இலங்கையின் வடக்கில் அதிகரிக்கும் குடும்ப விரிசல்கள்!கட்டுரை இணைப்பு!

இலங்கையின் வடக்கில் அதிகரிக்கும் குடும்ப விரிசல்கள்!கட்டுரை இணைப்பு!

போதைக்கு என்ர கணவர் அடிமையானதால், தினமும் எனக்கு சித்திரவதைதான். என்ர உடம்பில காயமில்லாத இடம் ஒன்றுமே இல்ல. சித்திரவதை தாங்க முடியாமல் டிவோஸ் எடுத்தேன்’ என்கிறார் கிளிநொச்சி கனகபுரத்தைச் சேர்ந்த 30 வயதுடைய புவனா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

ஆசிரியராகக் கடமையாற்றும் அவர், கடந்த பதினைந்து வருடங்களாக பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தினம் தினம் சித்திரவதைகளை தாங்கிக் கொண்டிருக்கிறார். ஆனாலும், இனியும் வேதனைகளைத் தாங்க இயலாது நீதிமன்றத்தை நாடியதாக அவர் கூறினார்.

புவனா போன்று பல பெண்கள் தினமும் குடும்ப வன்முறைகளுக்கு முகங்கொடுத்து வருவதுடன், இவற்றை அடிப்படையாகக் கொண்டு நாளாந்தம் விவாகரத்துப் பெறும் நிகழ்வுகளும் அதிகரித்தே வருகின்றன. யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் அண்மைக் காலமாக விவாகரத்து பெறுபவர்களின் எண்ணிக்கை கணிசமான அதிகரிப்பைக் காட்டுகிறது.

குடும்ப வன்முறைகள்,போதைப்பொருளுக்கு அடிமையான கணவன்,வேறுநபர்களுடன் தகாத உறவுகள் போன்ற பல்வேறு காரணங்களால் விவாகரத்துக்கள் அதிகரிப்பதாகக் கூறப்படுகின்றது. யுத்தத்துக்குப் பின்னரான காலப் பகுதியில் அதிகரித்துள்ள இந்த விவகாரம் மற்றும் அதன் பின்னால் இருக்கும் சமூகப் பிணைப்பு என்பவற்றை ஆராய வேண்டியுள்ளது.

இதற்காக வடக்கின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவகாரத்துப் பெற்று குடும்பங்களின் தலைமையைப் பெறுப்பேற்றிருக்கும் பெண்கள் சிலரை சந்தித்து கலந்துரையாடிய போது அவர்கள் கூறிய விடயங்கள் அதிர்ச்சி தருவதாக இருந்தன.

புவனாவும் இவ்வாறு சந்தித்த பெண்களில் ஒருவராவார். விவகாரத்துப் பற்றி மெதுவாகப் பேச்சுக் கொடுக்க ‘திருமண பந்தம் என்ற வார்த்தையை சலிப்புடனேயே’ உச்சரித்தார். தான் அனுபவித்த கொடுமைகளை கண்ணீருடன் கொட்டித் தீர்த்தார்.

“என்ர கல்யாணத்தை அம்மா அப்பா பேசித்தான் செஞ்சு வைச்சாங்க. நான் ஆசிரியராக கடமையாற்றுகிறேன். அவர் ஒரு கூலி வேலை செய்றவர். குடும்பத்தினரின் விருப்பத்தின்படி நான் திருமணத்திற்கு சம்மதித்து அவரை திருமணம் செய்து கொண்டேன். எனது கணவனின் குடும்பத்தாரின் வார்த்தைகளையும்,என்ர புருஷன்ட இயலாமையையும் சித்திரவதைகளையும் வெளியில் சொல்ல முடியாமல் தவித்தேன்” என்றார் புவனா கண்ணீருடன்.

“அடி தாங்க முடியாமல் அவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்தேன். அவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரிப்போம் என்பார்கள். அவர் பொலிஸ் நிலையம் செல்லவில்லை என்றால், அப்படியே விட்டு விடுவார்கள். இவ்வாறுதான் 15 வருடங்கள் நான் சித்திரவதை அனுபவித்தேன்.

எனது தலையில் இருந்து கால் வரைக்கும் அடிகாயங்கள் இருக்கு, என்ர பிள்ளைகளுக்கு அவர்களுடைய அப்பாவைக் கண்டால் பயம். பிள்ளைகளின் எதிர்காலம் பாழாகி விடுமே என்ற பயத்தினாலேயே விவாகரத்தை கோரி நீதிமன்றத்தை நாடினேன். விவாகரத்தைப் பெற்றுக் கொண்டேன்” என்று வேதனையுடனும், மனவிரக்தியுடனும் கூறினார் புவனா.

புவனா போன்று திருமண வாழ்க்கையை இடைநடுவில் முறித்துக் கொண்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வடமாகாணத்தில் மாத்திரம் இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் சுமார் 500 ற்கும் மேற்பட்ட விவாகரத்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த வருடத்தின் இதேகாலப் பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த வருடம் 400 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்ததாக நீதிமன்ற தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

விவாகரத்து வழக்குகளில் அதிகமாக ஆஜராகும் சட்டத்தரணி முடியப்பு ரெமீடியலை சந்தித்துவிவகாரத்து அதிகரித்திருப்பது பற்றி வினவிய போது நாளாந்தம் சந்திக்கும் வழக்குகள் பற்றிய அனுபவத்தை அவரும் பகிர்ந்து கொண்டார்.

தொழில்நுட்ப வளர்ச்சி,சமூகவலைத்தளப் பாவனை என்பன குடும்பங்களையும் ஆட்டங் காணச் செய்கின்றன. குறிப்பாக இளம் தம்பதியினரிடையே மனக்கசப்புக்கள்,சந்தேகங்களை வளர்ப்பதில் இவற்றின் பங்களிப்பு கணிசமாக இருக்கிறது. யாழ் மாவட்டத்தில் விவகாரத்துக் கோருபவர்களில் 90 வீதமானவர்கள் இளம் தம்பதிகள் என்பது சட்டத்தரணி ரெமீடியசின் கருத்து.

நிச்சயிக்கப்படும் திருமணங்கள் மற்றும் காதல் திருமணங்கள் என இருவகையான திருமணங்கள் நடைபெற்றாலும் திருமண முறிவுக்கு பல்வேறு காரணிகள் பங்களிப்புச் செய்கின்றமையை மறுக்க முடியாது. புரிந்துணர்வு இன்மை,சமூக பொருளாதார நிலைமைகள்,யுத்தத்துக்குப் பின்னர் வடக்கு எதிர்கொள்ளும் சமூக மாற்றம் என்பனவும் இந்த விவாகரத்துக்களுக்குக் காரணமாகின்றன.

விவாகரத்துக் கோருபவர்களில் 20 வயது முதல் 30 வயது வரையான இளம் தம்பதியினரே அதிகமாக இருக்கின்றனர். சமூகவலைத்தளங்களால் ஆட்கொள்ளப்பட்டுள்ள இனமாக மனித இனம் மாறியுள்ள சூழ்நிலையில்,வாழ்க்கை முறிவுகளுக்கும் இது காரணியாகிறது.

நவீன தொழில்நுட்பத்துக்கு அடிமைப்பட்டிருப்பதால் கணவன் மனைவியிடையே சந்தேகங்கள் அதிகரிக்கின்றன. இரகசியமாக கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவது,முகப்புத்தகத்தில் தெரியாத நபர்களுடன் நட்புக்களைப் பேணுவது,வட்ஸ்அப் மற்றும் வைபர் போன்ற செயலிகளில் தேவையற்ற நபர்களுடன் அரட்டைகளை அடிப்பது போன்றவற்றைக் கூறலாம். நவீன தொழில்நுட்பத்தின் பாதிப்புக்கள் இப்படியாக இருக்க,அதிகளவான போதைப்பொருள் பாவனை, மதுப்பாவனை என்பன மற்றுமொரு பிரதான காரணியாகும்.

இளம் தம்பதியினர் மத்தியில் உள்ள பாரிய குற்றச்சாட்டு,தனது கணவன் வேறொரு பெண்ணுடன் ‘தவறான தொடர்பு’வைத்திருக்கின்றார். அதனால் என்னால் அவரோடு வாழ முடியாது”என்பதாகும்.

இல்லத்து வன்முறைகள் உச்சக்கட்டத்திற்கு செல்லும் போது,வன்முறைகளை தாங்க முடியாமல் மனைவிமார் தனது குடும்பம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தினைக் கருதியே விவகாரத்து முடிவினை எடுக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள்.

வெளிநாடுகளில் விலைமாதுகளுடன் இருந்து விட்டு, இங்கு யாழ்ப்பாணத்தில் உள்ள பெண்களை திருமணம் செய்து மோசமான நிலமைகளை ஏற்படுத்தும் புலம்பெயர் இளைஞர்களும் இங்கு ஒரு காரணமாக உள்ளதாக சட்டத்தரணிகள் குறிப்பிடுகின்றார்கள்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர்,யாழ்ப்பாண மாவட்டத்தில் கலாசாரம், பண்பாடு,சீரழிந்து செல்கின்ற நிலைமையில்,விவகாரத்தும் அடுத்தபடியான பேசுபொருளாக மாறியுள்ளது.

தவறுதலாக கையடக்கத் தொலைபேசிக்கு வரும் குறுந்தகவல்கள் ஊடாக ஒருஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உறவு ஏற்படுகின்றது. அதைவிட சமூகவலைத்தளங்கள் ஊடாகவும் தொடர்புகள் உருவாக்கி இனம் மதம் மொழிகள் கடந்த ஒரு ஈர்ப்பு மற்றும் அநாவசிய தொடர்புகள் மூலம் பல பெண்கள் சீரழிக்கப்படுகின்றார்கள்.

‘கடந்த 20 வருடங்களுக்கு முற்பட்ட திருமணங்களை எடுத்துப் பார்த்தால், விவாகரத்துகள் மிக அரிதானவை.’

இன்றைய சமூதாயத்தின் மத்தியில் முறையற்ற காதல்,முறையற்ற வாழ்க்கை முறைமைகள் இறுதியில் விவாகரத்தில் முடிகின்றது.

இன்றைய சூழ்நிலையில்,கணவன் மனைவி,மனம் திறந்துபேசுவதில்லை. தொலைக்காட்சி மற்றும் வேறுவிதமான பொழுதுபோக்குகள் காரணமாக மனம் விட்டுப் பேசும் தன்மை அற்றுக் காணப்படுகின்றது. குடும்பப்பற்று அற்ற நிலைமை உள்ளவராக இருந்தால்,அங்கு பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பில்லை. கணவன் குடும்பப்பற்றுள்ளவராகவும், மனைவி குடும்பபற்றில்லாதவராகவும் இருந்தாலும்,அங்கு பிரச்சினைகள் உருவாகின்றன.

அடிப்படையில் கணவன்_ மனைவிக்குள் பிரச்சினை ஏற்படுவதற்கு காரணம் திருமணத்தின் மதிப்புத் தெரியாமை.

படித்த சமூகத்தினரிடமும் திருமணத்தின் மதிப்பு குறைவடைந்துள்ளது.பாமர மக்கள் மற்றும் கிராம மக்கள் மத்தியிலும் திருமணத்தின் மதிப்பு குறைவடைந்துள்ளது.

தற்போதைய இளம் சமூதாயத்தினரிடம் குடும்பத்தின் பெறுமதியும்,தமது பிள்ளைகளின் பெறுமதியும் தெரியாத நி​ைலமையும் காணப்படுகின்றது.

விவாகரத்திற்கு அடிப்படையாக தொழில்நுட்பம் மற்றும் சமூகவலைத்தளங்கள் விளங்குகின்றன. நாம் சமூகவலைத்தளங்களை எவ்வாறு பயன்படுத்துகின்றோமோ என்ற கோணத்தில் எமது வாழ்க்கைப் பாதைநிர்ணயிக்கப்படுகின்றது.

எமதுசமூகக் கட்டமைப்பில்,ஆண்களைவிடபெண்கள் வறம்புமீறிச் சென்றுசமூகக் சீரழிவிற்கும்,குடும்பச் சீரழிவிற்கும் தள்ளப்படுகின்றார்கள்.அங்கு பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக எழுகின்றது.

பிள்ளைகளின் எதிர்காலம்,குடும்ப சூழ்நிலைகளைக் கருதியும்,வாழ்க்கையின் பெறுமதிகளை உணர்ந்தும்,விவாகரத்துக் கோரி நிற்கும் தம்பதிகளுக்கு நீதிபதிகள் கூட குடும்பத்தின் பெறுமதியை உணர்த்தி, இருவரையும் சேர்ந்து வாழ வைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுப்பார்கள். அதை பல வழக்குகளில் கண்டிருக்கின்றோம் என்றார் சட்டத்தரணி ரெமிடியஸ்.

சில வழக்குகளின் போது நீதிபதிகள் விவாகரத்து வழங்க விரும்ப மாட்டார்கள். இருவரையும் இணைந்து வாழக் கூடிய அளவிற்கு ஆலோசனைகளையும்,காலஅவகாசத்தினையும் வழங்குவார்கள்.

விவாகரத்து கோரும் கணவன்_ மனைவி இணைந்து வாழப் போகின்றோம் என நீதிபதிகள் முன்னிலையில் தெரிவிக்கும் போது, அந்த சமயத்தில் நீதிபதிகளுக்கு ஏற்படும் சந்தோசத்தினை விபரிக்க முடியாது. இவ்வாறான சில சம்பவங்கள் யாழ்ப்பாண நீதிமன்றங்களில் இடம்பெற்றுள்ளன.

கணவன், மனைவி தமக்காக வாழ்வதை விட தமது பிள்ளைகளுக்காக வாழ வேண்டுமென்ற மனநிலை வர வேண்டும்.

இன்றைய சூழ்நிலையில்,பழக்கவழக்கங்கள் சீதனம் மற்றும் சாதிப் பிரச்சினைகளுக்காக விவாகரத்துக் கோருவது மிகவும் குறைவடைந்துள்ளன.

சமூகவலைத்தளங்களினால் ஏற்படும் பிரச்சினைகளை நாமே புரிந்து கொண்டு,அவற்றில் இருந்து எம்மை விடுவிக்க முயற்சிகள் எடுக்க வேண்டும்.

போதைப்பொருள்களை இல்லாதொழித்தாலும் பல குடும்ப வன்முறைகள்,கணவன் மனைவிகளுக்குள் ஏற்படும் தவறான தொடர்புகளை தவிர்த்துக் கொண்டால்,விவாகரத்து வழக்குகளும் குறைவடையும்.

பிரதேச செயலக பிரிவுகளிலும்,குடும்ப ஆலோசனைகள்,சிறுவர்,பெண்களுக்கான ஆ​ேலாசனைகள் வழங்கப்படுகின்றன.

ஆரம்ப கட்ட வன்முறைகள் மற்றும் மனஅழுத்தங்கள்,குடும்ப வன்முறைகளின் போது, பிரதேச செயலக மட்டத்தில் இருக்கும் ஆலோசகர்களிடம் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

நல்ல ஆரோக்கியமான சூழல் குடும்பத்தில் நிலவினால்,வன்முறைச் சூழல் உருவாகாமல் தடுக்கலாம். கணவன்_ மனைவி இருவரும் மனம் விட்டுப் பேசி,வாழ்க்கையின் பெறுமதியையும் குடும்பத்தின் பெறுமதியையும் உணர்ந்து கொண்டால், விவாகரத்து கோரி நீதிமன்றங்களை நாடுவதை இல்லாதொழிக்க முடியும்.விவாகரத்தைப் பெறும் சந்தர்ப்பங்களும் இல்லாமல் போய் விடும்.

சுமித்தி தங்கராசா
யாழ்ப்பாணம்

Leave a Reply