தீவகம் வேலணையில்,சமூக அக்கறையுள்ள இளைஞர்கள் ஒன்றிணைந்து “விடிவெள்ளி” என்னும் அமைப்பினை உருவாக்கி அதனூடாக,ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் நல்ல பல சேவைகளை செய்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, நேற்றைய தினம் வேலணை மத்திய கல்லூரியில் கல்விபயிலும் வறுமைகோட்டிற்குட்பட்ட முப்பது மாணவ, மாணவிகளுக்கு புத்தகப்பைகள் வழங்கி வைக்கப்பட்டன.அத்தோடு வேலணையில் வறுமையில் வாடும் பத்துக் குடும்பங்களுக்கு நிதி உதவி செய்யப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
அண்மையில் அல்லையூர் இணையத்தினால்,கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு 150 குடைகள் வழங்கி வைக்கப்பட்டன-அதில் 50 குடைகளை, விடிவெள்ளி அமைப்பினரே எம்மிடம் வழங்கியிருந்தனர்.
அண்மையில் சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில்,இடம்பெற்ற நினைவேந்தலின் போது 200 தென்னங்கன்றுகளை வழங்கியிருந்தனர் விடிவெள்ளி அமைப்பினர். தொடர்ந்து வேலணைப் பகுதியில்,பற்றைகளால் சூழப்பட்டுள்ள வீதிகளை (பற்றைகளை வெட்டி அகற்றி) சீர்செய்யும் பணியினையும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
விடிவெள்ளி அமைப்பினரின் செயல்பாடுகள் வேலணைக்குள் மட்டும் நின்றுவிடாமல், பின்தங்கிய தீவகத்தின் ஏனைய பகுதிகளுக்கும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று பணிவாக கேட்டுக் கொண்டு பாராட்டி உற்சாகப்படுத்துகின்றோம்.