கச்சதீவு புனித அந்தோனியாரின் வருடாந்த திருவிழா இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பம்-விபரங்கள் இணைப்பு!

கச்சதீவு புனித அந்தோனியாரின் வருடாந்த திருவிழா இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பம்-விபரங்கள் இணைப்பு!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று ஆரம்பமாவதுடன் இந்த வருடம் கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல திருவிழாவில் யாழ். மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை மற்றும் காலி மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு றேமன் விக்கிரமசிங்க ஆண்டகையும் இணைந்து கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கவுள்ளனர்.

வழமை போல் யாழ் மறைமாவட்டத்திலிருந்தும் இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்தும் இலங்கையின் தென்பகுதியிலிருந்தும் ஏறக்குறைய 10ஆயிரம் யாத்திரிகர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் .

திருவிழா இன்றும் நாளையும் நடைபெறவுள்ளதுடன்.யாழ்மாவட்ட அரசாங்க அதிபரும் கடற்படையினரும் இணைந்து பக்கதர்களுக்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் இம்முறை இந்தியாவிலிருந்து இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்களும் இலங்கையிலிருந்து சுமார் 8 ஆயிரம் பக்தர்களும் திருவிழாவில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் இராணுவப்பேச்சாளர் தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாணத்தில் இருந்து குறிக்கட்டுவான் வரையான பேருந்து சேவை அதிகாலை 4 மணியிலிருந்து நண்பகல் ஒரு மணிவரை இடம்பெறவுள்ளது..

அதே போன்று குறிகட்டுவானில் இருந்து கச்சதீவு வரை காலை 5 மணி முதல் 2 மணி வரை படகுச்சேவை நடைபெறவுள்ளதுடன் படகுக்கான ஒருவழி கட்டணமாக 300 ரூபா அறவிடப்படவுள்ளதாகவும் நெடுந்தீவில் இருந்து கச்சத்தீவுக்கு ஒரு வழிக் கட்டணமாக 225 ரூபா அறவிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சேவையில் ஈடுபடும் படகுகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே சேவைக்கு அனுமதிக்கப்படவுள்ளன. அதேவேளை, இம்முறை பொலிஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் 200 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

திருவிழா தொடர்பில் யாழ்.மறை மாவட்ட குருமுதல்வர் தெரிவிக்கையில் ஒவ்வொரு வருடமும் ஞாயிற்றுக் கிழமைகளில் கச்சத்தீவு திருவிழா கொண்டாடப்பட்டு வந்தாலும் இந்த வருடத்திலிருந்து சனிக்கிழமைகளில் புனித அந்தோனியாரின் திருவிழா கொண்டாடப்படவிருக்கின்றது.

தவக்காலத்தில் வருகின்ற ஞாயிறு தினங்களுக்கு முன்னுரிமைகொடுக்கவேண்டும் என்பதற்காக இந்தவருடத்திலிருந்து இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சனிக்கிழமை இவ்வாண்டுக்கான திருவிழா கொண்டாடப்படவுள்ளது. அதற்கு முன் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை திருச்சிலுவை பாதை, நற்கருணை ஆராதனை போன்ற வழிபாடுகள் நடைபெறவுள்ளன.

இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் பெருமளவிலான குருக்கள் துறவிகள் அருட்சகோதரிகள் இந்த திருவிழாவில் கலந்துகொள்ளவுள்ளனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply