அழிவின் விளிம்பில் யாழ்.கலாசாரம்!போதைக்கு அடிமையாகும்,இளைய தலைமுறை-படியுங்கள்!

அழிவின் விளிம்பில் யாழ்.கலாசாரம்!போதைக்கு அடிமையாகும்,இளைய தலைமுறை-படியுங்கள்!

மதுவின் பிடியிலிருந்து இளைய சமுதாயத்தை காப்பாற்றுவது யார்?

சர்வோதய அமைப்பு இலங்கையில் பல்வேறு நலன்புரித் திட்டங்களை மேற்கொண்டு வருவதோடு ‘போதையிலிருந்து விடுதலை பெற்ற நாடு’ என்ற அரசாங்கத்தின் போதை ஒழிப்புத் திட்டத்திற்குப் பெரும் பங்களிப்பினை வழங்கி வருகிறது.

குறிப்பாக வறுமை நிலையிலுள்ள மக்கள் மத்தியில் அவர்களது வறுமை நிலையை மேலும் அதிகரிக்கச் செய்யும் மதுபாவனையை இல்லாதொழிப்பதற்கு மேற்படி அமைப்பு பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

இலங்கையில் அதிகளவில் போதைப் பொருளுடன் தொடர்புபட்ட பிரச்சினைகள் வட மாகாணத்தில் அதிகமாக உள்ளதாக காட்டப்படும் தந்திரோபாயங்கள் தொடர்பில் நாம் அறிதல் அவசியம்.

போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் யாழ்ப்பாணம் பெயர்பெற்று விளங்குவதாக ஊடகங்களில் காட்டினாலும் ஏனைய மதுபான வகைகளை விட சட்டவிரோதமான போதைப் பொருள் பாவனையாளர் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்தளவே யாழில் இருப்பதாக புள்ளிவிபரங்கள் சொல்கின்றன.

வெளிநாடுகளில் இருந்து இலகுவாக போதைப் பொருள் கடத்தக் கூடிய தளமாக யாழ்ப்பாணம் விளங்குவதால் அப்பகுதி கடற்கரைகளுக்குக் கடத்தி வரப்படும் போதைப் பொருட்கள் தென்பகுதியை நோக்கி கொண்டு செல்லப்படுகின்றன என்பது உண்மை.

இன்று யாழ்ப்பாணம் பௌதீகம் சார்ந்த கட்டுமானப் பணிகளால் முன்னேறினாலும் தமிழ் மக்களின் தனித்துவமிக்க கலை கலாசாரங்களுக்கு பேர் போன யாழ்ப்பாணத் தமிழரின் கலாசாரம் எனும் கட்டடம் இடிந்து கொண்டே செல்கின்றது என்பது அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய ஓர் உண்மை.

இதற்கான காரணங்களை ஆராய்ந்து பார்க்கையில் போருக்குப் பின்னரான யாழ்ப்பாணக் கலாசாரமும் யாழ்ப்பாணம் தொடர்பாக வெளிவரும் செய்திகளும் தகவல்களும் யாழ்ப்பாணத் தமிழர்களை மாத்திரமன்றி உலகெங்கும் வாழும் தமிழர்களையும் வெட்கித் தலைகுனிய வைக்கின்றன.

இவ்வாறு யாழ்ப்பாணக் கலாசாரம் சீரழிந்து போவதற்கு பிரதான காரணமாக விளங்குவது புதிய காலாசாரம் என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளேயாகும். பாதை திறந்த காலத்தில் முதல் வந்த வியாபார கம்பனி மதுபான கம்பனிதான்.

தமிழ் மக்களின் சொத்துக்கள், சொந்தங்கள், உ​ைடமைகள் உயிர்கள் என்பன போரினால் இழக்கப்பட்டன. போர் நிறைவுற்ற இன்றைய காலத்தில் மதுபான விளம்பரக் கம்பனிகளின் அட்டகாசமும் அவற்றின் ஏமாற்றும் வியாபார தந்திரோபாயங்களும் வடக்கில் தலைவிரித்தாடுவதைக் காண முடிகிறது.

இன்றைய இளைய தலைமுறையினர் மதுவுக்கு அடிமைப்பட்டு, தமது எதிர்கால வாழ்க்கையை திட்டமிட்டுக் கொள்ள முடியாத கோழைகளாக உள்ளனர். நகருக்கு நகர், சந்திக்குச் சந்தி மதுபான விற்பனை நிலையங்கள் காணப்படுகின்றன. வெளிநாட்டவர் வருகை, புதிய நாகரிகம் என்ற பெயரில் இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் கலாசாரத்தை சீரழிப்பதிலேயே பங்களிப்புச் செய்கிறது.

ஆரம்ப காலத்தில் அபிவிருத்தியானது பௌதிக அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டே காணப்பட்டது. ஆனால் தற்காலத்தில் சமூக அபிவிருத்தியே சிறந்த அபிவிருத்தியாக கொள்ளப்படுகிறது. ஒருவன் தான் வாழும் சமூகத்தில் எவ்வாறு சந்தோசமாக வாழ்கின்றான் என்பதை அடிப்படையாக வைத்தே அளவீடுகள் அமைகின்றன.

இவற்றை விட மது அருந்தி விட்டு என்ன தவறு செய்தாலும் அதனை சமூகம் மன்னிக்கும். மதுபோதையில் இருந்தாலும் என்ன நடக்கிறது, என்ன செய்கிறான் என்பது அவனுக்ேக நன்றாகத் தெரியும். ஆனால் அவன் தான் செய்த தவறை மறைப்பதற்காக மதுவில் பழியைப் போடுகின்றான். எனவே ஒருவன் ஒரு தவறு செய்யும் போது அவன் குடித்திருந்தாலும் தெரிந்து கொண்டுதான் தவறு செய்கிறான். எனவே அதற்கான தண்டனையை அவன் அனுபவிக்கத்தான் வேண்டும் என்ற சமூக சூழல் உருவாக வேண்டும்.

மதுவிற்கு கொடுக்கப்படும் போலியான பெறுமதிகளை வழங்காதிருத்தல் வேண்டும்.

என்னென்ன பொய்ச்சாட்டுக்கள் சொல்லிக் கொண்டு மது அருந்துகிறார்கள் என்பதை முதலில் கவனிக்க வேண்டும். அலுப்புக்காகவும், கவலைக்காகவும் மது அருந்துவதாகவும், சந்தோசமாக இருப்பதற்காக மது அருந்துவதாகவும் பலர் கூறுகின்றனர். கௌரவத்திற்காக, நினைத்ததை முடிக்க, கடினமான வேலைகளைச் செய்ய, நட்பை பரிமாறிக் கொள்ள, நிம்மதியான உறக்கத்திற்காக, உறக்கமின்றி விழித்திருக்க, பிரச்சினைகளை மறப்பதற்கு என பல காரணங்களை மது அருந்துபவர்கள் கூறுவதைக் காண முடிகிறது.

இப்படியான போலி காரணிகள் சமூகத்தில் நிலவுவதால்தான் இளையவர்கள் இக்கருத்துகளுக்கு ஏமாந்து மது அருந்த முற்படுகின்றனர். மேற்குறிப்பிட்ட காரணங்கள் எதற்குமே மது ஒரு தீர்வாகாது என்பது விஞ்ஞான ரீதியாக அறிந்த உண்மை. மதுபாவனை இன்னும் புதியவர்களை உருவாக்கிய வண்ணமே உள்ளது. இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பது அணிதிரள்வதும் காலத்தின் தேவையாகும்.

டி. பிறேம்

(மாவட்ட இணைப்பாளர்….சர்வோதயம்)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux