பொன்னாலைக் காட்டில் கசிப்பு குகை முற்றுகை-விபரங்கள் இணைப்பு!

பொன்னாலைக் காட்டில் கசிப்பு குகை முற்றுகை-விபரங்கள் இணைப்பு!


ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நேரத்தில், பொன்னாலை காட்டில் கசிப்பு குகை ஒன்று இன்று (03) காலை முற்றுகையிடப்பட்டது.
பிரதேச இளைஞர்களும் வட்டுக்கோட்டை பொலிஸாரும் இணைந்து இந்த முற்றுகை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதன்போது, கசிப்பு காய்ச்சிய நபர்கள் தப்பியோடிய நிலையில் அவர்களால் காய்ச்சப்பட்ட கசிப்பு, எஞ்சிய கோடா மற்றும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலதிகமாக வெற்று பரல்களும் அங்கிருந்து மீட்கப்பட்டன.
அத்தோடு, பொன்னாலைக்கு வெளியே இருந்து வந்தவர்களே இங்கு கசிப்பு உற்பத்தில் ஈடுபட்டனர். முற்றுகையின்போது குறித்த நபர்கள் சிறு பற்றைகள் வழியாக தப்பிச்சென்ற போதிலும் பொலிஸார் அவர்களை அடையாளப்படுத்தியுள்ளனர்.
மேற்படி பிரதேசத்தில் இயற்கையாக உள்ள தாழ்வான இடத்தில் நீர் தேங்கி நின்றமையை சாதகமாக பயன்படுத்திய கசிப்பு உற்பத்தியாளர்கள் அங்கு பல தடவைகள் கசிப்பு காய்ச்சும் செயற்பாட்டை மேற்கொண்டிருந்தமை தெரியவந்துள்ளது.
இதேவேளை, சுழிபுரம் குடாக்கனை பிரதேசத்தில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக கசிப்பு விற்பனை இடம்பெற்று வருகின்ற போதிலும் பொலிஸாரால் இதுவரை அதை முற்றாக கட்டுப்படுத்த முடியவில்லை.
குற்றவாளிகள் அவ்வப்போது கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்படுவதும் குற்றப்பணம் செலுத்திய பின்னர் அவர்கள் வெளியே வந்து மீண்டும் கசிப்பு உற்பத்தி, விற்பனையை ஆரம்பிப்பதும் தொடர்ந்தவண்ணம் உள்ளது.
இதற்கமைய, மேற்படி பிரதேசத்தை சேர்ந்தவர்களே பொன்னாலைக் காட்டில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸாரால் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux