலும் தமிழர் கலை, பண்பாடு இன்று கேள்விக்குறியாக்கப்பட்டு விட்டது. இது யாருடைய தவறு,யார் இதற்குப் பொறுப்பு என்பதெல்லாம் ஒருபுறம் இருக்க, நாம் அதுபற்றிய உணர்வோடு இருக்கிறோமா என்றால் நம்மில் பலருக்கு அது இல்லை என்பதே உரக்கச் சொல்ல வேண்டிய உண்மையாகிறது.

அவ்வாறே, இற்றைக்கு 350 ஆண்டுகளுக்கு முன் கைவிடப்பட்ட நல்லூர் இராசதானியின் தடங்கள் பலவும் இன்றும் முழுமையாகப் பாதுகாக்கப்படவில்லை என்பது கவலைக்குரியது.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியின் மேற்குப் புறத்தில் சட்டநாதர் கோயில் பகுதியில் கம்பீரமான முகப்புத் தோற்றத்தையும் வேலைப்பாடுகளையும் கொண்டு விளங்குகின்ற சங்கிலியன் மந்திரிமனை, சங்கிலியன் தோப்பு, யமுனா ஏரி ஆகியவையும் அமைந்துள்ளன. இதில், சங்கிலியனுடைய மந்திரிமனை எனக் கருதப்படுகின்ற கட்டடத் தொகுதி இன்று கவனிப்பாரற்று, பாழடைந்து, இடிந்த நிலையில் வெறும் கட்டட எச்சமாகக் காணப்படுகிறது.

இதன் கட்டட அமைப்பும் சிற்ப வேலைப்பாடுகளும் நூதனமான கலை மரபை சுட்டிக்காட்டுவதுடன், அதில் சுதேச கலை மரபுகள் நிறைந்துள்ளதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. தற்போது கட்டடத் தொகுதிகள் இடிந்த நிலையிலும், சில பகுதிகள் ஒல்லாந்தர் காலத்தில் மாற்றியமைக்கப்பட்ட நிலையிலும் காணப்படுகின்றன.

இங்கிருக்கும் பழைமையான கிணற்றிற்கும் யாழ்ப்பாண மன்னர் காலய முனா ஏரிக்கும் இடையே சுரங்கப்பாதை இருந்ததாகவும் சிலகாலங்களில் அதன் காரணமாக இக் கிணற்றில் அசாதாரண நீர் பெருக்கு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது இச் சுரங்கப்பாதை அடைக்கப்பட்டுள்ளது.

இம் மனையின் பின்புறத்தில் நிலவறையொன்றும் அதன்மேல் மூடுசாந்தினால் அமைக்கப்பட்ட மண்டபமும் இருந்ததாகத் தெரிகின்றது. தற்போது இவை இடிந்த நிலையில் மூடுண்டு காணப்படுகின்றன.

இவ்விடத்திலிருந்து வீட்டுக்குச் செல்லும் சுரங்கவாசல் ஒன்று பிற்காலத்தில் அடைக்கப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. இதேபோல், வீட்டுக்குள் இருந்த நிலவறையும் அதற்குள் இறங்கிச் செல்ல இருந்த படிக்கட்டுகளும் கூட பிற்காலத்தில் அடைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்தக் கட்டடத் தொகுதிகள் யாழ்ப்பாண மன்னர் காலத்தில் கட்டப்பட்டவை என்பது தொல்லியலாளர்கள் பலரின் உறுதியான கருத்தாகும்.

இத்தகைய சிறப்பும் தொன்மையும் வாய்ந்த சங்கிலியனுடைய மந்திரிமனையானது இன்று கவனிப்பாரின்றி நிர்க்கதியாக விடப்பட்டுள்ளது.

நம் பாரம்பரியத்தையும் வரலாற்றையும் பாதுகாக்க வேண்டிய இளைய சமுதாயமே, மது அருந்திக் குதூகலிக்கும் இடமாகவும், சட்டத்திற்குப் புறம்பானதும் பண்பாட்டுக்கு ஒவ்வாத செயல் களை மேற்கொள்ளும் இடமாகவும் இக் கட்டடத்தை மாற்றியுள்ளனர்.

சமீபகாலமாக இக் கட்டடத்தின் மீது உரிமை கோரி வழக்குகள் சில தொடரப்பட்டுள்ளதாக அதன் அருகே வசிக்கும் பலர் குறிப்பிடுகின்றனர்.

எவ்வாறாயினும், யாழ்ப்பாண மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் பலருக்கும், ஏன் மந்திரிமனையை அண்டிய பகுதியில் வசிக்கும் மக்களுக்குக் கூட அதன் வரலாறு பற்றித் தெரியாமலிருப்பது வருந்தத்தக்கதாகும்.

ம. லர்ஷிக்கா
இரண்டாம் வருடம்
ஊடகக்கற்கைகள் துறை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux