“விடைபெறுகின்றார் எங்கள் நடேசண்ணன்”-அந்திமாலை இயக்குனர் லிங்கதாசனின் கண்ணீர்ப் பதிவு!

“விடைபெறுகின்றார் எங்கள் நடேசண்ணன்”-அந்திமாலை இயக்குனர் லிங்கதாசனின் கண்ணீர்ப் பதிவு!

நடேசண்ணன்’ இவ்வாறுதான் நாங்கள் சிறுவர்களாக இருந்த காலம் தொட்டு அவரை அழைத்தோம். கிராமங்களில் ஒரு வழக்கம் இருக்கிறது நமது பெற்றோர் ஊரவர்கள் சிலரை எவ்வாறு அழைக்கிறார்களோ அந்த அடைமொழி கொண்டே சம்பந்தப் பட்டவரை நாமும் அழைப்போம். அது வயது வித்தியாசம் ஒரு தலைமுறை இடைவெளி இருந்தாலும் கூட.

அமரர்.நடேசபிள்ளை அவர்களை நான் சுமார் ஆறு வயது சிறுவனாக இருந்த காலம் தொட்டு அறிவேன். அல்லைப்பிட்டி இனிச்ச புளியடி முருகன் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை இரவுப் பூசை மிகவும் எளிமையாக நடைபெற்ற 1970 களில் இந்த மனிதர் அந்த ஆலயத்தில் நடு நாயகமாக நின்றிருப்பதை, பூசை முடிவில் பிரசாதத்தை சிறுவர்களாகிய எமக்குப் பகிர்ந்தளிப்பதைப் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் இவர்தான் அந்தக் கோயிலின் ‘தர்மகத்தா’ என்பது எனக்கு தெரியாது.

பழகுவதற்கு எளிமையான மனிதர். எல்லோருடனும் பண்பாக, சமத்துவமாக பழகக் கூடியவர். தான் அந்த ஊரின் ‘உடையாரின் மகன்’ என்ற தற்பெருமையோ, அல்லைப்பிட்டியில் வாழ்ந்த விரல் விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்களில் ஒருவர் என்ற கர்வமோ சிறிதும் இல்லாதவர்.

அமரர்களாகி விட்ட எனது பேரனும், பேர்த்தியும் (அம்மப்பா & அம்மம்மா) காலம் சென்ற செல்லத்துரை உடையார் குடும்பத்தின் அயலவர்களாக ஊரின் மத்தியில் சுமார் 30 வருடங்கள் வாழ்ந்த காலத்தில் உடையார் குடும்பத்தினருடன் ‘அயலவர்கள்’ என்ற உறவையும் தாண்டி உறவினர்கள் போல ஒரு நெருக்கமான உறவைக் கொண்டிருந்தனர் என்று எனது பேர்த்தியார் சொல்லக் கேட்டிருக்கிறேன். அந்த ‘நேசமான உறவு’ பிற்காலத்தில் எனது பேரனும் பேர்த்தியும் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அல்லைப்பிட்டிச் சந்திக்கருகில் குடியேறிய பின்னரும் அமரர்.நடேசபிள்ளை குடும்பம் உட்பட உடையாரின் பிள்ளைகள் அனைவரோடும் தொடர்ந்ததைக் கண்கூடாகக் கண்டிருக்கிறேன்.

தொழில் துறை என்று எடுத்துக் கொண்டால் இவர் தனது வணிக நிறுவனங்களை எங்கள் தீவகத்தின் ‘புங்குடுதீவு’ தொடக்கம் கிழக்கிலங்கையின் ‘மட்டக்களப்பு’ நகரம் வரை விரிவு படுத்தி இருந்தார். தன்னை யாரும் ‘முதலாளி! என்றோ ‘Boss’ என்றோ அழைப்பதை அவர் விரும்பியதில்லை. “என்னப்பா முதலாளி? என்னப்பா தொழிலாளி? எல்லாரும் முதலாளி தான்; எல்லாரும் தொழிலாளி தான்” என்பார். அத்தகைய சமத்துவ எண்ணம் அவருடையது. அவரது வணிக நிறுவனங்களில் அது எந்த ஊரில் அமைந்திருந்தாலும் அங்கு பணி புரிபவர்களில் அரைவாசிப் பேர் அந்த ஊரைச் சேர்ந்தவர்களாகவும், மீதி அரைவாசிப் பேர் அல்லைப்பிட்டிக் கிராமத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருக்குமாறு பார்த்துக் கொண்டார். காரணம் மிக வெளிப்படையானது “எந்த ஊரில் பணம் சம்பாதிக்கிறோமோ அந்த ஊரவனும் பயன்

(வேலைவாய்ப்பு) பெறட்டும்; நம் ஊரவனும்( அல்லைப்பிட்டி) பயன் பெறட்டும் என்ற உயர்ந்த எண்ணம் தான் அது. இவரது பெருந்தன்மைக்கு உதாரணமாக இன்னொன்றையும் கூறலாம் என்று நினைக்கிறன். அவர் தனது வணிக நிறுவனங்களின் கணக்குகளை எழுதுவதற்கு நினைத்திருந்தால் ஒரு கணக்காளரை பணியில் அமர்த்தி இருக்க முடியும் ஆனால் எங்கள் ஊரை சேர்ந்த ஆனால் யாழ்ப்பாணத்தில் பிரபல கல்லூரியில் உயர் வகுப்பில்(A/L) ‘வர்த்தகமும் கணக்கியலும்’ (Commerce & Accountancy) படித்துக் கொண்டிருந்த ஒரு மாணவனை தனது ‘கணக்காளராக’ பணிக்கு அமர்த்தினார். ஊரவர்கள் கேட்டதற்கு அவர் கூறிய காரணம் “ஒரே ஒரு ஆண் பிள்ளையைக் கொண்ட அந்தக் குடும்பத்திற்கு உதவியதாகவும் ஆயிற்று, அந்த இளைஞனின் தன்னம்பிக்கையை, எதிர்காலம் பற்றிய அவனது பிடிப்பை உயர்த்தி விட்டதாகவும் ஆயிற்று; எனக்கும் உள்ளூரிலேயே ஒரு ‘கணக்குப்பிள்ளை’ கிடைத்ததாகவும் ஆயிற்று” இத்தகைய விரிந்த பார்வைக்கு சொந்தக் காரர் தான் அமரர்.செ.நடேசபிள்ளை அவர்கள்.

“ஈதல் இசைபட வாழ்தல் அஃதன்றி ஊதியம் இல்லை உயிர்க்கு” என்ற வள்ளுவரின் வாக்கினை அடியொற்றி வாழ்ந்த அல்லைப்பிட்டி உடையார் அமரர்.செல்லத்துரை அவர்களைப் போலவே அவரது பிள்ளைகளும் குறிப்பாக அமரர்.நடேசபிள்ளை அவர்களும் வாழ்ந்து காட்டி மறைந்தார்கள் என்றால் அது மிகையாகாது. தனது வாழ்நாள் முழுவதும் அறப் பணிகளையும், தான தருமங்களையும் செய்து தனது சந்ததிக்கு புண்ணியத்தை சேர்த்து வைத்து விட்டே அமரர் நடேசபிள்ளை அவர்கள் மறைந்தார். தனது தந்தையார் (அமரர்.செல்லத்துரை உடையார்) மிகச் சிறிய ஆலயமாகத் தன்னிடம் ஒப்படைத்து விட்டுப் போன ‘அல்லைப்பிட்டி இனிச்ச புளியடி முருகன் ஆலயத்தை’ 10 நாட்கள் திருவிழா நடைபெறும், வானளாவிய கோபுரத்தைக் கொண்ட ஒரு ஆலயமாக மாற்றி விட்டு தனக்கும், தன் தந்தைக்கும் பெருமை சேர்த்து விட்டே இறைவனடி சேர்ந்தார் அமரர்.நடேசபிள்ளை அவர்கள். “நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்” என்பார் கவியரசர். தனது வாழ்வில் படிப்படியாக உயர்ந்தும் தனது மண்ணையும் மக்களையும் மறவாத பணிவான உள்ளம் கொண்ட அந்த மகத்தான மனிதனின் மறைவால் அல்லைப்பிட்டி மண் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. அந்த மனிதனின் பெருமையைப் போற்றி வணங்குகிறது. அதில் நானும் என் குடும்பத்தினரும் பங்கு கொள்கிறோம்.

போய் வாருங்கள் நடேஸ் அண்ணா! எங்கள் அல்லைப்பிட்டி மண் மறவாத மனிதர்களின் பெயர்ப் பட்டியலில் உங்கள் பெயரும் இடம்பெற்று இருக்கும். நீங்கள் விண்ணுலகு எய்திய அதே நாளில் உங்கள் பெற்றோர், உடன் பிறந்தார் சகிதம் இறைவன் திருவடி நிழலில் பிறப்பில்லாப் பேரின்பப் பெருவாழ்வு எய்தி இருப்பீர்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. உங்களுக்கு எனது இதய அஞ்சலிகள். உங்கள் இழப்பால் துயருற்று இருக்கும் உங்கள் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நம் ஊரவர்கள் அனைவர்க்கும் அமரர்களாகி விட்ட எனது பேரன், பேர்த்தி( சிவப்பிரகாசம் & தெய்வானை ஆச்சி) சார்பாகவும், என் பெற்றோர், தாய்மாமா மற்றும் சித்திமார் குடும்பத்தினரின் சார்பாகவும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு உங்கள் ஆத்ம சாந்திக்காக இறை பதம் பணிகின்றேன்.

ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி.

ஆழ்ந்த இரங்கலுடன்
இரா.சொ. லிங்கதாசன்
Frederikshavn
டென்மார்க்.

“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” -கவிஞர் வாலி –

“வாழ்வாவது மாயம் – இது மண்ணாவது திண்ணம்
பாழ்போவது பிறவிக்கடல் பசிநோய்செய்த பறிதான்
தாழாதறஞ் செய்ம்மின்தடங் கண்ணான்மல ரோனும்
கீழ்மேலுற நின்றான்திருக் கேதாரமெ னீரே”
-சுந்தர மூர்த்தி நாயனார்-

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux