யாழ் மண்டைதீவில்,கடற்படை விஸ்தரிப்புக்காக,சுவீகரிக்கப்பட்ட காணிகளை மீட்பது அரசில்வாதிகளால் சாத்தியமா? இரண்டாம் இணைப்பு!

யாழ் மண்டைதீவில்,கடற்படை விஸ்தரிப்புக்காக,சுவீகரிக்கப்பட்ட காணிகளை மீட்பது அரசில்வாதிகளால் சாத்தியமா? இரண்டாம் இணைப்பு!

மண்டைதீவில் கடற்படையினரால் சுவீகரிக்கப்படவுள்ள பகுதிகளைப் பார்வையிட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள்

22.05.2018 அன்று மண்டைதீவுக்குச் சென்ற வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் விந்தன் கனகரட்ணம் மற்றும் கஜதீபன் ஆகியோர் அங்கே ஜே 07 கிராம அலுவலகர் அலுவலகத்தில் போடப்பட்டருந்த மண்டைதீவில் கடற்படையினரால் சுவீகரிக்கப்படவுள்ள காணி உரிமையாளர்களின் பெயர்பட்டியல்களைப் பார்வையிட்டதுடன், கிராம அலுவலகர், சம்பந்தப்பட்ட மக்கள் மற்றும் பொதுமக்களைச் சந்தித்து உரையாடியுள்ளனர்.

1990ஆம் ஆண்டு மண்டைதீவை இராணுவம் ஆக்கிரமித்த காலப்பகுதியில் இப் பகுதியில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட பெரிய பெரிய வீடுகளையும், நல்ல தண்ணீர் கிணறுகளையும் கொண்ட தமது குடியிருப்புக்களை விட்டு மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 9 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் இப்பகுதியில் குடியமர மக்கள் அனுமதிக்கப்படவில்லை. 29க்கும் மேற்பட்ட குடியிருப்புக் காணிகளையும் இன்னும் வளம் நிறைந்த வயல் காணிகளையும் தோட்ட நிலைங்களையும் கொண்ட 18 ஏக்கரைக் கொண்ட இப் பகுதியே மண்டைதீவில் நல்ல தண்ணீரைக் கொண்ட பகுதியுமாகும். இங்கே மண்கும்பானில் இருந்து குழாய் வழியாக வரும் குடிநீருக்காக மக்கள் வரிசையில் காத்துக்கிடக்கின்றார். இப்பகுதி விடுவிக்கப்பட்டால் மண்டைதீவு மக்களின் மிகப் பாரிய பிரச்சினையான குடிநீர் பிரச்சினை நிறைவுக்கு வந்துவிடும்.
அதுமட்டுமல்லாமல் சோழகக் காற்றுக் காலங்களில் மண்டைதீவின் ஒதுக்குப் பகுதியாகவுள்ள கடற்படையினரின் வேலுசுமண கடற்படை முகாம் அமைந்துள்ள இந்த கடற்பகுதியிலேயே மீனவர்கள் தமது பெரிய படகுகளை நங்கூரமிட்டு வைப்பார்கள். எவ்வளவு பெரிய காற்று வீசினாலும் அவர்களுக்கு எந்தக் கவலையும் இருந்ததில்லை. படகுகள் பாதுகாப்பாகவே இருக்கும். ஆனால் இப்பொழுது கொஞ்சம் காற்று வேகமாக வீசினாலும் கூட எந்த இரவிலும் எழுந்து கடற்கரைக்கு ஓடி தமது படகுகள் பாதுகாப்பாக உள்ளதா எனப் பார்க்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

தமது சொந்த நிலங்களில் கடற்படையினர் சுகமாக வாழ இம்,மக்கள் யாழ் நகரில் வாடகை வீடுகளிலும், சொந்த ஊரில் இன்னொருவரின் காணியில் ஓலைக்குடிசைகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். 
இந்த நிலையில் மண்டைதீவுப் பகுதியில் ஒரு அங்குல நிலத்தினைக் கூட கடற்படையினருக்கு விட்டுக்கொடுப்பதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். எமது மக்களின் வாழிடங்களை விட்டு கடற்படையினர் நிரந்தரமாக வெளியேற வேண்டும். அவர்கள் தங்களது சொந்த வீட்டில், சொந்த நிலத்தில் சுதந்திரமாக வாழவேண்டும். அதற்காக நாம் மக்களோடு இணைந்து நிலங்களை மீட்பதற்காகப் போராடுவோம்.

யாழ் மண்டைதீவு கிழக்குப்பகுதியில்,29 விவசாயிகளின் விவசாய நிலங்கள்,அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மண்டைதீவில் பிரசித்திபெற்ற,வேப்பந்திடல் முத்துமாரி அம்மன் ஆலயத்திலிருந்து  சில நூறுமீற்றர் தூரத்திலிருந்து குறிப்பிடப்பட்டுள்ள விவசாயநிலங்களின் எல்லை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

மண்டைதீவில் அமைந்துள்ள  இலங்கை கடற்படையினரின் வெலுசுமன  முகாமை விஸ்தரிப்பதற்காகவே -இந்த விவசாய நிலங்கள் சுவீகரிக்கப்பட்டுள்ளதாக கீழே இணைக்கப்பட்டுள்ள பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடற்படையால்  சுவீகரிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு நஸ்டஈடு வழங்கப்படுமா?என்ற விபரங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.

Leave a Reply