இலங்கை தாமரை கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது-படங்கள் விபரங்கள் இணைப்பு!

இலங்கை தாமரை கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது-படங்கள் விபரங்கள் இணைப்பு!

லோட்டஸ் டவர்

தெற்காசியாவின் உயரமான கோபுரம் என்ற பெருமையை கொண்ட தாமரை கோபுரம் (லோட்டர்ஸ் டவர்) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்16.09.2019 திங்கட்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டது.

கொழும்பு மத்திய பகுதியில் தாமரை கோபுர நிர்மாணப் பணிகள் 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

சுமார் 7 வருடங்களில் இது தெற்காசியாவிலேயே பெரிய கோபுரமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த தாமரை கோபுர நிர்மாணத்திற்காக 104.5 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஷமால் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

சீனாவினால் 67 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி கிடைக்கப் பெற்றதுடன், எஞ்சிய தொகையை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு செலவிட்டுள்ளது.

356 மீட்டர் உயரமான இந்த கோபுரம், தெற்காசியாவிலேயே பெரிய கோபுரமாக கருதப்படுவதுடன், உலகிலேயே 19ஆவது உயரமான கோபுரமாகவும் திகழ்வதாக ஷமால் ஜயதிலக்க குறிப்பிடுகிறார்.

கொழும்பு – டி.ஆர். விஜேவர்தன மாவத்தையிலுள்ள பேர வாவியை அண்மித்துள்ள இந்த கோபுரத்தின் அடிப்பரப்பு 30,600 சதுரஅடி என அளவிடப்பட்டுள்ளது.

சுமார் 200 வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கான வசதிகளும் இந்த இடத்தில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த கோபுரத்தின் ஊடாக இனிவரும் காலங்களில் இலங்கை தொலைக்காட்சி மற்றும் வானொலிகள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஒளி, ஒலிபரப்பு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கோபுரத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது மாடிகள் தொலைக்காட்சி மற்றும் வானொலி சேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

தாமரை கோபுரத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது மாடிகள் வைபவங்களை நடத்துவதற்கான மண்டபங்களாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இந்த கோபுரத்தின் 6ஆவது மாடியே மிகவும் சிறப்பு இடத்தை பிடிக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லோட்டஸ் டவர்

6வது மாடியில் அமைக்கப்பட்டுள்ள உணவகமானது, சுழலும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. உணவு உட்கொண்ட வண்ணமே கொழும்பு நகர் முழுவதையும் கண்டுகளிக்கும் சந்தர்ப்பம் இதனூடாக மக்களுக்கு கிடைக்கிறது.

7ஆவது மாடியானது, கோபுரத்தின் உயரமான இடத்திற்கு சென்று கொழும்பு நகரின் அழகை கண்டுகளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

7ஆவது மாடிக்கு மேல் அமைக்கப்பட்டுள்ள கோபுரமானது, டிஜிட்டல் தொழில்நுட்பத்தினை வழங்கும் கோபுரமாக உள்ளமை சிறப்பம்சமாகும்.

8 மின்தூக்கிகளை கொண்ட இந்த கோபுரத்தில் நொடிக்கு 7 மீட்டர் உயரும் இலங்கையின் முதலாவது வேகமான மின்தூக்கி பொருத்தப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாக கருதப்படுகின்றது.

தாமரை கோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமையினால், இலங்கையின் தொலைக்காட்சி மற்றும் வானொலி சேவைகள் இனிவரும் காலங்களில் டிஜிட்டல் மயப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux